
முயற்சிதான் முக்கியம்...
எனக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் ஜாஸ்தி, பயம் என்று கூட சொல்லலாம். “உம்மாச்சி கண்ணைக் குத்தும்” என்ற எங்கள் பாட்டி வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. எங்கள் வீட்டில் ஒரு வெங்கடாஜலபதி பொம்மை, பெரிய பாபா சிலை இரண்டும் இருந்தது. நான் தினந்தோறும் வணங்கும் தெய்வங்களில் இந்த வெங்கடாஜலபதியும்ம் பாபாவும் உண்டு. சமீபத்தில் இந்த இரண்டு பொம்மைகளும் கொஞ்சம் உடைந்து விட்டது. உடைந்த பொம்மைகளை வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்வார்கள் என்பதால் இந்த இரண்டு பொம்மைகளையும் நான் தினந்தோறும் குப்பைகளை கொட்டும் இடத்தில் சுவரோரமாக வைத்தேன். அங்கு ஏற்கனவே இயேசுநாதர், விநாயகர், முருகன் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவர்களும் சேதமடைந்திருந்ததால், அங்கு குடியேறியிருந்தனர்.. நான் மறுநாள் அங்கு குப்பை கொட்ட சென்றபோது, பாபா சிலையை காணோம். ஆனால், வெங்கடாஜலபதி அங்கேயே இருந்தார். அவர், என்னை கேலியாக பார்த்து சிரிப்பது போலிருந்தது. இன்றுவரை அந்த வெங்கடாஜலபதி அங்கேயே இருக்கிறார். அவரைப் பார்ப்பேன்... அவர் என்னை இங்கே கொண்டு வந்து விட்டுட்ட இல்ல என்று என்னைக் கேட்பது போல் இருக்கும். இன்றுவரை அது எனக்கு ஒரு உறுத்தலாகத் தான் இருக்கிறது.
ஒரு முறை, செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் ஒருவர் அறந்து போன செருப்புகளை திருச்செந்தூர் முருகன் படம் போட்ட பையில் எடுத்துவந்து கொடுத்தார். அவர், அதை தெரிந்துதான் செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், முருகன் படம் போட்ட பையில் செருப்பா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. நான் குறிப்பிட்ட ஒரு பிராண்ட் கற்பூரம் தான் வாங்குவேன். அந்த கற்பூர கவரில் வெங்கடாஜலபதி படம் போட்டிருக்கும். அந்தக் கவரை கிழித்துகுப்பைத் தொட்டியில் போடும் போது, எனக்கு சங்கடமாகத்தான் இருக்கும். இருந்தாலும், “சாரி பெருமாள்” என்று சொல்லி அந்த கவரை குப்பைத் தொட்டியில் போடுவேன்.
சின்ன வயதில் ராம விலாஸ் புகையிலை என்று ஒரு புகையிலை. அந்த புகையிலை கவர் அட்டையில் பட்டாபிஷேக ராமர் படம் இருக்கும். குப்பையில் இருக்கும் அந்த ராமர் படத்தை எடுத்து அட்டையில் ஒட்டி மணலில் கோயில் கோபுரம் செய்து, அதில் அந்த ராமர் படத்தை வைத்து விளையாடி இருக்கிறேன். பரிட்சை விடைத்தாளில்... விநாயகர் துணை, முருகர் துணை, வெங்கடாஜலபதி துணை எல்லாம் போட்டு இருக்கிறேன். நான் வாங்கிய மதிப்பெண்கள் எல்லாம் ஏதோ இந்த கடவுள் கருணை காட்டி தந்தது என்று தான் நினைப்பேன். ஒரு காலத்தில், விநாயகர் சிலைகளை வாங்கி சேகரிப்பேன். அதையும் ஒரு கட்டத்தில் நிறுத்தினேன். காரணம்... அதைப் பாதுகாக்க முடியவில்லை என்ற பய உணர்ச்சிதான்.
நாத்திகம் பேசுகிறவர்கள் தான் பகுத்தறிவுவாதி என்று சிலர் சொல்வார்கள். நான் இந்த வாதத்தை ஏற்கமாட்டேன். நாத்திகம் என்பதுகூட, யோசிக்காமல் முட்டாள்தனமாக கொண்ட கொள்கையாக தான் எனக்கு தெரிகிறது. ஆனால், ஆன்மீகம். பேசுபவர்கள் தான் உண்மையில் மிகப்பெரிய பகுத்தறிவாதி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ராமானுஜரை விட, மிகப்பெரிய பகுத்தறிவுவாதி இந்த உலகில் இன்று வரை இல்லை. அவர் ஆன்மீக சீலர். அதே சமயம் பெண்களை மதிக்க வேண்டும் என்று போதித்தவர். ஜாதி ஒழிப்பு, தீண்டாமை, மது ஒழிப்பு போன்றவற்றை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டிய உண்மையான புரட்சியாளர், பகுத்தறிவாதி.
ஏ.ஆர். ரகுமான் இசையில் புதுமை புகுத்திய மேதை. அவர் ஆஸ்கர் விருது வாங்கியபோது, ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று தான் சொன்னார். இசைஞானி இளையராஜா ‘கடவுள் நினைக்காமல் உன்னால் ஒரு பருக்கை கூட ஜீரணிக்க முடியாது’ என்கிறார்.
ஆன்மீகப் பெரியார்கள் தங்களைப் பற்றி பெரிதாக தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டார்கள். தவிர, தங்கள் தகுதி என்ன என்பதை தெரிந்து செயல்படுவார்கள், பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள்.
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர், என் பையன் அதிகமாக இனிப்புகளை சாப்பிடுகிறான், அவனுக்கு நீங்கள் புத்திமதி சொல்லுங்கள் என்று கேட்டார். அவரிடம் ராமகிருஷ்ண பரமஹம்சர், அடுத்த வாரம் உங்கள் மகனை அழைத்து வாருங்கள், அவருக்கு நான் புத்தி சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தார். காரணம்... அவருக்கும் இனிப்புகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் இருந்தது. குறிப்பாக, சந்தேஷ் என்ற ஒரு இனிப்பு அவர் விரும்பி சாப்பிடும் இனிப்பு. நாம் ஒருவருக்கு புத்தி சொல்வதற்கு முன், முதலில் நம்மை அதற்கு தகுதியானவராக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது ராமகிருஷ்ணர் ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார். எனவே அந்தச் சிறுவனுக்கு புத்தி சொல்வதற்காக ஒரு பெரிய வெல்ல கட்டியை தன் நாக்கில் வைத்து, அது கரையாமல், நாக்கிற்கு அதன் சுவை தெரியாமல் இருக்க ஒரு வாரம் பயிற்சி எடுத்தார். ஏழாம் நாள், அவர் நாக்கில் வெல்ல கட்டி வைத்த போது... நாக்கு அந்த இனிப்பின் சுவையை நுகர முடியவில்லை. அந்த அளவுக்கு தனது மனதை ஒருங்கிணைத்து பயிற்சி செய்தார் ராமகிருஷ்ண பரமஹம்சர். பிறகு, அந்த சிறுவனை வரச்சொல்லி இனிப்பு சாப்பிடக்கூடாது இனிப்பினால் என்னென்ன தீமைகள் என்று பட்டியல் போட்டு விளக்கினார். அதன் பிறகு சிறுவன் இனிப்பு ஆசையை விட்டுவிட்டான்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் எது வேண்டுமோ கேளுங்கள்... கேட்டது கிடைத்து விட்டது என்று நம்புங்கள். அது கிடைத்த உணர்வை, வெளிப்படுத்துங்கள்... கேட்டது, உங்களைச் வந்து சேரும் என்றார். இவரைவிட பகுத்தறிவாதி உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்.
கடவுள் காப்பாற்றுவார் என்பது மூட நம்பிக்கை அல்ல... அது நிஜ நம்பிக்கை. அந்த நம்பிக்கை எது. அவனுக்கு அறிவைக் கொடுத்து இருக்கிறார். அவன் கற்றுக் கொள்ள எத்தனையோ சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தி தருகிறார். எத்தனையோ உதாரணங்களை அவர் முன்னே அவர் காட்டுகிறார். உழைக்கின்ற சக்தியை தருகிறார். அவன் எதை தெரிந்து கொள்ள விரும்பினாலும், அதற்கான வழிகளை அவரே காட்டுகிறார். மனிதன் அதை பயன்படுத்த வேண்டும், அதுதான் பகுத்தறிவு.
கடவுள் நம்பிக்கை என்பது கடவுள் கொடுத்த அறிவைப் பயன்படுத்தாமல், மழுங்கடித்து கொள்வது அல்ல. சோம்பல், பொறுப்பின்மை, அலட்சியம்.. இதெல்லாம் கடவுளின் அகராதியில் இல்லை. கடவுளை வணங்கினால், அது தானாக நடக்கும் என்று நினைக்கிறவன் முட்டாள். இப்படிப்பட்ட முட்டாளை, தன் பக்தனாக கடவுள் என்றும் ஏற்பதில்லை. பிரார்த்தனை என்பது முயற்சியின் ஒரு பகுதி, அவ்வளவுதான். முயற்சிக்காமல் வெறும் பிரார்த்தனையை மட்டும் நம்பும் முட்டாள்களை, கடவுள் விரும்புவதில்லை. கடவுள் நிச்சயம் கரை சேர்ப்பார். ஆனால், வழியில் புயல், பெருமழை வராது என்று எந்த உத்தரவாதத்தையும் கடவுள் உங்களுக்கு தர மாட்டார்.
பிரச்சனைகள், சிக்கல்கள் நம் வாழ்க்கையில் பாடங்கள். இந்தப் பாடங்கள் எனக்கு வேண்டாம் என்று கூறும் முட்டாள்களை கடவுள் ஏற்பதில்லை. எனவே கடவுளை நம்புங்கள்... ஆனால், அதற்கு முன் முயற்சி செய்யுங்கள். அதுதான் கடவுளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

Leave a comment
Upload