
யோவ்.. இங்க வா! இதை போட்டுக்க, 202 எண் கொண்ட கைதி உடையை கொடுத்தனர்.
ஒழுங்கு மரியாதையா இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கனும். அங்கே போ! உடல் பரிசோதனைக்கு டாக்டர் வருவார் என்று விரட்டினர் காவலர்.
மருத்துவர் வந்த பின்... அவரது உடல் முழுபரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவரே பேச்சுக் கொடுத்தார்.
உங்கள் பெயர்?
முத்துராமன் என்றார்.
படிச்சு இருக்கீங்களா?
இல்லை கைநாட்டு.
என்ன குற்றம் செஞ்சீங்க?
கொலை பண்ணினதா சொல்றாங்க!
யாரை?
என் மனைவியை.
காரணம்?
நான்தான் பண்ணலையே...
அன்றைக்கு போதையிலே சண்டை போட்டது என்னவோ உண்மைதான். ஆனா, ஒரு உயிரைக்கொலை செய்கிற அளவுக்கு நான் முட்டாள் இல்லைங்க.
அப்போ நீங்க பண்ணலையா..?
இல்லைங்க! சந்தர்ப்பம், மற்றும் பொய் சாட்சிகளின் அடிப்படையில் தண்டனை வழங்கி என்னை அடைத்துள்ளனர்.
ஒரு வித நமட்டுச் சிரிப்புடன் வெளியேறினார் டாக்டர்..
தனது சிறை அறைக்கு திரும்பிய கைதி முத்துராமன்...
மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்துக்கொண்டிருக்கும்போது, தனது மனநோயாளியான ஒரே தம்பி, வேறொரு வீட்டு வாசலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததைப் பார்த்தான். வீட்டில் மனைவி ராதா தூங்கிக்கொண்டு இருப்பதைக்கண்டு, கடுங்கோபமுற்று அவளை எழுப்பி, என் தம்பி என்ன அனாதையாடி..? ஒரு வாய் சோறு கூட உன்னால் போட முடியாதா என்று கேட்டு, அவளை கோபாமாகப் பேசி, அடித்துவிட்டு, போதையில் பட்டினியுடன் படுத்துவிட்டேன்.
போலீஸ் வந்து எழுப்பியதும்தான் தெரிந்தது, மனைவி கொலை செய்யப்பட்டாள் என்றும், நான்தான் அடித்துக்கொன்றதாக கூறி என்னை பிடித்து காவலில் வைத்துவிட்டார்கள். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது, என்று கொலைக்குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கும் முர்துராமன் சக கைதிகளிடம் கூறிக்கொண்டிருந்தான்.
பேப்பர்ஸ் எல்லாம் அனுப்பி வைக்கிறேன், பெயில் பேப்பர்னு சொல்லி முத்துராமன்கிட்ட கைநாட்டை வாங்கிடுங்க. எந்தச் சந்தேகமும் யாருக்கும் வரக்கூடாது. வேலை முடிஞ்சதும், கரண்ட் வெச்சு முடிச்சிடுங்க என்று டாக்டர் சொன்னதும்...
அப்ப அவன் தம்பி? என்றார் ஜெயிலர்.
ஒரு மாதம் போகட்டும்... அவன் மனைவியையே முடிச்சாச்சு.
அவன் தம்பி ஒரு மனநோயாளிதானே, அவனை நான் பார்த்துக்கிறேன் என்றார் டாக்டர்.
அப்ப நம்ம டீல்.. என்ற ஜெயிலரிடம்,
வேலையெல்லாம் சுமூகமா முடியட்டும், உங்கள் பங்கு தேடி வரும் என்று டாக்டர் சொன்னதை, நான்கு சுவர்கள் மட்டும் காதில் வாங்கவில்லை... அறையை சுத்தம் செய்துக்கொடிண்டிருந்த மற்றொரு கைதியின் காதுகளும்தான்.
ஏம்பா 202, அந்த டாக்டரை உனக்குத் தெரியுமா..?
தெரியாது.
அவனுக்கும் உனக்கும் என்ன பகை. அவங்க பேச்சை வச்சு பார்த்தால், உன் மனைவியை அவங்கதான் முடிச்சிருக்காங்க.
உன் தம்பியை வெளியேயும், உன்னை உள்ளேயும் முடிக்க பிளான் பண்றாய்ங்க. நீ என்னடான்னா.. இப்படி வெள்ளந்தியா, அந்த டாக்டர் யாருன்னே தெரியலைங்கிறே என்றான்.
நிஜமா தெரியாதுங்க என்றார் முத்துராமன்.
இவருதான் டவுன்ல பிரபல ஹார்ட் டாக்டர் செல்வராஜ். இவரோட ஆஸ்பிட்டால், பைபாஸில் பெரிய இடமா விஸ்தாரமா இருக்குமே, அதுதான் என்றதும்... முத்துராமனுக்குப் பொறித்தட்டியது,
இப்போதான் எனக்கு புரியுது... பைபாஸ் ரோட்டை ஒட்டி எங்க பூர்வீகச்சொத்து, சுமார் ஐந்து ஏக்கர் ஆஸ்பத்திரி அருகே இருக்குது. அதை ஒரு டாக்டர் வாங்க விரும்புவதாக என்னிடம் கொஞ்ச நாள் முன்னாலே தரகன் ஒருவர் வந்துப்பேசினார். நான் அது விளைநிலம், அது தருவதற்கில்லை என மறுத்திட்டேன். அதுதான் காரணமா இருக்குமா என்றான்.
என்ன விலை போகும்..?
சுமாரா ஒரு கோடி போகும். நானும் என் தம்பியும்தான் வாரிசு. என் தாத்தா காலத்திலிருந்து அதில் விவசாயம் செய்து வருகிறோம் என்றார் முத்துராமன்.
அதேதான், உள்ளே நீ ஜாக்கிரதையா இருந்துக்க, ஆனா, உன் தம்பியை யார் பார்த்துப்பா என்றான் சககைதி.
அதான் எனக்கு கவலையே என்றார்..
நீ உன் அட்ரஸைக்கொடு... உன் தம்பியை பத்திரமாக தங்கவைக்க ஏற்பாடு நான் செய்கிறேன், என்று கருணைக் காட்டினான் சக கைதி.
கருணையுள்ளவர்கள் உள்ளே சிறையில் இருக்க... இருதயமில்லா மிருகங்கள், இருதய மருத்துவராக வெளியே நடமாடுகிறது என்று நினைத்த முத்துராமன்... அதோட இன்னொரு வேலையும் எனக்காக செய்யனுமே என்று கேட்டான்.
என்ன செய்யனும் சொல்லு...
ஒருவேளைச் சோறு தம்பிக்கு கிடைக்காததற்கே, நான் குற்றம் செய்யாமலே சிறைத்தண்டனை அனுபவிக்கின்றேன். அவனைக் கொல்ல துணிந்தவனை, நான் சும்மா விடுவேனா?
அந்த டாக்டரை போடச்சொல்லு, நான் அந்த நிலத்தை வித்தாவது உனக்கு பணம் தருகிறேன் என்றான் முத்துராமன், கண்களில் கொலை வெறியோடு….

Leave a comment
Upload