தினகரனை எதிர்த்து திமுக - அதிமுக வியூகம்...

விகடகவியார் உள்ளே நுழையும்போது யாரிடமோ செல்பேசியில் பேசியபடியே வந்தார்... பேசி முடித்ததும்.. “நீர் கருத்துக்கணிப்பு எல்லாம் எடுக்கவில்லையா?” என்று கேட்டார்... நாம் அதற்கு “இல்லை. ஆனால் வருகிற கருத்துக்கணிப்பு எல்லாம் தற்போது திமுகவுக்கு சாதகமாக இருப்பதுபோல் தெரிகிறதே” என்றோம்.
“ஆமாம். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், உஷாராக ‘கருத்துக்கணிப்பை நம்பி மெத்தனமாக இருந்து விட வேண்டாம்... ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். கூடவே ‘தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சிலர், தேர்தல் களத்தில் சரியாக வேலை செய்யவில்லை என்ற விவரமும் எனக்கு தெரியும்’ என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறார்” என்று விகடகவியார் சொன்னதும்... “ சரி, கருத்து கணிப்புப் பற்றி உமது கருத்தை சொல்லும்” என்று கேட்டோம்....
அதற்கு அவர்... “எனக்கு என்று எந்தக் கருத்தும் கிடையாது, மக்கள் கருத்துதான் என் கருத்து. ஸ்டாலின் தற்சமயம் உஷாராக தேர்தல் வேலை பார்த்து வருகிறார் என்பது மட்டும் உண்மை. முதலமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஏற்ப, அவர் வியூகங்கள் அமைத்து வருகிறார். அந்த தொகுதிகளில் அவர் தனி கவனம் செலுத்தி வருகிறார் என்பது மட்டும் உண்மை. குறிப்பாக எடப்பாடியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார், பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்பு உள்ளவரல்ல... எனவே, தேர்தல் செலவு முழுவதையும் செல்வகணபதியை பார்த்துக்கொள்ளச் சொல்லி இருக்கிறார். இது தவிர, செல்வ கணபதிக்கு தேர்தல் சூட்சுமங்கள் நன்கு தெரியும், அதில் அவர் கைதேர்ந்தவர். அதனால்தான் பாராளுமன்றத் தேர்தலில் வாழப்பாடியை செல்வகணபதி தோற்கடித்தார். எனவே ‘எடப்பாடியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு’ என்று ஸ்டாலின் செல்வகணபதியிடம் வற்புறுத்தி கேட்டிருக்கிறார்” என்றார் விகடகவியார்.

“இதெல்லாம் நடக்குமா” என்று நாம் கேட்கவும்... “அரசியலில் எல்லாமே நடக்கும், எல்லாமே நடக்காமலும் போகும், அதுதான் அரசியல். ஜெயலலிதாவே தோற்றார், அண்ணா தோற்றார், காமராஜர் தோற்றார், ஸ்டாலின் கூட தோற்றிருக்கிறார்” என்றார் விகடகவியார்.
“சரி அதிமுக தேர்தல் செய்திகளை சொல்லும்” என்றோம்...
“சில அமைச்சர்கள்... ‘பாரதிய ஜனதாவை நம்மோடு கூட்டணியில் வைத்துக்கொண்டது மிகப் பெரிய தவறு. நாம் 40 தொகுதிகள் வெற்றி பெற்றால், அதுவே பெரிய சாதனை’ என்று சொல்கிறார்கள். பல தொகுதிகளில், அதிமுக வேட்பாளரின் பிரச்சார வேனில் மோடி படம் இல்லை. அப்படியே இருந்தாலும் கண்ணுக்குத் தெரியாதபடி சிறுசாக இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டு தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன், எடப்பாடியிடம் பிரதமர் பெயரை இப்படி இருட்டடிப்பு செய்யலாமா என்று கேட்டிருக்கிறார்... அதற்கு எடப்பாடி மழுப்பலாக பதில் சொல்லி சமாளித்திருக்கிறார்.”

இது போதாதென்று... ஓபிஎஸ் ஆரம்பத்தில் பிரச்சாரம் செய்த இடங்களில், எடப்பாடி பற்றியோ முதலமைச்சரின் சாதனைகளைப் பற்றியோ பேசவில்லை. அது பற்றி புகார் வந்ததும்... சில மூத்த தலைவர்கள், ‘கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நீங்கள்... நீங்களே இந்தத் தவறை செய்யலாமா?’ என்று கேட்டதும்... எடப்பாடியின் சாதனைகளைப் பற்றி பேசினார் ஓபிஎஸ். எடப்பாடி தொகுதியிலும் போய், எடப்பாடியை வானளவு புகழ்ந்து பாராட்டி பேசினார். அதே சமயம், ஒரு சில பத்திரிகைகளுக்கு ஓபிஎஸ் பேட்டி தரும்போது, சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று கருத்து சொல்லியிருக்கிறார். அது பற்றி எடப்பாடியிடம் ஓபிஎஸ் கேட்டார். எடப்பாடி ‘எதுவாக இருந்தாலும், தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று அந்தப் பிரச்சனைக்கு அப்படியே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்” என்றார் விகடகவியார்.

திமுக செய்தி பற்றி உம்மிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு முக்கிய செய்தியை சொல்ல மறந்தேன் என்ற விகடகவியார்.. “கரூர் சின்னசாமி, முன்னாள் அதிமுககாரர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக திமுகவில் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜி வருவதற்கு முன், கரூர் திமுகவில் இவர்தான் முக்கிய புள்ளியாக இருந்தார், விவசாய அணி செயலாளர் கூட. செந்தில் பாலாஜி வந்ததும், இவர் கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்டார். இவர் போட்டியிட வாய்ப்பு கேட்டு, நேர்காணலில் கலந்து கொண்டபோது... ஸ்டாலினிடம், ‘செந்தில்பாலாஜி சிபாரிசு செய்துதான் சீட் பெற வேண்டுமென்றால், அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு தேவையில்லை’ என்று நேருக்கு நேர் சொன்னார். அதோடு, ‘செந்தில் பாலாஜி உங்க விசுவாசி எல்லாம் இல்லை.. அவருடைய விசுவாசமே வேறு. இதை சீக்கிரம் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்’ என்று சொல்லிவிட்டு வந்தார். சென்ற வாரம் அதிமுகவில் சேர்வதாக விளம்பரம் செய்து கரூர் சின்னசாமி எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவும் அவரை கட்சியை விட்டு நீக்கியதாக அறிவித்தது” என்றார் விகடகவியார்.
“சரி கூட்டணி கட்சிகள் விஷயத்துக்கு வாரும்” என்று சொன்னோம்...

அதற்கு... “பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் காடுவெட்டி குருவின் வாரிசுகளை திமுக பிரச்சாரம் செய்ய இறக்கி விட்டிருக்கிறது. இது பாமகவிற்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்பதும் உண்மை. இது தவிர... வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சிஎன் ராமமூர்த்தி. ராமதாசையும் அன்புமணியும் கடுமையாக விமர்சிக்க இவரையும் பயன்படுத்துகிறது திமுக. இதெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றியை சற்று பாதிக்கத்தான் செய்யும் போல் இருக்கிறது என்று அதிமுகவே யோசிக்க தொடங்கிவிட்டது.”
சரி. “தேமுதிக பற்றி எந்தச் செய்தியும் இல்லையா?” என்று கேட்டோம்...

அதெல்லாம் தமாஷ் செய்தி, பரவாயில்லையா என்று விகடகவியார் சொல்லிவிட்டு... “தேமுதிக வேட்பாளர் சுதீஷ், பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவருடன் இருந்ததால், பிரேமலதா விஜயகாந்த்தை பரிசோதனைக்கு உட்கொள்ள மருத்துவர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால், சிறு குழந்தை போல் நான் அப்படியெல்லாம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தார். பிறகு அவரை வற்புறுத்தி, பரிசோதனை செய்யப்பட்டு.. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.”
இது தவிர... “தேமுதிக, தோழமைக் கட்சியான தினகரன் கட்சி தொகுதிகளில் தேர்தல் வேலை செய்வதில்லை. எல்லாம் பிரேமலதா உத்தரவாம். இதைவிட காமெடி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேமுதிக கூட்டணியில்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளது. கூட்டணி வைத்துக்கொள்ள சொல்லி தினகரன் கெஞ்சினார், இருந்துவிட்டு போகட்டும் என்று நாங்கள் வைத்துக் கொண்டுள்ளோம் என்று சொல்லி வருகிறார். ஆனால், இதற்கு தினகரன் எந்த பதிலும் சொல்லவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்” என்றார் விகடகவியார்.
சரி... “தினகரன் பற்றி எந்த செய்தியும் சொல்லவில்லையே நீர்” என்று கேட்டோம்..

“தினகரன், கோவில்பட்டி பாதுகாப்பான தொகுதி என்று தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரை எதிர்த்து அதிமுகவில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டி போடுகிறார். திமுக இந்த தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக சீனிவாசன் போட்டியிடுகிறார். தினகரன், தொடர்ந்து ‘திமுக ஒரு தீய சக்தி அதை அகற்ற வேண்டும்’ என்று சொல்லி வருகிறார். எனவே ஸ்டாலின், கனிமொழியிடம் அந்த தொகுதியை நன்கு கவனித்து, தினகரன் எப்படியாவது அங்கு தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவே போட்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் முழு செலவையும் திமுக தான் பார்க்கிறது. திமுக தொண்டர்களிடம் கனிமொழி, ‘திமுக போட்டியிடுகிறது என்ற முனைப்போடு இங்கு வேலை செய்ய வேண்டும்’ என்று எல்லோரையும் உசுப்பி விட்டு வருகிறார். இதே சமயத்தில் எடப்பாடி, கடம்பூர் ராஜுவிடம் ‘தினகரன் கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கு உங்களுக்கு தேவையான எல்லா உதவியும் செய்யப்படும்’ என்று சொல்லி கோவில்பட்டி மீது தனி கவனம் செலுத்தி வருகிறார்” என்று சொல்லிவிட்டு விகடகவியார் ஜூட் விட்டார்.

Leave a comment
Upload