
வங்க கடலை ஒட்டிய மணற்பாங்கான அமைதியான காட்டுப்பள்ளி கிராமம்… காசிக்கும் இராமஸ்வரத்திற்கும் சென்று தங்களது பித்துரு தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடியாவதவர்கள், இங்கு வீற்றிருக்கும் சிந்தாமணி ஈஸ்வரர் கோயிலுக்கு சென்று, நிவர்த்தி செய்துகொள்வது தலபுராணமாக உள்ளது.
பொன்னேரி சட்டமன்ற (தனி) தொகுதியில் அமைந்திருக்கும் காட்டுப்பள்ளி கிராமத்தினை சுற்றி நிறைய மீன்பிடி கிராமங்கள் உள்ளது. காட்டுப்பள்ளி கிராமத்தின் அருகில் பழவேற்காடு, ஆரம்பாக்கம், அதனை அடுத்து ஸ்ரீஹரிகோட்டா என்ற செயற்கைகோள் ஏவும் தளமும் உள்ளது.
சென்னையிலிருந்து ஸ்ரீஹரிகோட்டா வரைக்கும் நமது மீனவர்கள் ஆழ்கடல் வரை சென்று மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். சென்னையின் விளிம்பில் இருக்கும் கிராமம் தான் காட்டுப்பள்ளிகிராமம். அதனையொட்டியுள்ள மீனவ குப்பங்கள் மற்றும் விவசாய நிலங்களை நம்பி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

காட்டுப்பள்ளி கிராமத்தின் அருகே பழவேற்காடு பறவைகள் சரணலாயம் உள்ளது. வெளிநாட்டில் இருந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் வந்து தங்கி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறித்து செல்லும் கண்கொள்ளா காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வது வாடிக்கையாகும்.
காட்டுப்பள்ளி கிராமத்தில் விவசாயம் பிரதானமாக இருந்ததால், வெளி உலக மக்கள் இங்கு செல்வது அரிதாக இருந்தது. இங்கிருக்கும் மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வந்தனர்.
சில வருடங்களுக்கு முன்பு... எண்ணூர் துறைமுகம் அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் புதிய துறைமுகம் அமைக்கப்பட்டது. ‘காட்டுப்பள்ளியில் துறைமுகம் அமைக்கும் போது, கடலின் நீர்வரத்து வேகத்தில் மாற்றம் ஏற்பட்டு, அருகில் இருக்கும் பழவேற்காடு ஏரி மற்றும் உப்பங்கழியே வரும் காலத்தில் இல்லாமல் கடல்நீர் உள்புகுந்து பெரிய நாசம் விளைவிக்கும். இதனால் மீன்பிடி தொழில் நசிந்துவிடும்’ என்று புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையையும் மீறி காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் காட்டுப்பள்ளி கிராமத்தில் 330 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு துறைமுகம் அமைக்கபட்டது. காட்டுப்பள்ளி துறைமுகத்தினை எல் அண்ட் டி நிறுவனம் கட்டி தந்து, சிலகாலம் துறைமுகத்தினை பராமரித்தது. அதன்பின் சுற்றுசூழல் துறை அனுமதி அளித்ததன் பேரில், காட்டுபள்ளி துறைமுகப் பகுதியில் கப்பல் சரக்கு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
காட்டுப்பள்ளி துறைமுகத்தினை பராமரிக்க எல் அண்ட் டி நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தம் அதானி குழமத்திற்கு கைமாறியது. காட்டுப்பள்ளி துறைமுகத்தினை 6111 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

இங்கு தான் பிரச்சனை ஆரம்பம் ஆனது… காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தினை மத்திய அரசு முன்மொழிந்த போது... இங்குள்ள மீனவ கிராமங்களும் அதனை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிர் செய்யும் கிராமத்தினர் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு ‘காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் வேண்டாம்... இதனால் இங்குள்ள கடல் சூழலியியல் பாதிப்பு ஏற்படும்’ என்று கடும் எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தனர்.
இதற்கிடையே, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தில், சிறிய படகு போக்குவரத்து முலம் கப்பலில் இருக்கும் சரக்குகளை இறக்குவது மற்றும் கப்பலில் பயணிக்கும் பயணிகள் செல்லும் பகுதியான போர்ட் (Port) விரிவாக்கத்திற்கு ரு. 4000 கோடியும், கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் போது ஏற்படும் புயல் சீற்றங்களில் இருந்து கப்பல்களை பாதுகாத்து நிறுத்த ஹார்பர் (Harbour) திட்டம், இத்துடன் கூடுதலாக துறைமுக தொழில்கள், தொழில்துறை பகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்த 20 ஆண்டுகளில் செயல்படுத்துவது என இத்திட்டத்திற்கு ரு. 53,400 கோடியும் ஒதுக்கி செயல்படுத்துவதென மாஸ்டர் ப்ளான் போடப்பட்டது.
காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்திற்கு, கடலிலிருந்து வண்டல் மண் தூர்வாரப்பட்டு, துறைமுக விரிவாக்க பகுதிகளுக்கு கொட்ட திட்டமிடப்பட்டுள்ளது. காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு... அரசின் புறம்போக்கு நிலங்கள், குளங்கள், கால்வாய்கள், உப்பு விளைவிக்கப்படும் தளங்கள் மற்றும் உப்பு மண் கலந்த சேரும் சகதியுமாக இருக்கும் நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, மீதி தனியார் நிலங்களும் அரசால் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு ஆர்ஜிதம் செய்யப்படும் ஈர நிலங்களில், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையும் பிரமாண்ட அளவில் உருவாக்க நிலப்பரப்புகள் சமன் செய்யப்பட்டு உற்பத்தி தொடங்கப்படும் என்ற விவரம் வெளியானது.
பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில், குருட் ஆயிலை மைனஸ் 163 C அளவிற்கு கடல்நீரை தொழிற்சாலைக்குள் உறிஞ்சி, அதன்பின் இயற்கை எரிவாயுவை மறுசீரமைப்பு செய்யும் தொழில்நுட்ப முறையும், இங்கு செயல்படுத்தப்படும். நவீன டெக்னாலஜி முலம், பெட்ரோலிய பொருட்களை பிரித்து, பின்பு பணி முடிந்ததும் மீண்டும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கடல் நீரை சாதாரண சீதோஷ்ண நிலைக்கு மாற்றி, கடலில் கலக்கச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி வெளியாகும் கடல்நீரில், மிகுந்த பெட்ரோலிய கழிவுகள் கடல் நீரில் கலப்பதால்... மீன்வளமும் கடல்வளமும் முற்றிலுமாக பெரும் அளவில் மாசுபடும். இதனால் கடலுக்கு நாசம் ஏற்படும் என்று மீனவர்கள் அஞ்சுகின்றனர்.
காட்டுப்பள்ளி துறைமுகத்தினை விரிவாக்கம் செய்யும் போது, கடலிலிருந்து நிலப்பகுதியை நோக்கி பேக் வாட்டர்ஸ் வரும்படியான அமைப்பை சுமார் 12.1 கிலோமீட்டர் தூரத்திற்கு உருவாக்குகிறார்கள். இந்த பேக் வாட்டர்ஸை பல்வேறு திட்டங்களுக்கு அதானி குழமம் பயன்படுத்தும் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
துறைமுக விரிவாக்கப் பணிக்காக கையகபடுத்தும் 2000 ஏக்கர் நிலங்களில் மண் கொட்டி நிரப்பப்படும், மிகுதி 2000 ஏக்கர் ஈர நிலங்கள் தாழ்வான பகுதிகளில் மணல் கொட்டி நிரப்பப்படும். கடலிலிருந்து வரும் பேக் வாட்டரின் பாதையை சரிபடுத்த, கடலில் பாறைகள் அமைப்புகள் ஏற்படுத்த, பெயர் வெளியிடப்படாத குவாரிகளிலிருந்து பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு, துறைமுக விரிவாக்க பணிக்கு பயன்படுத்தப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

காட்டுப்பள்ளி துறைமுகத்தை, அதானி குழுமம் தற்போது இருக்கும் துறைமுக பரப்பை விட 20 மடங்கு அதிகம் விரிவாக்கம் செய்ய இருக்கிறது. துறைமுக விரிவாக்கத்திற்கு ஆர்ஜிதம் செய்யப்படும் 3000 ஏக்கர் நிலங்கள் அரசின் கைப்பற்றியுள்ள நீர்நிலை நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடல் பரப்பளவில் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் மணலையும் கொட்டி நிலப்பரப்பாக ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டுருவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆழ்கடல் பகுதி மணல் கொட்டி மேடாக்கும் மெகா திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆய்வுகளை தயாரித்து, பொதுமக்கள் பார்வைக்கு வழங்கியுள்ளது. அதன்படி 330 ஏக்கர் தற்போது அமைந்து செயல்படும் காட்டுப்பள்ளி துறைமுகம், சுமார் 6111 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும் என தெளிவாகியுள்ளது.
துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில்... 82 கிராமங்கள், 10 லட்சத்துக்கு அதிகமான மீனவர்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மீனவர்கள் மற்றும் விவசாயகளும் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக, எதிர்ப்புகளையும் தங்கள் கண்டனக் குரல்களையும் பல்வேறு சமுக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தினால், இங்கு உள்ள மீனவ மக்கள் மற்றும் பல்வேறு சமுதாயத்தினர் 1500 பேருக்கு நேரடியாகவும், 4000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அதானி குழுமம் தரப்பில் சொல்லப்பட்டது. லட்சக்கணக்கான மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதரத்தினை இழந்த பின், வெறும் சொற்ப அளவில் அதானி துறைமுகத்தில் வேலை கிடைத்து என்ன செய்வது என்பதே இங்குள்ள மக்களின் உள்ள குமுறலாக உள்ளது.
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால், அருகிலிருக்கும் மீஞ்சூர் மற்றும் பழவேற்காடு, திருப்பாலைவனம் வரை முற்றிலும் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் அருகில் இருக்கும் கிராமங்களில் புகுந்து சேதப்படுத்திவிடும். ஏற்கனவே குடிநீர் உப்பு நீராக மாறிவரும் இப்பகுதியில், பூமியில் மேலும் கடல்நீர் புகுந்து விடும் அபாயம் ஏறபடும் என்று பெரும்பாலான மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் மூன்று துறைமுகங்கள் அருகருகே செயல்படுகிறது. இந்த மூன்று துறைமுகங்களிலும் 45 சதவீத போக்குவரத்து மட்டும் நடைபெற்று அரசிற்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக புள்ளிவிவர தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசின் மூன்று துறைமுகங்களும் லாபம் ஈட்ட முடியாத நிலையில்... காட்டுப்பள்ளி துறைமுகத்தை இவ்வளவு அவசரமாக ஏன் தனியாரான அதானிக்கு தாரை வார்த்துக் கொடுக்க மத்திய அரசு துடிக்கிறது என்று தெரியவில்லை என இங்குள்ள மீனவ மக்களும் பல்வேறு கிராம பகுதியினரும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை துறைமுக உருவாக்கத்தின் போது, அதன் அருகில் இருக்கும் பழவேற்காடு கடல் பகுதி வரை கடல் அரிப்பு ஏற்பட்டது என்ற விவரம் அரசுக்கு தெரிந்திருந்தும், எண்ணூர் துறைமுகத்தை அரசு கொண்டு வந்தது. இதன் காரணமாக இன்று வரை பழவேற்காட்டில் கடல் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்கப்பட்ட போது, அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை ஓரங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டது. காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு, எட்டு கிலோமீட்டர் தூரம் கடல் நிலப்பரப்பை மாற்ற திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் அருகில் இருக்கும் பழவேற்காடு மற்றும் சுற்றியுள்ள மீனவ கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். பழவேற்காட்டில் கடலும், தற்போது வெவ்வேறாக இருக்கும் ஏரியும் வரும் சில ஆண்டுகளில் ஒன்றாக சேர்ந்து விடும். காட்டுப்பள்ளியில், அதானி குழுமம் மேற்கொள்ளும் துறைமுக விரிவாக்கத்தால், அருகிலிருக்கும் பழவேற்காட்டில் நிலச் சூழலியல் பாதிக்கப்படும் என ஒட்டுமொத்த மீனவ கிராமங்கள் அஞ்சி நடுங்கி கொண்டிருக்கிறது.
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்யும் பகுதியின் அருகிலிருந்து, ஒன்றரை கிலோ மீட்டரில் தமிழ்நாடு அரசின் வனத்துறை ஆரம்பமாகிறது. இதனால் நெடுங்காலமாக அரசு பரமாரித்து வரும் காடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால் புயல் மற்றும் சுனாமி நேரத்தில், கடல்நீர் அருகிலிருக்கும் கிராமங்களுக்குள் உள்புகுந்து விடும் என்று மீனவர்கள் அஞ்சுகிறார்கள்.

துறைமுகத்தை ஒட்டியுள்ள பழவேற்காட்டில், தமிழ்நாட்டிலே கிடைக்காத முதல் தர கிளிஞ்சல்கள் கடற்கரை ஓரத்தில் கிடைக்கிறது. இந்த கிளிஞ்சல்கள் சுண்ணாம்பாக மாற்றப்படுகிறது. இந்த கிளிஞ்சல்களை நம்பி ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். காட்டுப்பள்ளி துறைமுகம் முதல் பழவேற்காட்டை சுற்றியுள்ள மீனவ மக்கள், கிளிஞ்சல்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழில்களை நடத்தி வருகின்றனர்.
ஒரு தனிப்பட்ட தனியார் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய... ஒரு நகரையோ அல்லது ஒரு ஏரியையோ கடலை மணல் கொண்டு மேடாக்கி அழிப்பது என்பது இயற்கைக்கு மாறானது என்று இங்குள்ள மீனவ மக்கள் தேர்தல் பரப்புரை செய்ய வரும் வேட்பாளர்களிடம் தங்கள் கருத்தினை தெரிவிக்கின்றனர்.
பருவமழை காலங்களில், சுற்றுப்புறங்களில் உள்ள மழைநீர் அனைத்தும் பழவேற்காடு மற்றும் எண்ணூர், காட்டுப்பள்ளி பகுதியின் வழியாக கடலில் சென்று கலக்கும். தற்போது காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் செய்வதற்காக வெள்ளவடிகால் நீர்நிலைகள் அனைத்தையும் அடைத்து விட்டால், வரும் நாட்களில் பருவமமழையின் போது, வெள்ள நீர் வடிந்து கடலுக்கு செல்லாமல் மீண்டும் வெள்ள நீர் திசை திரும்பி, பல ஊர்களுக்குள் சீற்றத்துடன் சென்று, கபளீகரம் செய்து விடும் அபாயம் இருக்கிறது என்ற அச்சம் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் காணப்படுகிறது.
சென்ற வாரத்தில்… காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து 7.7 சதுர கிலோமீட்டரில் லோக்கல் மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு மீனவர்கள் பயன்படுத்தும் சிறிய படகுகள் இடையூறு செய்யாமல் இருக்க, படகுகளின் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்திருப்பதாக துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடல் என்பது குப்பை கொட்டும் தொட்டியும் அல்ல…. துறைமுக விரிவாக்கம் என்ற பெயரில் கடலில் மண்ணை கொட்டி நிரப்பி, கடல் நீரின் பாதையை மாற்றி அமைத்தால்... கடல் நீர் வேகம் இயற்கைக்கு மாறாக செயல்பட்டு, மனித இனத்திற்கு அழிவைத் தேடித்தரும். இயற்கையின் போக்கில் கை வைத்தால் கடல் பலமடங்கு நம்மைத் திருப்பி சுழற்றி அடிக்கும் அல்லது தாக்கும் என்று இயற்கை அமைப்பினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

1850 ஆண்டு வரை மெரினா கடற்கரை இருந்த இடத்திலே மெட்ராஸ் குப்பம் இருந்தது. 1850ம்ஆண்டுக்கு பிறகுதான், சென்னையில் மெரினா கடற்கரை அமைக்கப்பட்டது. கடலுக்கும் நிலத்துக்கும் இடையே தான் மெரினா கடற்கரை இருந்தது. சென்னை துறைமுகம் உருவாக்கத்திற்கு பின்புதான், நீண்ட மெரினா கடற்கரை உருவானதாக வரலாறு. மெரினா கடற்கரை உருவான பிறகு, சென்னை துறைமுகத்தின் வடக்குப் பக்கத்தில் எதிர்வினையாக இன்றுவரை கடல் அரிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சென்னைவாசிகளுக்கு நீண்ட மெரினா கடற்கரை கிடைத்தது என்று நாம் பெருமிதம் கொண்டாலும், அதன் வடக்கு பக்கத்தில் இரண்டு கிலோ மீட்டர் கடலுக்கு உள்ளே நீரால் சூழப்பட்டு விட்டது என்பதையும் சென்னைவாசிகள் மறந்திருக்க முடியாது என சூழலியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
காட்டுப்பள்ளி துறைமுகம் அமைத்த பின், அருகிலிருக்கும் கயலாஞ்சி என்ற கடற்கரை கிராமத்தில், கடல் உள்வாங்கி அரிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க மெகா பராஜக்ட் செயல்பட்டால், அருகில் இருக்கும் 161 மீனவ கிராமங்களும் கடல் நீர் ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, மீனவர் குப்பங்கள் மெல்ல மெல்ல கடலில் மூழ்கி விடும் என இயற்கை ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள்.
பழவேற்காடு ஏரியை நம்பி, மீன்பிடித் தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேலான மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இதனால் மீனவர் வாழ்வு முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால்….. காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு தமிழகத்திலுள்ள அதிமுக. - திமுக உட்பட அனைத்து கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத்தால் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறுகளிலிருந்து கடலில் கலக்கும் வெள்ள நீர், கடலில் கலக்கும் நிலையில் தடைஏற்படும் என்பதால்... சென்னை, திருவள்ளுர் மாவட்ட பகுதிகளில், நிலத்தடி நீரில் கடல் நீர் உள்புகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் வரும் காலங்களில், குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும் இயற்கை சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்தால், ஆண்டுக்கு 320 மில்லியன் டன் சரக்கை துறைமுகம் வழியாக போக்குவரத்து மூலம் வெளியேற்றலாம் என்ற விபரம் சொல்லப்பட்டுள்ளது. இதனால் எண்ணூர் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு சரக்கு செல்லாமல் மூன்று துறைமுகங்களும் மூடப்படும் அபாயம் உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
எண்ணூர் முதல் பழவேற்காடு வரை உள்ள பகுதியை, நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்றும், இயற்கைக்கு மாறாக கடலையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளையும் பயன்படுத்தக் கூடாது என்பதே இங்குள்ள மீனவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில், அதானி துறைமுக விரிவாக்கம் தொடர்பாக... மீஞ்சூர் பகுதியில் பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்து இருந்தார். பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து... நிகழ்ச்சி, தேதி குறிப்பிடப்படாமல் முழுவதுவமாக ரத்து செய்யப்பட்டது.
சில மீனவ கிராமங்கள் தங்கள் வாழ்வதாரம் முற்றிலும் பறிபோகும் நிலையில் இருப்பதால், தேர்தல் எதற்கு என்று முகம் கொடுத்து பேச மறுத்துவரும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது. தற்போது, பொன்னேரி எம்எல்ஏ பலராமன் மீண்டும் சட்டமன்ற வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்து, இங்குள்ள மீனவ மக்களிடம் பரிவுடன் பேசி வாக்கு சேகரித்து வருகிறார். மற்றொருபுறம் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர், மீனவ மக்களிடம் எக்காரணம் கொண்டும் துறைமுகம் விரிவாக்கம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வேன் என்று இப்பகுதி மக்களிடம் ஆறுதல் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார்.
“காட்டுப்பள்ளி பகுதிக்கு வந்து இயற்கையை சேதப்படுத்தி, அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்தால்... சென்னையும் அதன் சுற்றுபுற மக்கள் 10 லட்சம் பேர் பாதிப்படைவார்கள். பழவவேற்காடு பகுதியில் 50 ஆயிரம் மக்கள் பாதிக்கபடுவார்கள். இதனால் மத்திய அரசு இத்திட்டத்தினை கைவிடவேண்டும்” என்று 2019 ஆண்டு மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் தெரிவித்திருந்தார்.
காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் விரிவாக்கம் இல்லை…. விரிவாக்கப் பணி என்று சொல்லி பெரிய பரப்பளவில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட துறைமுகத்தை காட்டுப்பள்ளியில் தனியார் நிறுவனம் அமைக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர்.
சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் கூட இயற்கையான பழவேற்காடு துறைமுகமாக பயன்படுத்தி வந்தார்கள். அதன்பின்பு போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர்கள் கூட காட்டுப்பள்ளி அருகில் இருக்கும் பழவேற்காடு கடல் பகுதியை எந்த சேதாரமும் விளைவிக்காமல், இயற்கை துறைமுகமாக பயன்படுத்தி வந்தார்கள். இதனால் இன்றுவரை இப்பகுதியில் துறைமுகம் செயல்பட்டு வந்தாலும், எந்தவித இயற்கை சேதாரமும் இல்லை என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.
தற்போது அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கத்தால் பல லட்சம் மீனவ குடும்பங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில், கடல் நீர் உள் புகுந்து மிகப் பெரிய சேதாரம் ஏற்படும் என்று இங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தினை விரிவாக்கம் செய்ய இருக்கும் அதானி குழமத்திடம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது... அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை…. அதானி குழமம் சார்பாக நமக்கு தகவல் அனுப்பினால், அதனையும் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.
ஏற்கனவே இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை மேலும் விரிவாக்கம் செய்யாமல் அப்படியே தொடர்ந்தால் கடலும், நிலமும் மாசுபடாமல் இருக்கும் என்பது இங்குள்ள மக்களின் அபயக்குரலாக உள்ளது.
அதே சமயத்தில் மத்திய அரசின் மெகா திட்டம் அதானி குழுமத்தின் முலம் செயல்படுத்தப் போவதால் எதிர்க்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது!

Leave a comment
Upload