தொடர்கள்
தொடர்கள்
குறுந்தொகை துளிகள் - 13 - மரியா சிவானந்தம்

20210224190740342.jpg

மடலேறும் காதல்

காதல் மயக்கம் கொண்டவருக்கு கால மயக்கம் ஏற்படுவது இயற்கை போலும்.

“சொர்க்கம் விண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையின்
பாடிடும் கவிதை
சுகம் தான்”

“என் வீட்டில் இரவு, அங்கே இரவா
இல்ல பகலா, எனக்கும் மயக்கம்”
(புலமைப்பித்தன் )

இரவு பகலாகிற விந்தையும், பகல் இரவாகிற அதிசயமும் காதலில் நிதம் நிகழ்வது தான்.

காதலிக்கு இப்படி ஒரு குழப்பம் என்றால், காதலனோ

“என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா?

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
(பழனி பாரதி )

என்று உறுதியுடன் சொல்கிறான் .

காலையில் மலரும் காதல் நோய், இரவுப் பொழுதில் உக்கிரம் கொள்கிறது.

“காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான் செய்த தீமையும் யாதோ” என்று வருத்தம் கொள்ள வைக்கிறது

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.-குறள்:1225

இங்கே குறுந்தொகை காதலன் ஒருவன் “நான் மடலேறி விடுவேன்” என்று காதலியின் தோழியிடம் சூளுரைக்கிறான்.

சங்க காலத்தில் காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் கவனத்தைக் கவர நினைக்கும் காதலன் செய்யும் நாடகத்தனமான செயல் மடலேறுதல் அல்லது மடலூர்தல். பனை மடலில் குதிரையைச் செய்து அதன் மேல் ஏறிக்கொண்டு ஊர்வலம் வருவான் காதலன். அப்போது காதலியின் பெயரை உரத்தக்குரலில் கூவிக் கொண்டே வருவான். அதைக் கேட்கும் மக்கள் “அடடா, இந்தப் பெண் இவன் காதலை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?” என்று அங்கலாய்ப்பார்கள். காதலிக்கு இது பெரிய அவமானமான செயலாக இருக்கும். எனவே அக்கால காதலர்கள், காதலியை மடக்க, நெருக்கடி கொடுக்க. ‘மடலேறுதலை’ ஆயுதமாக வைத்தனர்.

காதலிக்காக காத்திருந்த போது தோழி வந்தால் காதலன் வேறு என்ன செய்ய முடியும்?

அவன் மனம் கசிந்து தோழியிடம் கூறுகிறான், “தோழி ,உன் தலைவி, காலை, பகல், மாலை, நள்ளிரவு ,விடியற்காலை என்று பொழுதுகளை இனம் காணும் உணர்வுள்ளவள் என்றால் அவள் காதல் உண்மையானது அல்ல. ஆனால், என் காதல் உண்மையானது. காதலியைப் பிரிந்திருக்கும் நான் அப்பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாமல் குதிரை என்று எண்ணி நான் மடலேறி வந்தால், அது தலைவி எனக்குத் தந்த துயரை எல்லோருக்கும் அறிவிப்பதாகி விடும். அப்போது ஏற்படும் பழி தலைவிக்கு துன்பம் தருவதாக இருக்கும். ஆனால் அவள் பிரிவைத் தாங்கிக் கொண்டு நான் உயிர் வாழ்ந்தால் அது எனக்கு பழியைத் தரக்கூடியதாக நான் நினைக்கிறேன்” என்றான்.

அள்ளுர் நன்முல்லையார் என்னும் சங்ககால பெண்கவி ஒரு ஆண்மகனின் உள்ளத்தை விவரிக்கும் குறுந்தொகை பாடல் இது...

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும்
விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற்
பொய்யே காமம்
மாவென மடலோடு
மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும்
பழியே
வாழ்தலும் பழியே
பிரிவுதலை வரினே.

(குறுந்தொகை -32 அள்ளுர் நன்முல்லையார்)

தொடரும்