தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஆக்சிஜன் தட்டுப்பாடு... தொடரும் மரணங்கள்... அலட்சிய அரசு...! - தில்லைக்கரசி சம்பத்

20210407154949762.jpeg

இந்த வாரத்தில், டெல்லி உயர் நீதிமன்றம்... டெல்லிக்கு தேவைப்படும் ஆக்சிஜனை ஏன் விநியோகம் செய்யவில்லை என்று விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்.

“டெல்லிக்கு வழங்க சொன்ன 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எங்கேய்யா?”
என மத்திய அரசை, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபின் சங்கி கேட்க... “டெல்லிக்கு 700 மெ.டன் வழங்கும் அளவுக்கு மருத்துவ கட்டமைப்பு அங்கே இல்லை. அதனால் வழங்கவில்லை” என்று மத்திய அரசு சார்பில் கூறியதில் கடுப்பான நீதிபதி.... “நீங்கள் வேண்டுமானால், நெருப்பு கோழி போன்று மண்ணில் தலையை புதைத்து கொள்ளலாம். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம். மக்கள் மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். பதில் சொல்லுங்கள்... என நீதிபதி வறுத்தெடுத்தார்.

டெல்லி அரசின் சார்பில் வாதாடிய ராஹுல் மெஹ்ரா, “1600 மெ.டன்-க்கும் அதிகமான ஆக்சிஜனை கொண்டு செல்லும் அளவுக்கு நம்மிடம் டேங்கர்கள் இருக்கிறன. நாங்கள் கேட்பதோ அந்த அளவில் மூன்றில் ஒரு பங்கான 700 மெ.டன். நம் நாடு ஆக்சிஜன் உற்பத்தியில் மட்டுமே உபரி இல்லை, டேங்கர்களும் (கிரையோஜெனிக், நைட்ரஜன் மற்றும் ஆர்கான் டேங்கர்கள்) உபரியாக இருக்கும் நாடு. டெல்லிவாசிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே... ஏப்ரல் 30, மத்திய அரசு, டெல்லிக்கு 700 மெ.டன் ஆக்சிஜன் தினமும் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும், வெறும் 400 மெ.டன் மட்டுமே மத்திய அரசு அளிக்கிறது. அதுவும் சொல்லப்பட்ட ஒரே நாளில் கூட தருவதில்லை என்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது.”

“எதற்காக தேவையில்லாத வாக்குவாதம்?” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா கூறியதை கேட்டு, கடுப்பான நீதிமன்றம்... “நீங்கள் குருடர்களாக இருக்கலாம். ஆனால், நாங்கள் அப்படி இல்லை.. எப்படி உங்களால் இப்படி அறிவுக்கெட்டத்தனமாக பேச முடிகிறது?” என்று சேத்தனை கடுமையாக கண்டித்தனர்.

2021040715500892.jpeg

மேலும் நீதிபதிகள்...

“முழு நாடும் ஆக்சிஜனுக்காக கதறி கொண்டிருக்கிறது. உங்களால் ஆக்சிஜன் விநியோகத்தை ஒழுங்கு முறையில் செய்ய முடியாவிட்டால், டேங்கர் வண்டிகளை ஐஐடி, ஐஐஎம் நிர்வாகங்களின் பொறுப்புகளில் விடுங்கள். அவர்கள் உங்களை விட சிறப்பாக வேலை செய்வார்கள். இது தொடர்பாக நாளை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் சுமிதா த்பாரா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டது.

மறு நாள்... டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தப்பிக்க, மத்திய அரசு... அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தை அணுகி, தடை வாங்கியது.

உச்சநீதிமன்றம் தடை விதித்தாலும், பியூஷ் கோயலிடம் “ஏன் ஆக்சிஜன் விநியோகம் சொன்னபடி நடக்கவில்லை?” என்று கேட்டதற்கு...

அவர், “மிகப் பெரிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் ஒன்று மூடப்பட்டிருக்கிறது. அத்துடன் தேவையான எண்ணிக்கையில் கன்ட்டெய்னர்களும் இல்லை” என்று பதில் அளித்து... எங்கள் ஆட்சியின் லட்சணம் இதுதான் என்று வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறார்.

இந்தியாவில் ஒரு நாளில் ஆயிரக்கணக்கான டன் அளவில் ஆக்சிஜன் உற்பத்தி நடக்கிறது. ஆனால், அதை விநியோகிப்பதில் தட்டுப்பாடுகள் இருந்தாலும்... போர்க்கால அடிப்படையில், அதை அரசு சரி செய்ய வேண்டாமா?

இதில் இன்னுமொரு கொடுமை என்னவென்றால்... ஆக்சிஜன் இல்லாமல் அல்லல்படும் இந்தியர்களுக்கு, வெளிநாடுகள் மருத்துவ சாதனங்கள் முதல்... மருந்துகள் வரை அனைத்தும் அனுப்புகின்றன.

சிங்கப்பூரிலிருந்து மருத்துவ உதவிகள் இந்தியாவிற்கு ஏப்ரல் 25ஆம் தேதி வந்தடைந்துவிட்டது. ஆனால், மத்திய அரசு மே 2-ம் தேதிதான் வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகளை கையாள்வதற்கான “இயக்க நெறிமுறைகளை” (SOP) அறிவித்து “சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை” ஒருங்கிணைக்க ஆணை பிறப்பித்தது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.

2021040715502865.jpeg

இன்னொரு கொடுமையாக...

கடந்த ஒருவாரமாக, அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி வாக்கில், இந்தியாவில் உள்ள SAIL எஃகு ஆலைகளில் மட்டும் சுமார் 16,500 டன் மருத்துவ திரவ ஆக்சிஜன், சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது என்று எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகள் அதிகமாக இருந்த 12 மாநிலங்களில் உள்ளவர்களுக்கு தேவைப்பட்ட ஆக்சிஜனின் அளவு வெறும் 4,880 டன். ஆனால், சேமிப்பில் இருந்த கையிருப்பு.... தேவையை விட மூன்று மடங்கு அதிகம்.

16,000 டன்களை கொண்டு செல்வதற்கான 1,200 வாகனங்கள் நம்மிடம் உள்ளன, இருந்தும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால்... பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

“மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்காததால் ஏற்படும் கொரோனா நோயாளிகளின் மரணங்கள், ஒரு கிரிமினல் செயல். இனப்படுகொலைக்கு சற்றும் குறைவானது அல்ல....” - அலகாபாத் உயர் நீதிமன்றம் தெறிவித்திருக்கிறது. ஐயா நீதிபதி அவர்களே... உங்கள் மாநில முதல்வர் யோகி, “ஆக்சிஜன் இல்லாமல் சாவது கூட பரவாயில்லை... ஆனால், வெளியே உதவி தேவை என்று கேட்டால்... இருக்கும் சொத்தை பிடுங்கி, சிறைக்குள் தள்ளிவிடுவேன்” என்று அறிக்கை விட்டிருக்கிறார். கவனம் நீதிபதி ஐயா..!

இதற்கிடையில்... தமிழ்நாடு கோவிட் சிகிச்சைகளில் முன்னணியில் இருக்கிறது என்ற நினைப்பில் மண்ணை அள்ளி போட்டிருக்கிறது, இந்த வாரம் வந்துக் கொண்டிருக்கும் அதிர்ச்சி செய்திகள். செங்கல்பட்டு அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளில், 13 பேர் 5-ம் தேதி இரவு ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் உயிரிழந்தார்கள். தமிழ்நாட்டின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான இதில், 425 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை கொண்டவை.

“இந்த மரணங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படவில்லை. ஆக்ஸிஜன் தேவைப்படும் பிரிவில் 309 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 50 பேர் வென்டிலேட்டரில் உள்ளனர். 259 பேர் குழாய் மூலம் ஆக்ஸிஜன் பெற்று வருகின்றனர். இவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நேரிட்டிருந்தால் மிகத் தீவிரமாக ஆக்ஸிஜன் தேவைப்படும் இவர்கள், உயிரிழந்திருக்க மாட்டார்களா..?” என கேள்வி எழுப்புகிறார் மருத்துவமனை டீன் முத்துக்குமரன்.

“செங்கல்பட்டு மருத்துவமனையில் 20,000 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள ஆக்ஸிஜன் கொள்கலன் இருக்கிறது. உயிரிழந்த 13 பேரில், ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர். மீதமுள்ள 12 பேர், வைரல் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள்” என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. இவர்கள் கொரோனா நோயாளிகளாக இருந்தால், இவர்களது உடல் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டிருக்க மாட்டாது. ஆனால், 11 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்று நிர்வாகம் கூறுகிறது.

சேலத்திலும் பல நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியோடு ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுத்துக்கொண்டிருக்கும் காட்சிகளை காண முடிகிறது.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் “மதுரையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால், 10 நாட்களில் நிலைமை கைமீறி விடும்” என அவர் ட்விட்டர் பதிவிட்டதோடு, கேரளாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவருவதற்கு முயற்சியும் மேற்கொள்கிறார். பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும், கோவைக்கு கேரளாவிலிருந்து ஆக்சிஜன் தருவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

20210407155051172.jpeg
திருப்பத்தூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது.

‘மருத்துவ அவசர நிலை’ என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்நோயின் தீவிரம் இருப்பதால், அவசரமாக ‘கட்டளை மையம்’ (WAR ROOM) ஒன்றை உடனடியாகத் திறந்து.... ஆக்சிஜன் தேவை, அதன் இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு - தேவை ஆகியவற்றைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் தெரிந்து - ஒருங்கிணைந்து செயல்படும் கட்டளை மையம் உருவாக்குகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

வரும் வாரங்களில்... தமிழகமும், டெல்லி போன்று மோசமாக மாற வாய்ப்புள்ளது.

அடுத்து தமிழகத்துக்கு பெரும் இடியாக.... தேசிய சுகாதார முகமையின் இயக்குனர் டாக்டர் சஞ்சய் ராய் அவர்கள் மே 5 தேதியிட்டு வெளியிட்டுள்ள “மாநிலங்களுக்கான மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டம்” அறிவிப்பில் தமிழகம் கேட்ட கூடுதல் ஆக்சிஜன் ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே 280 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் கோவிட் பரவி, ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால், மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி 500 மெ.டன் கூடுதலாக தமிழகத்துக்கு தேவைப்படும் என்ற நிலையில் கோரிக்கை வைக்க... “முடியாது” என்று கைவிரித்திருக்கிறது மத்திய அரசு. இனி எப்படி சமாளிக்க போகிறோம் என்று தமிழக மருத்துவர்கள் கலவரமடைந்திருக்கிறார்கள்.

ஏதோ கொஞ்சமாவது நெஞ்சில் ஈரமிருக்கும் நீதிபதிகள் நாடு முழுவதும் இருந்து, மத்திய அரசை இடித்துரைக்கிறார்கள். ஆனால், உரைக்குமா என்று தெரியவில்லை.

இந்தியாவில் சினிமா அரங்குகளில் ஹவுஸ் ஃபுல் என்ற அறிவிப்பை நாம் பார்த்திருக்கிறோம்....

ஆனால், இடுகாட்டில் ஹவுஸ் ஃபுல் என்று யாராவது பார்த்துண்டா? இப்போது நாடே பார்க்கிறது. கோடீஸ்வரன் ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல் அவ்வளவு பேரும் மருத்துவமனை வாசலில் நின்று உயிருக்காக கதறுகிறார்கள்.

இரண்டாவது அலை மோசமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தும்... அலட்சியமாக இருந்த மத்திய அரசு, இப்போது திக்குமுக்காடி நிற்கிறது. என்ன... சும்மா மத்திய அரசையே குறை சொல்லுகிறீர்கள்.. எனக் கேட்டால்... ஆமாம்..! தடுப்பூசியை பரவலாக்காமல், இரண்டே நிறுவனங்களுக்குத் தயாரிக்க தந்தது, ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் போன்ற உயிர் காக்கும் மருந்துகள் என அனைத்து விஷயங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மத்திய அரசை கேட்காமல்... பக்கத்து பாகிஸ்தானையா நம் மாநில அரசுகள் கேட்பார்கள்? பத்தாததற்கு... மத்திய அரசுக்கு
2021 ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.41 லட்சம் கோடிகள் அதிகபட்ச வசூலாம்.

இவ்வளவு கோடிகளை ஜி.எஸ்.டி. மூலம் கொட்டி, உழைக்கும் மக்கள் தான், இப்போது ஒவ்வொரு மருத்துவமனையின் வாசலில் நின்று காப்பாற்றுங்கள் என அழுகிறார்கள்.

மத்திய அரசின் மீது பல விமர்சனங்கள் இருக்கின்றன....

கொரோனாவுக்காக வசூல் செய்த பிஎம்கேர்ஸ் நிதி எங்கே..? என்ன செய்தீர்கள்? என்று கேட்க கூட நாதியற்று மக்கள் நிற்கிறார்கள். கூகுளின் சுந்தர் பிச்சையிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் வரை இந்தியாவுக்கு உதவும் நிதியை பிஎம்கேர்ஸுக்கு அளிக்காமல், மிக கவனமாக யூனிசெஃப்க்கு கொடுத்திருக்கிறார்கள். அதிலும் 50,000 டாலர் பணத்தை, பேட் கம்மின்ஸ் பிஎம்கேர்ஸுக்கு கொடுப்பதாக முதலில் அறிவித்து... பின் அந்தர் பல்டி அடித்து, நானும் யூனிசெஃப்க்கே அளிக்கிறேன் என்று சொல்லி... “என் பணம் தப்பித்தது!” என்று ஆசுவாசமடைந்திருக்கிறார்.

இது நமக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்பதை விட... பிஎம்கேர்ஸ் நிதி, சத்தியமாக‌ கோவிட் பாதித்த இந்திய மக்களுக்கு போய் சேராது என்று வெளிநாட்டினர் நம்புகிறார்கள் என்பது வேதனையான விஷயம்.

இந்த கெடுபிடியான காலகட்டத்தில் கூட... நிற்காமல் நடக்கிறது, மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் ரூ.13,450 கோடியில் கட்டப்பட்டு வரும் இந்திய பிரதமர் இல்லம். “2022 டிசம்பரில் முடிக்கப்பட்டு விடும்” என்று அறிவித்துள்ளார்கள்.

“எது..? கோவிட் சிறப்பு மருத்துவமனைகளா? வரப்போகும் 3 வது கோவிட் அலைக்கான முன்னேற்பாடா?” என்று நம்பிக்கையோடு கேட்கிறீர்களா? ஐயோ பாவம் நீங்கள்.!