உடற்பயிற்சி தேவையா?
இன்றைய நவீன உலகில்... அன்றாட வாழ்வில், நம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல விஷயங்களைத் தவறவிடுவது சகஜமாகிவிட்டது. உடல் உழைப்பு இல்லாத வேலையைத் தான் பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். அனைத்து வேலைகளையும் செய்வதற்கு, இயந்திரங்கள் வந்து விட்டதால், குடும்ப தலைவிகளுக்கும் உடல் உழைப்பு குறைந்து விட்டது.
உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம் காலமாக நாம் பேசி வந்தாலும், அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. நேரத்துக்குச் சாப்பிடாமல், தூங்காமல் வேலை.. வேலை என எப்போதும் வேலையில் மூழ்கிக்கிடப்பவர்கள், தவறவிடும் முக்கியமான விஷயம்... காலை உடற்பயிற்சி.
உடற்பயிற்சி மேற்கொண்டால், நோயற்றவாழ்வு வாழலாம். இன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி, உடல் நலம் கெட்டபின் தான் அதன் தேவையை உணர்கிறார்கள். பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கியபின் தான், உடற்பயிற்சியை தொடங்குகிறார்கள். இத்தகைய நோய்கள் ஒருமுறை தாக்கினால், அதன் பாதிப்பு ஆயுள் வரை கூடவே இருக்கும். உடற்பயிற்சிக்கெல்லாம் நேரமே இல்லை என்பவர்கள், பின்னால் தங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவமனைகளில் தங்கி, அவர்கள் சொல்லி தரும் உடற்பயிற்சியினை கடைசி வரை செய்ய வேண்டி வருகிறது.
உடற்பயிற்சி எதற்கு..?
உடற்பயிற்சி என்பது உடல் நிலையயும், நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன், அவரின் உடல்நிலையை சீராக்குகிறது. உடற்பயிற்சி இயன்முறை மருத்துவத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம், ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும். மேலும் உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது. குழந்தைக்களுக்கிடையே பெருகி வரும் உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி மூலம் அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சரி வர செய்யும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியமா?
ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதால், உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துவிட்டது. இதைத் தவிர்க்க, நலமான வாழ்க்கையை விரும்புபவர்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க முடியாது.
நம் முன்னோர்கள் தொடங்கிய உடற்பயிற்சி...
நம் முன்னோர்கள் தங்களது உடல்களை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள, திருவிழாக்களின்போது உடற்பயிற்சி போட்டிகளை நடத்தி ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவைகள் முறையே கர்லா கட்டை சுற்றுவது, மல்யுத்த போட்டி, தண்டால் எடுப்பது முதலியனவாகும். மேலும் தொடர் ஓட்டம், ஆற்றில் குளத்தில் கடலில் நீந்துவது, கப்பலைச் செலுத்துவது முதலியனவாகும். இன்றும் சில கிராமங்களில் கூட இளவட்டக்கல் தூக்குவது, வழுக்குமரம் ஏறுவது போன்ற அருமையான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்துமே நமது உடல் உழைப்பு சார்ந்த உடல் இயக்கத்துக்கு தேவையான வலுப்படுத்தும் பயிற்சிகளாகவே அமைகிறது.
உடற்பயிற்சி வகைகள்...
உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங். இரண்டு கார்டியோ எக்சசைஸ். தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல்வகை. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகை (ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ பயிற்சியாகும்). இவைகளை தினமும் செய்தால், உடலில் இருக்கும் கொழுப்பு குறையும், தசையும் பலமாகும். இந்த இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் அவரவருக்குத் தேவையான அளவில் தொடர்ந்து செய்துவர வேண்டும்.
எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்...
இதுவரை உடற்பயிற்சி ஏதும் செய்யாதவராயிருந்தால் முதல் நாள் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். அடுத்துவரும் நாட்கள் சிறிது சிறிதாக பயிற்சி நேரத்தை அரை மணி முதல் ஒருமணி நேரம் வரை அதிகரிக்கவும். இப்படி வாரம் ஐந்து நாட்கள் செய்தால் போதும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம்...
அதிகாலையில், வெறும் வயிற்றில் எளிய பயிற்சிகளை செய்யலாம். ஏனெனில் காலையில் தான் கொழுப்பு விரைவில் கரையும்.
உடற்பயிற்சிக்கு பதிலாக..
அன்றாடம் செய்யும் வேலையையே ஒரு உடற்பயிற்சி போல் செய்யலாம். வீட்டு வேலைகள், தோட்டம் பராமரித்தல் உடலுக்கு நன்மை தருவது எனக் கருதி ஒரு பயிற்சி போல் செய்யலாம். லிஃப்ட் இருந்தாலும் மாடிப்படி ஏறி செல்லலாம். வேலை இடைவேளையில் ஒரு பொடி நடை நடந்து போகலாம். கடைகளுக்கு போக சைக்கிள் பயன்படுத்தலாம். வாகனத்தை முடிந்த அளவு தவிர்த்து, நடக்கலாம். வீட்டை சுத்தப்படுத்துவது, காரை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளில் ஆர்வமாய் ஈடுபடலாம்.
உடற்பயிற்சியினால் நன்மைகள்...
உடற்பயிற்சி என்பது எல்லா மனிதனுக்கும் தேவையான ஒன்றாக இந்த காலகட்டத்தில் மாறி விட்டது. நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதற்கு, உடற்பயிற்சி பெரிதும் பயன்படுகிறது. இதற்கு கடுமையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க முடியும் என்பது கிடையாது. 15 நிமிடம் செய்தாலே போதுமானது.
மனஅழுத்தத்தில் இருந்து விடுபட, காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது. காலை உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள ஹார்மோன்களான செரோடோனின் (Serotonin), நோர்பினேப்ரைன் (norepinephrine), எண்டார்ஃபின் (Endorphin), டோபமைன் (Dopamine) ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன் கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து, மேலும் வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறது. உடல் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், மண் மற்றும் தூசு மூலம் பரவும் நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், புதிய நுண்ணிய ரத்த நாளங்கள் (blood vessel) உருவாகும்.
முதன்முறையாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கடினமான ஜிம் பயிற்சிகள் செய்யத் தேவை இல்லை. 10 நிமிடப் பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10 - 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
தீவிர நோய்கள் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா?
கலிபோர்னியாவில் உள்ள கெய்சர் பெர்மெனென்ட் போண்டனா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி... இதய செயலிழப்பு, டைப் 2- சர்க்கரை, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள்கூட, மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதன் மூலமாக நோயின் தாக்கம் குறைகிறது எனத் தெரியவந்துள்ளது.
முறைப்படி தினமும் உடற்பயிற்சி செய்து நாம் பலவித நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்!!

Leave a comment
Upload