தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

அடக்கம் தேவை...

தமிழ்நாட்டில் திமுக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றி பெற்று, ஆட்சியை அமைத்து இருக்கிறது. திமுகவின் முக்கியக் கொள்கை.. கடமை.. கண்ணியம்.. கட்டுப்பாடு.. இதை தொண்டர்கள் மறந்து விட கூடாது என்று அண்ணா அடிக்கடி சொல்வார்.

வெற்றிச் செய்தி வரும்போதே அங்கொன்று இங்கொன்று என்று திமுக தொண்டர்களால், சில வேண்டத்தகாத சம்பவங்கள் நடந்திருக்கிறது. குறிப்பாக முகப்பேரில் அம்மா உணவகத்தில் நடந்ததை திமுக தலைமை கண்டித்து, அவர்களை கட்சியை விட்டும் நீக்கி இருக்கிறது.

இதேபோல் சமூக வலைத்தளங்களில், ஏற்கனவே செந்தில் பாலாஜி சொல்லியதைப் போல் காவிரி ஆற்றுப்படுகையில் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் மணல் அள்ளும் காட்சி வைரலாக பரவுகிறது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன போது... அப்போது எடப்பாடிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின், மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்ததுதான் ஜனநாயகம், அத்தகைய ஜனநாயகத்தை காப்போம் என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இது உண்மையில் ஒரு புது முயற்சி. இரண்டு திராவிட கட்சிகளும், கடந்த 10 ஆண்டுகளாக எலியும் பூனையுமாக இருந்தது தான் வரலாறு.

பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை, இவர் திமுக ஆதரவு.. அவர் அதிமுக ஆதரவு என்று தரம் பிரித்து பார்ப்பது ஆட்சியாளர்களின் வழக்கம். இது ஜெயலலிதா அறிமுகப்படுத்தியது. அதை கலைஞரும் செயல்படுத்தினார். அந்தப் போக்கை புது முதல்வர் ஸ்டாலின் மாற்ற வேண்டும். யார் திறமையானவர் என்ற அளவுகோலை மட்டும் அவர் பயன்படுத்தினால், அவர் விரும்பும் நல்லாட்சியை நிச்சயம் தரமுடியும்.

அண்ணா முதல்வராக பதவியேற்றபோது அவர் பெரிதாக அதிகாரிகளை மாற்றவில்லை. முந்தைய ஆட்சியில் இருந்த அதிகாரிகளே தொடரட்டும் என்றார். அந்த மனப்பான்மை தான் இப்போது தேவை. தேவையின்றி அதிகாரிகள் பந்தாடுவது நிறுத்தி, புதிய நிர்வாகத்தை ஸ்டாலின் அறிமுகப்படுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவருடன், முதல்வராக பொறுப்பேற்றதும் முதல்வர் ஸ்டாலின் காணொளியில் பேசும்போது... பொய்யுரை, புகழுரைகளை கேட்க விரும்பவில்லை. அதிகாரிகள், உள்ளதை உள்ளபடி கூறி பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை ஸ்டாலின் ஆட்சியின் கடைசி நிமிடம் வரை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இது வெறும் சம்பிரதாய வார்த்தை அல்ல என்பதை அவர் செயல்பாடு எல்லோருக்கும் உணர்த்த வேண்டும்.

இதேபோல் தொண்டர்களுக்கு, ஸ்டாலின் கடமை.. கண்ணியம்.. கட்டுப்பாடு.. பாடத்தை மீண்டும் சொல்லித்தர வேண்டும் போலிருக்கிறது. இதற்கு இன்றைய பதவியேற்பு விழாவே ஒரு உதாரணம். சமூக இடைவெளியின்றி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களே சாட்சி.

1967இல் திமுக முதன்முதலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, அண்ணா வெற்றியைக் கொண்டாடுங்கள்... ஆனால், அடக்கம் தேவை என்றார். அது இப்போதும் பொருந்தும்.