தொடர்கள்
பொது
கள்ளக்குறிச்சியில் ஆதிவராகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!-மாலாஶ்ரீ

20260030171327573.jpeg

பண்டைய இந்து புராண வரலாற்றின்படி சோமுகன் என்ற அரக்கன், தேவர்களிடம் இருந்து வேதங்களைத் திருடிச் சென்றுவிட்டார். இதுபற்றி விஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டனர்.

இதையடுத்து, இந்த இடத்தில் ரங்கநாதராக நீரில் இருந்து விஷ்ணு தோன்றி, சோமுக அரக்கனிடம் இருந்து வேதத்தை மீட்டார். மேலும் அவர், இந்த இடத்திலிருந்து பிரம்மாவுக்கு அருளியதாகவும் கூறப்படுகிறது.

வேறொரு கதையின்படி, இந்த இடத்தில் சூரகீர்த்தி என்ற மன்னன் குழந்தை வரம்வேண்டி விஷ்ணுவை வேண்டி குழந்தைப்பேறு பெற்றார். இந்த இடத்தில் விஷ்ணுவை வேண்டி சாபவிமோசனம் பெற, சந்திரனால் இங்கு புஷ்கரணி குளம் நிறுவப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் உள்ள ஆதிவராகப் பெருமாள் கோயில் 2 ஏக்கர் பரப்பளவில், இரண்டு திருச்சுற்றுகளுடன் அமைந்துள்ளது. இதன் கருவறையில் உள்ள ரங்கநாத பெருமாளின் உருவமானது, 29 அடி சுதையில் சயன கோலத்தில் உருவானவரே என்றாலும், தைலக்காப்பு இன்றி, இன்றுவரை அழகாக இருக்கிறார்.

2026003017145773.jpeg

இவர் நீட்டிப் படுக்க 24 அடி நீளமுள்ள படுக்கை வடிவமைக்கப்பட்டது. இதன் தலைப்பகுதியில் ஆதிசேஷன், தன் 5 தலைகளுடன் குடையாக உள்ளது. ஶ்ரீதேவியின் மடியில் தலை சாய்த்து, பூதேவி அடிவருட விஷ்ணு பள்ளிக்கொண்டிருக்கிறார்.

மேலும், தலைப்பகுதியில் கருடன் வணங்கிய கோலத்தில் உள்ளார். வலக்கையைத் தலைக்கு வைத்து, இடக்கையை உயர்த்தி பிரம்மாவுக்கு உபதேசிக்கிற நிலையில் விஷ்ணு உள்ளார். கருவறை முன்பு ஆழ்வார் மண்டபம் உள்ளது. தாயார் ரங்கநாயகிக்கு தனியே ஒரு கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் தென்கிழக்கு மூலையில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் செங்கல்லால் கட்டப்பட்ட வரலாற்று கால தானிய சேமிப்பு களஞ்சியம் இன்றுவரை உள்ளது. இக்களஞ்சியமானது ஶ்ரீரங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், பாபநாசம் பாலைவனநாதர் கோயில்களில் உள்ளது போல் அமைந்துள்ளது.

இது, கோயிலுக்கு விவசாயிகள் அளிக்கும் தானியங்களைச் சேமித்து வைப்பதற்கு கட்டப்பட்டிருக்கிறது. கருவறையைச் சுற்றிலும் கோதண்டராமர், அனுமன் மற்றும் கிருஷ்ணர் சன்னதிகள் உள்ளன.
இக்கோயிலில் வைணவர்கள் கொண்டாடக்கூடிய வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி மற்றும் ஆடிப் பூரம் ஆகிய நாட்களில் விழாக்கள் நடைபெறுகின்றன. நீண்ட காலமாக முதன்மையான கோயில் திருவிழாவான பிரமோற்சவம் எனும் தேர் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆண்டாண்டு காலமாக செங்குந்த முதலியார் மரபினர் சீர்பாதம் சேவை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதி திருவரங்கம் ரங்கநாத சுவாமி எனும் பழைய ஶ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயில் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய பெருநகரங்களுக்கு இடையே அமைந்துள்ள வைணவ திருத்தலமாகும்.

இக்கோயிலின் தல வரலாறு, திருச்சி அருகே ஶ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாதப் பெருமாள் கோயில் அமைவதற்கு முன்பே அமைந்திருப்பதாக கூறுகின்றன. இக்கோயிலில் அரங்கநாதர் பள்ளி கொண்ட நிலையில் அமைந்ததாகவும், அதன்பிறகுதான் ஶ்ரீரங்கம் அதேபோல் அரங்கநாதர் பிரதிஷ்டை உருவானதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிவராகப் பெருமாள் கோயிலில் கடந்த 28-ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிக கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.