தொடர்கள்
பொது
ரஜினிகாந்த் ஒரு தீர்க்கதரிசி... - வேங்கடகிருஷ்ணன்

20210328212809180.jpg

“என் வழி தனி வழி” அப்படீன்னு திரையில மட்டும் சொல்லாம, ரஜினி செய்தும் காட்டிவிட்டார். 1996-ல் இருந்து அவரின் அரசியல் பிரவேசம் பேசப்பட்டாலும், உறுதியாய் உணரவைக்கப்பட்டதென்னவோ மூன்று வருடங்களுக்கு முன்னர் தான். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த எத்தனையோ விஷயங்கள், அவரை பாதித்தது. எல்லாவற்றையும் மீறி அரசியலுக்கு வருவதாய் வாக்களித்தார்.

20210328213300744.jpg

அவர் ரசிகர்கள் காதில் தேன் பாய்ந்தது. பின்னர் அவருடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவரை சார்ந்தவர்களும், எதிர்க் கட்சியினரும் திணறினார்கள். ஒரு புறம் அவர் வந்தால் எப்படி இருக்கும், என்ன என்ன செய்யவேண்டும் என்கிற பேச்சுக்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்களின் பேச்சும், மற்றொரு புறம் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.. அரசியலுக்கு வர? சினிமாக்காரனெல்லாம் எம்ஜியாரா? என்று எல்லோரும் சொன்னதை, தானும் சினிமாக்காரன் தான் என்பதை மறந்து சீமானும் சொன்னார்.

“இப்போ இல்லேன்னா எப்போவுமே இல்ல...” இது ரஜினி சொன்ன நிஜ வாழ்க்கை பன்ச். அதை என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று இப்போது நினைத்து பார்த்தால் புரிகிறது. இன்னும் மூணு நாள்ல முடிவு சொல்றேன்னு சொன்ன ரஜினியை.. அசைத்து பார்த்தது கொரோனாவின் வீரியம் தான்.

20210328213350130.jpg
அண்ணாத்தே படப்பிடிப்பில் அட்டகாசமாய் போய் இறங்கிய ரஜினியை அசைத்து பார்த்து விட்டது, யூனிட்டில் பரவிய கொரோனா தொற்று. உண்மை என்ன என்று ரஜினி யோசிக்கத் துவங்கியது அங்கே தான். இப்படி ஒரு கட்டுப்பாடான சூழலிலேயே பரவல் இருந்தால், அரசியல் கட்சி துவங்கி, அதுவும் துவங்கியவுடன் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலில், மக்களுடன் புழங்காமல் எப்படி சாத்தியம்? இந்நிலையில் ரஜினியை முழுவதுமாய் புரட்டிப்போட்டது, ‘பாடும் நிலா’ பாலுவின் மரணம். மிக நெருங்கிய நண்பனின் மரணம்.. அதற்கான காரணம், அவர் கலந்துகொண்ட ஐதராபாத் பொது இசை நிகழ்ச்சி என்பது தெரிந்தவுடன், ஜெர்க்கானார்.

ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த உடம்பு, இணை வியாதிகள் கொரோனாவுக்கு நண்பர்கள் என்பதும் ரஜினியின் காதில் போடப்பட்டது. மக்களோடு அதிகம் பழகிய அரசியல் தலைவர்களை, கொரோனா தன் ஆக்டொபஸ் கரங்களால் வளைப்பதை பார்த்தார். தேர்தலுக்கு அதிக நாட்கள் இல்லாத நிலையில், மக்களோடு புழங்காமல், எப்படிக் கட்சியை ஆன்லைனில் மட்டுமே நடத்த முடியும் என்று யோசிக்கத் துவங்கினார். பல்வேறு இடங்களிலிருந்தும் அழுத்தம் தரப்பட்டது வேறு அவரை யோசிக்க வைத்து. மூன்று நாட்கள் தீவிர மனப்போராட்டத்திற்கு பிறகு... “எப்போதும் இல்லை” என்று முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது வெளியில் சிரித்தாலும், அவர் அறிமுகம் செய்த தமிழருவி மணியனும், அர்ஜுனன் மூர்த்தியும் மனதிற்குள் நிச்சயம் ரஜினியை திட்டியிருப்பார்கள். (நான் செவனேன்னு தானே இருந்தேன்....) அதிலும் தமிழருவி அதை வெளிப்படையாகவே சொன்னார்.

ஆனால், விதி அவருக்கு வேறு ஒரு கூட்டாளியை தயார் செய்து வைத்திருந்தது. ஆம், கொரோனா தொற்று பரவ... அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். அவரே அதற்கு பதிலும் சொன்னார். ஈரோட்டில் நான் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி தான் இதற்குக் காரணம். விகடகவியில் நாம் வியந்து சொன்ன மருத்துவர் வீர பாபு தான், மிகுந்த சிரமப்பட்டு மணியனை காப்பாற்றி இருக்கிறார். அதை அவரே ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அந்த அறிக்கையில் ரஜினி எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு அந்த முடிவை எடுத்திருப்பார் என்று எனக்கு இப்போது புரிகிறது என்று மனம் திறந்து ரஜினியை பாராட்டி இருக்கிறார்.

20210328213529799.jpg 20210328213614191.jpg
தன்னுடைய நலம் விரும்பிகளுக்கும், தன் ரசிகர்களுக்கும் கொரோனா தொற்று வந்திடக்கூடாது என்று யோசித்த “ரஜினிகாந்த் ஒரு தீர்க்க தரிசி” தானே?