தொடர்கள்
கவிதை
காதல் பொது மறை - 34 - காவிரிமைந்தன்

2021011206342310.jpg

20210104161412313.jpg

காவிரி மைந்தன்

20210328214306646.jpg

உன் வண்ணம் என் எண்ணம்!!

அன்பே!

மெய்வண்ணம் மேனிதொடும் பொய்வண்ணமல்ல அது.. கண்வண்ணம் காணுகையில் காதலது பிறந்திடுமா? பெண்வண்ணம் நானறிய கைவண்ணம் வேண்டிடுமோ?

நிலவுக்கு வானெழுதும் கடிதம்பற்றி அறிந்ததுண்டு!

வானுக்கு நிலவெழுதும் முதல்கடிதம் இதுவோ?

சந்திரன் எழுதுவதால் நீயங்கே என் வானமாகிறாய்!

அகப்பொருளை அளந்தெடுத்து ஆசையெனும் மையூற்றி சுகவரிகள் எழுதுகின்றேன்!

சுகம்தானா சொல் கண்ணே!

உள்ளத்தில் உள்ளதைத்தான் உதடுகளால் எழுதுங்கள் என்று உத்தரவு உன்னிடம் வந்தபின்னே சித்திரம்வரைதல்போல் உன் செவ்விதழ்கள் தேன்சிதறும்!

கள்ளத்தனம் செய்வதொன்றும் காதலுக்குப் புதுமையில்லை.. கண்வழியே நீ சொன்ன பாடம் காலமெல்லாம் மறப்பதில்லை!

மஞ்சள்நதி குளித்துவந்த செம்பருத்தி நீயடி.. கொஞ்சுதமிழ்ச் சரமெடுத்து உன்னழகைப் பாடுகின்றேன்!

கட்டவிழும் மொட்டுக்களை உற்றுநோக்க.. காமனவன் பாடசாலை திறந்துகொள்ள.. திட்டமிட்டு செய்கின்ற செயலுமல்ல.. தித்திக்கும் தேன்வழியும் தருணமடி!

அனுதினமும் உனைச்சேரும் ஆனந்தக் கோலங்கள்!

தென்பொதிகைத் தென்றல்போல் சிலிர்க்கும் தழுவல்தான்!

பனிமலரின் இதழ்மீது பதமான முத்தம்சிந்த சரியான தருணமெது பாவை நீ பார்த்துச் சொல்!

கனிகுலுங்கும் இடையாளே.. பசிதீர்க்க மாட்டாயா என்றேங்கும் என்னைப் பார்!!

அகம்குளிரும் காரணத்தால் முகம் மலரும் தாமரையே.. யுகம்நூறு போகட்டும்.. நம் காதல் வாழட்டும்!

அன்பின் அரிச்சுவட்டை அணுவணுவாய் நாம் உணர்ந்து இன்பவழிபாடு என்றும் நடத்திடுவோம்!

தன்னுயிரில் தான்கலந்து இன்னுயிராய் ஆவதுதான் காதலின் உச்சநிலை.. ஆதலினால் காதல் செய்வோம்!

வாழ்தல் என்பது வேறொன்றும் வகை வகையாய் இங்கு இல்லை.. காதலுடன் சேர்ந்து காணுகின்ற உலகம்தான் பேரின்பம் என்று சொல்வோம்!

இதயமெல்லாம் வழிந்தோடும் இன்பநதி காதல் என்றும் ஸ்வரங்கள் இங்கு ஏழுதானா?

என்றாலும் எட்டாவது ஸ்வரம் நின் குரல் என்றும் எழுதிவைத்த என் கரங்கள் வரைந்த வார்த்தைச் சிலைகள் உன் மனதில் என்றாய்!

நெஞ்சில் பட்டதைத்தான் எழுதிவைத்தேன்.. இன்பத்தேன் அதில் இத்தனை இருக்குமென்று நீ சுவைத்தபின்தான் நான் அறிந்தேன்!

கொஞ்சும் கிளியன்றோ என் தோள்சாய்ந்து பேசியது!

பைந்தமிழ்ப் பாமாலை தினம்தோறும் தான்கேட்டது!

பிள்ளைத்தமிழ் போல சொல்லும் சுவைகூட்ட.. வெல்லத்தமிழ் இனிக்கும் கவிநடையில் கேட்டதெல்லாம் தருகின்ற காதலனே.. உன் மடியில் காலமெல்லாம் கிடந்தாலே போதும் என்று சுட்டும்விழியாலே சுந்தரமொழிபகர்ந்தாய்!

ஆசையின் ஓசைதனை அங்கு மொத்தமாய் இட்டுவைத்து.. அள்ளியணைத்து கதைபடித்து.. பேசும்விழியாலே குறிப்புக்கள் தானுரைத்து.. மெத்தையதில் தத்தையவள் தந்தசுகம் கோடியென.. இன்பத்துப் பாலெடுத்து இதயம்குளிரவைத்து.. இதழ்வழியும் ரசம்பருகி.. இளமையது தீரும்வரை.. எத்தனை நாடகங்கள்.. ஆரம்பமாகிவிடும் ஆனந்த அரங்கேற்றங்கள்!!

ஒன்றியிருக்கும் ஓராயிரம் நினைவுகளும்.. உனக்காக நான் கண்ட கனவுகளும்.. மெய்ப்படும்வேளையன்றோ?

மேனிசிலிர்க்கும்.. மின்சாரம் பாயும்.. நாணம் தடுக்கும்! ஒற்றை வார்த்தைகூட உள்ளிருந்து வாராமல்.. வேண்டாம் எனச் சொல்லி வேண்டியதைப் பெறும்!

தீண்டல் கூடாதென விலகி.. மாறாய் தாவியணைத்துக் கொள்ளும்!

யாதெனக் கேட்பின்.. எல்லாம் அப்படித்தான் என்றே பதில்வரும்!!

மறைநூலில் வகுத்திருக்கும் மன்மதப் பாடங்கள் அறைக்குள்ளே நடப்பதுதான் வேறு என்ன?

தமிழோடு நான்பேசிக்கிடந்தபோது.. யாரோடு அங்கு என்ன பேச்சு என்று உன்குரல் அங்கே கேட்டதம்மா!!