தென்மாவட்ட திமுக வேட்பாளர், அவர் ஒரு முரட்டு ஆசாமி. கருத்துக்கணிப்பு வந்த அன்று அவர் வீட்டுக்குப் போனபோது... ஏதோ பிரபல ஸ்வீட் கடைக்குள் நுழைந்தது போன்ற பிரமிப்பு. ஜாங்கிரி, பாதுஷா, மைசூர்பா, லட்டு என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஸ்வீட் தயாரிப்பும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.
மிஸ்டர் ரீல், அவரைப்பார்த்து... “என்ன அண்ணாச்சி... வீட்ல ஏதாவது விசேஷமா என்று கேட்க...” அதற்கு அண்ணாச்சி.. “வீட்ல இல்ல, தொகுதியில விசேஷம். கருத்துக்கணிப்பு பார்த்த இல்ல.. அதான் இப்பவே நன்றி சொல்லி ஸ்வீட் தந்துக்கிட்டு இருக்கோம்” என்று அண்ணாச்சி சொன்னபோது.... அங்கு வந்த ஒரு தொண்டர், “அண்ணே இரண்டாவது வார்டுல தந்துட்டேன். ஆனா, ஜாங்கிரி கிடைக்குமா என்று கேட்கிறார்கள்” என்று சொல்ல... அதோ இருக்கு பாரு, எடுத்துக்கொண்டுபோய் கொடு என்றவரிடம்... அந்தத் தொண்டர், அண்ணாச்சி.. “அங்கு ஒரு பெருசு கருத்துக்கணிப்பு தானே வந்து இருக்கு, அதுக்கு எதற்கு இந்த அலப்பறை அப்படின்னு கேட்கிறார்” என்று சொல்ல.... அண்ணாச்சி... “அந்த பெருசுக்கு ஜாங்கிரி தராதே” என்று கண்டிஷனாக சொன்னார்.
அப்போது மிஸ்டர் ரீல், “அண்ணாச்சி.. அந்தப் பெரியவர் சொல்வது வாஸ்தவம் தானே. 3ஆம் தேதி இந்த ஸ்வீட் பட்டுவாடா பண்ணலாம் இல்ல என்று சொல்ல..." அதற்கு அண்ணாச்சி, “அதுதான் முடியாது. இப்பத்தான் காணொளியில் தளபதி பேசும்போது, தேர்தல் சான்றிதழை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருங்க... வெளியே வரக்கூடாதுனு சொல்லிட்டார்” என்று சொல்ல... அதற்கு மிஸ்டர் ரீல், “இன்னிக்கி வெளியே சுற்றுவதும் தப்பு தானே அண்ணாச்சி” என்று கேட்க... அதற்கு அவர், “நான் எங்கே சுற்றுகிறேன்... அடிக்கடி கை கழுவினேன், முக கவசம் போட்டுக் கொண்டிருக்கிறேன், சமையல்காரர்கள் கூட முக கவசம் போட்டு தான் வேலை பார்க்கிறார்கள். நாங்கள் புகையிலை போட முடியாதபடி நீங்கள் வாயை அடைத்து விட்டீர்கள், அதற்கு தனி கூலி என்று பேசியிருக்கிறார்கள்” என்றார்.
இது போதாதென்று நமது சுகாதார செயலாளர் எனக்கு போன் செய்து, “அண்ணாச்சி உங்க வீட்டுல தான் கூட்டம் ஜாஸ்தின்னு சொல்றாங்க... யாரையும் சேர்க்காதீர்கள், நீங்களும் வெளியே போகாதீங்க என்றவர்... என் வீட்டு அம்மாவைக் கூப்பிட்டு, அவர் வெளியே போகாதபடி அவரை கட்டி போடுங்கள் என்று சொல்லிவிட்டார். என் வீட்டம்மா கயிறும் கையுமாக சுற்றி வருகிறார்கள்” என்றார்.
அப்போது ஒரு தொண்டர் வர.... “டேய், இது 8வது வார்டுக்கான பலகாரம். அங்கு நிறைய பேருக்கு சக்கரை இருக்கு, அதனால வெல்லத்தில் பண்ணியிருக்கோம். கூடவே, அந்த சுகர் மாத்திரை டப்பாவையும் அவங்க கிட்ட கொடுத்துடுங்க” என்று அனுப்பி வைத்தார்.
அப்போது மிஸ்டர் ரீல்.... “கருத்துக்கணிப்பு எல்லாம் விட்டுடுங்க... நீங்க எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பீர்கள், அதைச் சொல்லுங்கள்” என்றபோது... “65 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்” என்றார் அண்ணாச்சி. “இது என்ன கணக்கு?” என்று மிஸ்டர் ரீல் கேட்டபோது... “பணம் தந்த எனக்கு தெரியாதா... கூட்டி கழிச்சு பார், கணக்கு சரியா வரும் என்று ஒரு பாதுஷாவை தர... வேண்டாம் அண்ணாச்சி” என்று மிஸ்டர் ரீல் சொல்ல... “உமக்கும் சுகரா என்று கேட்டவரிடம் எதுவும் பதில் பேசாமல் புறப்பட்டார்” மிஸ்டர் ரீல்.
“அதிமுக வேட்பாளரை பார்க்கப் போனபோது... அவர் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார். லட்சம் லட்சமா செலவு செய்தேனே... நான் ஜெயிக்க மாட்டேன் என்று கருத்துக் கணிப்பு சொல்வது, எந்த விதத்தில் நியாயம் என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டார். அன்னிக்கு ஜோசியர் சொன்னார், இந்த தேர்தல் வேணாம்.. அடுத்த தேர்தல்ல பார்த்துக்கலாம் என்று... அவர் பேச்சை கேட்காமல் தப்பு பண்ணிட்டேன் என்று மீண்டும் தலையிலடித்துக் கொண்டு உரத்த குரலில் அழுதார்.”
அப்போது... அவர் மனைவி இல்லிங்க.. “இந்த கருத்துக்கணிப்பு எல்லாம் டுபாக்கூர் தான். நீங்க கண்டிப்பா ஜெயிப்பாங்க எனக்குத் தெரியும்” என்றார். அப்போதும் அதிமுக வேட்பாளர்... “அழுதபடி, டி என்னை சமாதானப்படுத்த நீ பொய் சொல்கிறாய் என்று சொல்லி மறுபடியும் அழுதார்.”
அவர் மனைவி அப்போதும்... “நீங்க கண்டிப்பா ஜெயிப்பீர்கள், இப்போதைக்கு நான் அதைத் தான் சொல்ல முடியும்” என்றவர்... மிஸ்டர் ரீலை வேண்டா விருந்தாளியாக பார்த்து முறைத்தார். அப்போது அழுகையை நிறுத்திய ஆளுங்கட்சி வேட்பாளர், தம்பி.. நம்ப ஆளு. அவர எதற்கு முறைக்கிற என்று கேட்க... அதற்கு அவர் மனைவி, அப்படியா.. சாரிங்க என்றவரிடம்... மிஸ்டர் ரீல் பரவாயில்லை அக்கா என்று சொல்ல... அப்போது அதிமுக வேட்பாளர்.. “நீ அவரை முறைக்கிற.. ஆனா, அவர் பாசமாக உன்னை அக்கா என்று அழைக்கிறார். இப்பவாச்சும் நம்பு அவர் நம்ப ஆளு” என்றார்.
அதன் பிறகு வேட்பாளர்... “சரி, அதை விடு. நான் நிச்சயம் ஜெயிப்பேன் என்று சொன்னாயே.. அது எப்படி, அதை சொல்லு” என்று மீண்டும் மனைவியை கேட்டார். அப்போது அவர் மனைவி... “சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மெல்லிய குரலில் நம்ம தொகுதி ஓட்டு பெட்டி மிஷன் எல்லாம் நம்ம வீட்டுல தான் இருக்கு. நேத்தே நாங்கள் எண்ணிப் பார்த்து விட்டோம். நீங்க 75226 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கிறிங்க. நீங்கள் ஓட்ட வாய், அதனால் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று என் தம்பி சொல்லிவிட்டான்” என்று மனைவி சொன்னதும்...
பயந்து போன வேட்பாளர்... “என்னடி சொல்ற... ஓட்டுப்பெட்டி மெஷின் இங்கே இருந்தா... இரண்டாம் தேதி ஓட்டு எண்ண அவங்க தேடினா என்ன பண்ணுவ என்று கேட்க...?”
“அதெல்லாம்... இன்னிக்கி ராத்திரி ரூம்ல போய் எல்லா ஓட்டுமிஷனும் போய் தூங்கி விடும்” என்றார். அப்போதும் சந்தேகமாக வேட்பாளர்.. “எப்படி என்று கேட்க..”
“நம்ப ஓட்டு மெஷின் இருக்கிற காலேஜ் பின் சுவரில், நாலுக்கு நாலு ஓட்டை போட்டு, யாருக்கும் தெரியாதபடி பிளைவுட்டை வைத்து, மேட்ச் பண்ணி வைத்திருக்கிறோம். போன வாரம் ராத்திரி எல்லா பொட்டியும் எடுத்துவந்து மாடி ரூமில் தான் உஷார் பண்ணுணோம். நேத்து எண்ணிப் பார்த்தோம், நீங்க ஜெயிச்சாச்சு. தயவு செய்து தலைவர்கிட்ட சொல்லிடாதீங்க. வாக்கு எண்ணிக்கை நேர்மையா நடக்கனும்னு அவர் பாவம் அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்காரு” என்ற திருமதி வேட்பாளர்... தம்பி இங்கே பேசுவது எதுவும் உங்க காதுல கேட்கல, இது உங்க அக்கா மேல சத்தியம் என்று சொல்ல... இது ஏதுடா புது வம்பு என்று எஸ்கேப் ஆனார் மிஸ்டர் ரீல்.
Leave a comment
Upload