அந்தப் பாழடைந்த பாசன கிணற்றின் படு ஆழத்தில் இரண்டு பிணங்கள் குப்புற கிடந்தபடி மிதந்தன.
பூஞ்சோலை கிராமத்தில் இருநாட்களுக்கு முன்...
“யோவ் கொன்டே புடுவேன் உன்ன!! ஏதோ வயசாளி ஆச்சேன்னு மருவாத கொடுத்தா, வீம்புக்கு முடியாதுன்னு தலையா ஆட்டுறே..! என்னை என்ன பட்டறப்பயன்னு நெனைச்சியா? கடசி மொறையா கேக்கேன்.. உன் பொண்ண எனக்கு கட்டிவைப்பியா மாட்டியா?”
“இரு முத்து.. பொறுமையா இரு.. கொஞ்ச நேரம் அந்த மரத்து பக்கம் போய் நில்லுப்பா.. நான்பேசி வழிக்கு கொண்டாறேன்.. !” என நடுவில் புகுந்தார் பாண்டி...
“ஏய்யா பெருமாளு.. தாயில்லா பொண்ணு.. அதுவும் இந்த ஊருநாட்டுல எங்கியும் பாக்காத அளவு அவ்வளவு அழகு.. தப்பா நினைக்காதே.. என் பொண்ணு மாதிரி நினைச்சு சொல்றேன் கேட்டுக்க..! எத்தனை நாளுக்கு தான் நீயும் பொண்ண காபந்து பண்ணுவ..? காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கொடுத்தா தானே நல்லது.. முத்துக்கு 40 வயசுன்னு நெனைக்காத..! ஊருலேயே பெரிய மச்சுவீடு.. பரம்பரை சொத்தா நிலம்நீச்சுன்னு இருக்கு..”
“எனக்கு விருப்பம் இல்லீங்க! ஒழுக்கம் இல்லாத ஆளு குடிக்காரன்.. 40 வயசு ஆளுக்கு எப்படீங்க 19 வயசு பொண்ணுக்கு கட்டுவேன்!” என்றார் பெருமாள்.
“அவன் ஆம்பளை வசதிக்காரன்.. அப்படி இப்படி தான் இருப்பான். நூத்துக்கு தொண்ணூறு ஆம்பளைங்க இப்படி தான் இருக்கிறானுவ.. எவன் யோக்கியமா இருக்கான்?. ஒம்பொண்ண கட்டுன பெறவு ஒழுக்கமா இருந்துட்டு போறான். ஒன் வூட்ட பாத்தியா.. குடிசையில அங்கங்க ஓலைக்கூட பிஞ்சு போய்.. அத உடு.. ஒம்பொண்ணுக்கு மூணு வேளை சோறு ஒழுங்கா போட முடியுதா ஒன்னால..? யோசிச்சு சரின்னு சம்மதம் சொல்லு பெருமாளு.. ஒனக்கு ஒரு பைசா செலவு இல்ல.. ஒம்பொண்ணுக்கு நகைநட்டு, பட்டு பொடவை மொதக்கொண்டு அவங்களே போட்டு கல்யாணம் பண்ணிக்குவாங்க..!”
“வேண்டாங்க.. நான் இதுக்கு ஒத்துக்க முடியாது..!”
“ஒனக்கு 50,000 ரூவா தர பேசியிருக்கேன். வாங்கிகிட்டு ஒன் குடிசைய சரிபண்ணு.. மூணு வேளை சாப்பாடு ஒம்பொண்ணு கையால சமைச்சு ஒனக்கு வந்துடும்.. கால்மேல கால போட்டுக்கிட்டு கடைசிக் காலத்தை நிம்மதியா தள்ளுவியா..! அது உட்டுப்போட்டு, அது இதுன்னு சொல்லிக்கிட்டு கெடக்காத...!”
“என் முடிவு இதுதான் பாண்டி.. இவ்வளவு கஷ்டத்திலும் என் பொண்ண நான் கடன வுடன வாங்கி பள்ளிக்கூடம் வரை படிக்கவச்சு.. இப்ப வூட்ல இருந்தே கரஸ்பாண்டுல காலேசு படிக்குது.. எங்க நெலமை இப்படியே இருந்துறாது.. படிப்ப முடிச்சு பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை கெடைக்கும்.. அப்ப என் பொண்ண நல்ல இடத்துல கட்டி வைப்பேன்..!”
“என்ன சொல்றான் கெழவன்..?” என்றபடி நெருங்கி வந்தான் முத்து.
“ஒன்னும் பிடிக்கொடுக்க மாட்டேங்கிறான்..”
இதோ பாரு பெருமாளு தானா வந்த மகாலட்சுமிய எட்டி உதைச்சிறாத..! முத்து தம்பி எவ்வளவு நேர்மையா, மொறையா வந்து கேக்குது. நினைச்சா தூக்கிட்டு போய் தாலி கட்டலாம். இருந்தாலும் பெத்தவனாச்சே.. நாளைக்கு மாமனாரா ஆவப்போறன்னு மருவாத கொடுத்து பேசுனா இப்படி மொரடு புடிக்கிறியே!!?
“ஓ.. இந்தாளு மொரடு வேற புடிக்கிறானா..? உனக்கு நாளை ஒரு நாளு டைமு மாமே..!
பட்டாளத்திலிருந்து எந்தம்பி நாளை ரவைக்கு மதுர வந்து இறங்குறான்.. நாளைக்கு சாயங்காலம் நான் மதுர போய், உம்பொண்ணுக்கு அதான் வரப்போற என் பொஞ்சாதிக்கு தாலியும், புடவையும் வாங்கிக்கிட்டு, அப்படியே தம்பியையும் கூட்டிக்கிட்டு கடசி பஸ்ஸ புடிச்சு ஊரு வந்து சேருவோம்.. மறுநாளு காலைல வெள்ளனே 6 மணிக்கு என் தம்பியோட ஒன் வீட்டு வாசல்ல வந்து நிப்பேன்.. அப்பையும் நீ ஒத்துக்குல வையி.. பொண்ண தூக்கிடுவேன்.. குறுக்க வந்து தடுத்தீன்னா தம்பி மிலிட்டரி துப்பாக்கியால போட்டு தள்ளிடுவான் சாக்கிரதை..
என்ன வரட்டா.. எங்கூட்டு மருமவள பத்திரமா பாத்துக்க.. வாய்யா பாண்டி போவலாம்.. டேய்.. வாங்கடா..!”
முத்து அவன் பரிவாரத்துடன் கிளம்பிய பிறகு, நடுங்கும் உடலோடு குடிசையின் உள்ளே பெருமாள் நுழைய... சந்திரா முழங்காலிட்டு சத்தமில்லாமல் அழுதுகொண்டிருப்பதை பார்த்து அவளருகில் அமர்ந்து.
“பாப்பா..! நான் உசுரோட இருக்கிற வரை உன்னை யாரும் எதுவும் செஞ்சிட முடியாது. தைரியமா இரு..!”
“அப்பா..! எல்லாத்தையும் நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்.. துப்பாக்கியோட வாரானாமில்ல.. எப்படிப்பா தடுப்பீங்க? நீங்களும் இந்த ஊரு பெரியவங்ககிட்ட உதவி கேட்டும், அந்த நாசமா போறவனுக்கு பயந்துக்கிட்டு யாரும் நமக்கு பேச வரல..”
“கலிகாலம் பாப்பா..”
அதை கேட்டதும்....
சந்திரா, “அப்பா.. அவன் என்னை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்றதும் சரி.. நான் சாகுறதும் சரி, எனக்கு ரெண்டுமே ஒன்னுதான்.. இன்னும் சொல்லப்போனா, செத்தா தான் எனக்கு விடுதலைன்னா அத செய்யக்கூட நான் இனி யோசிக்கப்போறதில்லப்பா..!”
“போலீஸுக்கு போகலாம்மா!!”
“போலீஸா? அது வரைக்கும் நம்மள அவன் வச்சிருந்தாதானே? மீறி போனாலும் அவன் பக்கம் தானே பேசுவாங்க.. இவன் தொல்லை பண்றான்னு புகார் கொடுக்க போனப்ப, புகார் பதியாம விரட்டி விட்டாங்களே.. !”
“பாப்பா..! இப்ப என்ன தான் பண்ண சொல்ற? தெய்வம் தான் நமக்கு துணை..!” என்று தலையில் அடித்து கொண்டு அழுதார் பெருமாள்.
அதை தடுத்து பெருமாளின் கைகளை பிடித்த சந்திரா, ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாக....
“அப்பா.. பாத்துக்கலாம் விடுங்க.. இன்னும் ஒரு நாள் முழுசா இருக்கு.. எதுவும் இல்லாட்டி இந்த ஊருல பாழுங்கிணத்துக்கு பஞ்சமா என்ன??!!” என்று கூறி வேலையை பார்க்க எழுந்ததை பார்த்து பெருமாள் கண்ணீர் வடித்தார்.
மறுநாள் இரவு...
மதுரை பெரிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி போகிற ஷேர் ஆட்டோ ஒன்றில் முத்து...
“பரமு.. ஒரு வருசம் ஆச்சு உன்ன பாத்து ..!" என உற்சாகமாக தம்பியோடு பேசிக்கொண்டு சேக்காளி நால்வரோடு ஷேர் ஆட்டோவில் தொங்கிக்கொண்டு வந்தார்கள்.
“அண்ணே.. சப்பாத்தி தின்னு தின்னு செத்துப்போன நாக்குக்கு, நம்மூர் சோறு, கோழிக்குளம்பு சாப்பிட்ட பெறவு இப்பத்தான் உசுறே வந்துருக்கு..!”
“நல்லா சாப்புடு பரமு. இருக்கிற லீவு நாளு முழுக்க உனக்கு ஆடு கோழி தான்.. மிலிட்டரி சரக்கு இன்னும் இருக்குல்ல .. இந்த காஞ்ச மாடுங்க ஒரு சரக்கு பாட்டில ஃபுல்லா காலி பண்ணிடுச்சுங்க.. கூட்டிட்டே வந்துருக்க கூடாது..!”
“போங்கண்ணே.. பரமு தம்பி கொண்டு வந்த சரக்குல நாங்க நாலு பேரும் சேர்ந்து அரை பாட்டில் தான் அடிச்சோம். நீங்களும் தம்பியும் தான் சேர்ந்து பாக்கி அரை பாட்டிலை முழுசா ஒரே கல்ப்புல அடிச்சிட்டீங்கண்ணே..!”
“ஹாஹாஹா..! அரை பாட்டிலெல்லாம் ஒரு கணக்காடா..? மதுரை ரோட்டுல நின்னு அடிச்சதால அரை பாட்டிலோட முடிஞ்சு போச்சு.. இதே நம்ம தோப்பு வூடா இருந்துச்சு வச்சிக்க, சோலோவாவே ஒரு பாட்டிலு அடிப்பான் இந்த முத்து..! டேய் குமாரு.. போர் அடிக்குது.. ஒரு பாட்ட எடுத்து உடுடா..!”
“எள்ளு வய பூக்கலையே.. ஏறெடுத்து பாக்கலையே..!” என ஆரம்பித்த குமாரின் தலையில் ஓங்கி தட்டினான் முத்து.. “என்ன லந்தா..? நாயே..!நல்ல பாட்டை பாடுன்னா ஒப்பாரியா வைக்குற..” என்றவுடன்...
“எம்புட்டு இருக்குது ஆசை..! அண்ணி மேல!” என குமார் பாட...
அட்டகாச சிரிப்பொலியோட ஆட்டோ மதுரை பேருந்து நிலையத்தை அடைந்தது.
பூஞ்சோலை கிராமத்துக்கு கடைசி பஸ் என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பஸ்ஸில் ஏறிய முத்து கும்பல்,
வண்டி நெடுஞ்சாலையில் வேகமடைந்ததும் குஷியானார்கள்.
“அண்ணே நாள இந்நேரம் எல்லாம் அண்ணியோட குஜால் தான்..!” என்றான் ஒரு அடிபொடி.
“ப்ச்ச்.. அந்த கெழவன் என்னைய ரொம்ப கடுப்பேத்திட்டான் பரமு.. இல்லன்னா முன்னாடியே சுமூகமா முடிஞ்சிருக்கும்..!”
“அண்ணே.. நீ கவலப்படாதே.. இந்த பரமு இருக்கிற வரை உனக்கு நான் தொணையா நிப்பேன்.. நாள பொழுது வெள்ளனே நேரா போறோம்.. சம்மதம் கொடுக்கலன்னா பொண்ண தூக்குறோம். குறுக்க கெழவன் வந்தா, கட்டையால அவன் காலை ஒடைச்சு நொண்டியாக்குறோம்.. ஓகேவா..!”
“டபுள் ஓகே பரமு... என் தம்பின்னா தம்பிதான்!. என்று முத்து குஷியில் குடிபோதை தலைக்கு ஏறி... “யாத்தே.. யாத்தே.. யாத்தே.. என்னாச்சோ...! அடி சந்திரா.. உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா..! கண்டா வரச்சொல்லுங்க .. அவள கண்டா வரச்சொல்லுங்க” என்று பஸ்ஸில் தாளம் போட பரமு எழுந்து ஆட்டம் போட ஆரம்பித்தான்.
பஸ் கண்டக்டர் “ஏன்.. இப்படி கலாட்டா பண்றீங்க..? மத்த பேசன்ஜர்ஸ்க்கு இடையூறா நடந்தீங்கன்னா, நடு வழியில இறக்கி விட்டுட்டுவேன்..!” என கண்டிக்க...
“டேய் யாருக்கிட்ட ஒன் கெத்த காமிக்கிற??? நான் கோக்குமாக்கான ஆளு தெரியுமில்ல.. கொன்டேபுடுவேன் பாத்துக்க..!” என பதிலுக்கு எகிறினான் முத்து.
“ஏன்ப்பா தம்பிகளா.. பஸ்ஸுல பெண்டுபுள்ளைகளாம் இருக்கு.. செத்தநேரம் அமைதியா ஒக்கார கூடாதா?” என்று ஒரு பெரியவர் கேட்டு முடிக்கும் முன், அவர் முகத்தில் ஒரு குத்து விழுந்தது. தடுக்க வந்த கண்டக்டரை பிடித்து தள்ளி விட்டதில் பஸ்ஸின் நடுவே மல்லாக்க விழுந்து கண்டக்டர் பையிலிருந்து சில்லறைகள் சிதறின. இதைக் கண்ட பஸ் டிரைவர் சடன் ப்ரேக் போட்டு, சீட்டுக்கு அடியில் இருந்த இரும்பு கம்பியை கையில் எடுத்து கொண்டு...
“டேய் எளவெடுத்த நாய்ங்களா.. அடங்க மாட்டீங்களா..? நானும் மதுரைக்காரன்தான். அடாவடியா பண்ணுறீங்க..! பஸ்ஸ விட்டு இறங்குங்கடா. இல்லன்னா மண்டையில போடுவேன்.!” என தைரியமாக முன்வர... இதைக் கண்டு மற்ற பயணிகளும் அவருடன் சேர்ந்து சத்தம் போட ஆரம்பித்தார்கள். அடிப்பொடிகளுக்கு படபடவென்றுஅடி விழுந்தது. பரமுவின் பெட்டி படுக்கைகள், முத்துவின் கல்யாண சாமான் பைகளும் பஸ்ஸிலிருந்து வெளியே இருட்டில் பறந்தன. முத்துவின் முகத்தில் எவனோ ஓங்கி குத்த பரமுக்கு முதுகில் அடி விழுந்தது. அனைவரும் வெளியே வந்து விழுந்தனர். இவர்கள் இல்லாமல் பஸ் கிளம்ப ஆரம்பிக்க... வெறியேறிய முத்துவும் அவன் சகாக்களும், ஆளுக்கொரு கருங்கல்லை எடுத்து எறிய... பஸ்ஸின் பின் பக்க கண்ணாடி உடைந்தது. மறுபடியும் பஸ் நின்று... “இவனுங்களை அடிச்சு கொல்லனும்டா” என்றபடி உள்ளே உள்ள பயணிகளும், கண்டக்டர், டிரைவரும் கையில் இரும்பு தடியோடு இறங்க.... கையில் பையை எடுத்துக் கொண்டு இருட்டு வயக்காட்டில் கண் மண் தெரியாமல் ஆளாளுக்கு பிரிந்து ஓட ஆரம்பித்தனர்.
மறுநாள் விடியற்காலையில் வேப்பங்குச்சியை பல்லில் கடித்தவாறு காலைக்கடன் கழிக்க வயக்காட்டோரம் வந்த ஊர் பெருசு ஒன்று, அந்த பாழடைந்த கிணற்றில் கிடந்த உடல்களை கண்டு திடுக்கிட்டு ஊரையே கூட்டினார்...
கும்பல் கூடி...
“யாரு என்னன்னு மொகம் சரியா தெரியலையே! பொணம் குப்புற கெடக்கு.!!?”
“போலீஸுக்கு தகவல் சொல்லிட்டீங்களாப்பா?”
“அவங்க வரதுக்கு முன்ன யாராச்சும் கிணத்துல குதிச்சு யாருன்னு பாருங்கப்பா...”
“யோவ் ..பாழடைஞ்ச கிணறு.. அப்படியே எல்லாம் குதிக்க முடியாது.. கயித்த கட்டி ஆள இறங்குங்க..!” என பல குரல்கள் நொச நொசவென்று பரவின. கயிற்றை உடலில் கட்டி உள்ளே இறங்கிய இளவட்டம் ஒருவன், உடல்களை திருப்பி போட்டு முகத்தை பார்த்து... “ஐயய்யோ இது நம்ம முத்து அண்ணனும், பரமுவும்..!” என்று சத்தம் போட்டதில் கூடியிருந்த கூட்டமே அதிர்ந்தது.
அதிர்ச்சி அடைந்த முகங்களில் ஒரு முகம் மட்டும் ஆச்சரியத்துடன் கூட்டத்திலிருந்து விலகி, மொபைலை எடுத்து கால் செய்தது. மறுமுனையில்... “அலோ.. நீங்க சொன்ன மாதிரி, நேத்து நைட்டே நானும், பாப்பாவும் பஸ் ஏறி இப்பதான் திருச்சி பஸ் ஸ்டாண்டுல இறங்குறோம். நீங்க சொன்ன வெலாசத்துக்கு போக இனிமே தான் ஆட்டோ புடிக்கனும்.. அங்க ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லீல்ல...! ஒங்க உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன்.. தெய்வம் மாதிரி ஊர விட்டு போக யோசனை சொல்லி, செலவுக்கு 10,000 பணமும் கொடுத்து பஸ் ஏத்தி விட்டீங்க... !” என்று தழுதழுத்த குரலில் பெருமாள் பேச...
“அட இருப்பா.. இனி நீ எங்கேயும் ஓடி ஒளிய வேணாம்.. மொதல்ல ஏதாவது ஓட்டல்ல டிஃபனை முடிச்சிக்கிட்டு, அடுத்த பஸ்ஸ புடிச்சு ஊரு வந்து சேரு... உன்ன புடிச்ச சனி, இன்னையோட ஒழிஞ்சு போச்சு..!” என்று சொல்லியபடி ஃபோனை வைத்து புன்னகைத்தார் முத்துவின் சகா பாண்டி.
டேய் முத்து.. கூடவே இருக்கிறவன்னு கூட பாக்காம, என் சித்தப்பா பேத்தி மேலயே கை வைக்க பாத்தீல்ல. அப்ப தாண்டா முடிவு பண்ணேன்.. இனி நீ கண்ணு வைக்குற பொண்ணுங்கள காப்பாத்தனும்னு... ஆனா, ஆண்டவனே நீ பண்ண பாவத்துக்கு, ஆப்பு வச்சிட்டான் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார் பாண்டி.
மறுநாள் செய்தித்தாள்களின் இரண்டாம் பக்கத்தின் மூலையில்...
“மதுரை பஸ்ஸில் குடிப்போதையில் கலாட்டா செய்து பஸ் கண்ணாடியை உடைத்த சகோதரர்கள்.. பயணிகள் துரத்தியதில் இருட்டில் ஓடி வந்து பாசன கிணற்றில் விழுந்து இறந்து போன பரிதாபம்..” என்ற செய்தி வெளியாகியதை, பூஞ்சோலை கிராமத்தின் டீக்கடையில் உட்கார்ந்திருந்த பெருமாள் எழுத்து கூட்டி படித்துக்கொண்டிருந்தார்.
Leave a comment
Upload