வளர்ந்து வரும் நகர் பகுதி... அங்கு வசிக்கும் மக்கள் யாவரும் என்னடா இது வம்பா போச்சு என கவலையில் மூழ்கினர், அப்படி என்ன நடந்தது?
நகர் பகுதியில் ஆலயம் ஒன்றினை எழுப்ப விரும்பிய
நகர்வாசிகள், தேவபிரசன்னம் பார்க்கலாம் என்று கேரளத்திலிருந்து ஒருவரை வரச்சொல்லி கூட்டமாக ஒரு வீட்டின் வாசலில் குழுமியிருந்தனர்.
சோழிகளை உருட்டிப்பார்த்தவர், நிமிர்ந்துப் பார்த்தது எல்லோரையும் கலவரமடையச் செய்தது.
“இப்ப சகுனம் சரியல்லா, இன்னும் நாலு தெவசம் கழிஞ்ஞ பின்னே யான் வரும். அப்ப உள்ளதை யான் பறையும், எனச் சொல்லி பீதியைக் கிளம்பிவிட்டு கண்களை மூடினார்.”
“சாமி ஏதும் பிரச்சினையா, எனத் தயங்கியபடி கேட்டார் கூட்டத்தில் வயதில் மூத்தவரும், அந்த வீட்டுக்காரருமான கணபதி அய்யா.” \
அவரது மகன் பாரதி, மருமகள் கவிதா, மூன்றாம் வகுப்பு படிக்கும் பெயர்த்திகள் லக்குமி, சரசுவதி, இவர்களுடன் நகரில் பத்தாண்டுகளுக்கு மேல் வசித்து வருபவர்.
மீண்டும் சோழிகளை எடுத்து கண்களை மூடி...
அம்மே! என வேண்டி உருட்டி, விரல் விட்டு எண்ணிப் பார்த்தவர்...
“நாலு தெவசத்திலே மரணம் இரண்டு இவ்விடத்தில் சம்பவிக்கானும். அதானு, ஒரே திவசத்தில் சனித்த இரு உயிர்கள் ஒரே நாளிலே நீங்கனும், கேட்டோ...
அதன் பின்னேதான் இவ்விடத்திலே பூமி பூஜை போட முடியும், அது கழிஞ்ச பின்னே எம்மை விளிக்கும், என்றவர் வந்ததில் இருந்து அபசகுனத்தை விளக்கிக் சொல்லிக் கொண்டிருந்தார்.”
கணபதி ஐயா! “நல்ல விபரமாக கேளுங்க, ஏதும் பரிகாரம் இருந்தால் செய்திடலாம், இல்லை யாரு என்ன? எப்போ? என்று விளக்கமாக சொல்லுங்கள்” என்று கூட்டத்தில் ஒருவர் கூறவும், தீர்க்கமாக அவரைப் பார்த்தார் சாமி.
அந்தச் சமயம் பள்ளி விட்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு
இதே நகர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் பிள்ளைகளை வீட்டில் விட்டுச்செல்ல பேரூந்திலிருந்து இறங்கி வந்தார்.
“ஏன்? நீங்களே இறங்கி வந்துட்டிங்க, என ஓட்டுநரிடம் கேட்டபடி கணபதியின் மருமகள் கவிதா வர...”
“உதவியாளர், ஆயாம்மா இருவரும் லீவு. அதுதான் என ஓட்டுநர் கூற..” குழந்தைகளை அழைத்துக்கொண்டு உள்ளே செல்லத் திரும்பியபோது...
யடி! அங்கணே நில்லு! சகுனம் சரியில்லா என சப்தமாக சொன்னார் கேரளத்து சாமி.
மிரண்டு போய் நின்றனர்....
“இ இரு பெண்குட்டிகள் யாரனும்?” கேட்டார் சாமி.
“இது என் பெயர்த்திகள்” என்றார் கணபதி.
“இரட்டையோ?” என அவர் கேட்டது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
“ஆமாங்க” என்றனர் கோரசாக.
“இ ஆளு? என ஓட்டுநரைக் காட்டி கேட்க...”
“இவர் பள்ளியின் பேரூந்து ஓட்டுநர்” என சொன்னார்கள்.
படக்கென்று எழுத்தவர், விடுவிடுவென கிளம்பிப்போய்விட்டார்.
ஆலயம் கிளப்புறேன்னு வந்து, ஊராரின் வயற்றிலே பீதியை கிளப்பிட்டுப் போயிட்டாரு சாமி. என பேசியபடி கலைந்துச்சென்றனர் நகர்வாசிகள்.
கணபதி வீட்டாரை பயம் பற்றிக்கொண்டது.
என்ன நேருமோ? தெரியலை.
பெயர்த்திகள் வேறு இரட்டையாயிற்றே! இவர்களுக்குத்தான் ஆபத்தா?
என கவலை கணபதி வீட்டாரை மட்டுமல்ல, அந்த நகர் பகுதி முழுவதும் சூழ்ந்துக்கொண்டது.
கணபதி தனது மகனிடம் நடந்த செய்திகளைக் கூறவே, இரண்டு நாட்கள் அலுவலகம் போகாமல் விடுமுறை எடுத்து மகள்களை பள்ளிக்கு பத்திரமாக அழைத்துப்போய் திரும்ப அழைத்து வந்தார்.
இவை ஏதும் அறியாத பேரூந்து ஓட்டுநர், குழந்தைகள் ஏன் பேரூந்தில் வரவில்லை எனக் கேட்க... ஏதோ கூறி சமாளித்து விட்டனர்
கணபதி வீட்டார்.
என்ன நடக்கும், எப்போது நடக்கும், எங்கு நடக்கும் என்றும்... இதெல்லாம் நடக்காது, சும்மா கட்டுக்கதை என்றும்.. ஆளாளுக்கு கருத்துக் கூறினாலும், இரட்டையர்கள் இருந்த வீடெல்லாம் பீதியடைந்துதான் இருந்தனர்.
ஓரிருவர் மாற்றி யோசித்தனர், ஏன் நாயாகவோ, ஆடாகவோ, பறவைகளாகவோ இருக்கக் கூடாது? அதுவும் உயிர்தானே, நாலைந்து குட்டிகளை ஒரே நாளில் ஈனுகிறது, என பேசி ஓரளவிற்கு மனத்திற்குள் நிம்மதியடைந்தனர்.
கெட்ட செய்தி ஒன்றைக் கேட்ட பின் ஏற்படும் மனநிலை மாறுபாடு, அனைவரையும் நிலை குலையச் செய்யும். யாருக்கே ஆனாலும் மரணத்தை எதிர்நோக்குவது என்பது எவ்வளவு கடினமான ஒரு விஷயம்.
கேரளத்து சாமியை அழைத்திருக்கவே வேண்டாமோ என வருந்தச் செய்தது நகர்வாசிகள் அனைவரையும்.
கேரளத்து சாமி கெடுவாகிய, அந்த நான்காவது நாளும்
வந்தது. மழை இனி எப்பொழுதும் பெய்யப்போவதில்லை போல் வெளுத்து வாங்கியது.
பள்ளியில் குழந்தைகளை இறக்கிய பாரதி, அலுவலகத்தில் முக்கிய வேலை இருப்பதால் சென்று விட...
கனத்த மழையினால் பள்ளி அரைநாள் விடுமுறை அறிவித்துவிட...
தகவலறிந்து பாரதி பள்ளிக்குச்சென்று அழைப்பதற்குள், பேரூந்தில் பிள்ளைகளை ஏற்றி அனுப்பி வைத்திருந்தனர் பள்ளி நிர்வாகத்தினர்.
வீட்டிற்கு தொலைப்பேசி செய்து கேட்க... அவர்கள் குழந்தைகள் இன்னும் வீடு வரவில்லை என்ற தகவல் பாரதியை கவலை கொள்ளச்செய்தது.
அதைவிட... வரும் வழியில் பள்ளிப் பேரூந்து முகப்பு நீர் துடைப்பான் பழுதாகி வழி தெரியாமல் மறைத்து வாகனமானது நிலைத்தடுமாறி அருகேயிருந்த மரத்தில் மோதிவிட்டது என்ற செய்தி இடியெனத் தாக்கியது கவிதாவை.
பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தான் வருவதாக பாரதி கூறியபின் தான் சற்று நிம்மதியடைந்தாள் கவிதா.
தன் சாதூரியத்தால், அனைவரையும் காப்பாற்றியதைக்கேட்டு மகிழ்வடைந்த பெற்றோர்கள், பலத்த காயமடைந்து ஓட்டுனர் இருக்கையிலே மரணமடைந்திருந்தார் என்ற செய்தியால் வருத்தமடைந்தனர்.
அவரது வீட்டில் அவரும், அவரது ஒரே அக்காவும் தான் என்று கேட்டறிந்து உதவி செய்ய அவரின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த நகரின் கடைசிப் பகுதியிலுள்ள அவர் வீட்டிற்கு சென்றனர் பெற்றோர்கள்.
ஆதரவாயிருந்த அண்ணன் இறந்த செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில், தங்கையும் இறந்துப்போனார் என்ற செய்தி, மற்றும் அவர்கள் இரட்டையர் என்ற செய்தியும் அந்த மக்களை உலுக்கியது.
நாற்பது பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர், ஆலயம் கட்டப் படாமலே அனைவரின் மனத்திலும் தெய்வமாய் அமர்ந்திருந்தார்.
Leave a comment
Upload