.நம்ம கோவையில் உள்ள உலக பிரசித்திபெற்ற இடம் ஈஷா யோகா மையம் .

பல சமையங்களில் விசிட் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாலும் அந்த இடத்திற்கு செல்ல நேரம் கிடைக்காமல் போனது என்பது தான் உண்மை !.
சிவராத்திரிக்கு கூட விசிட் செய்ய ஐடியா இருந்தது ஆனால் ஏகப்பட்ட வி வி ஐ பிக்களின் கூட்டம் கெடுபிடிகள் என்று இருப்பதால் அங்கு செல்லும் ஐடியாவை கைவிட்டோம் .
கடந்த வாரத்தில் இந்த மையத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது .
கோவையில் இருந்து 30 கிலோமீட்டர் பயணம் .
டவுன் ஹால் சென்று செல்வபுரம் , பேரூர் சிறுவாணி சாலையில் ஒரு இதமான பயணம் .
வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் தான் ஈஷா யோகா அமைந்துள்ளது .
உள்ளே நுழைந்தவுடன்.

எதோ ஒரு மைதானத்தினுள் நுழைந்தது போல இருந்தது .
கார் பார்க்கிங் சென்றபொழுது தான் ஒரு முக்கிய இடத்திற்க்கு வந்த உணர்வு ஏற்பட்டது .
மதிய வேளை கடந்து செல்ல பசி எடுத்து கேன்டீனை நோக்கி செல்ல மீல்ஸ் முடிந்து விட்டது .
புளியோதரை , தக்காளி சாதம் , ,பூண்டு சாதம் , குழி அப்பம் மட்டும் இருக்க அனைத்திலும் ஒன்று என்று வாங்கி ஷேர் செய்து உண்டோம் .
அனைத்தும் கிராம ஸ்டைலில் மண் பானையில் தயாரித்த சுவையான உணவு .
ஒரு பழைய பேருந்து தான் அந்த கேண்டீனின் டைனிங் ஹால் என்பது குறிப்பிடத்தக்கது .
பின் தொலைவில் தெரிந்தது ஆதியோகி சிவனின் பிரமாண்ட சிலை .
அந்த பிரமாண்ட சிலையை நோக்கி நடந்தோம் .

ஏராளமான சுற்றுலா பயணிகள் , வெளிநாட்டு பயணிகள் மற்றும் பக்தர்கள் என்று படங்கள் எடுத்த வண்ணம் முன்னேறிக்கொண்டேருந்தனர் .
நாமும் நடந்து செல்ல நடை நீண்டுகொண்டே இருந்தது .
எல்லோரின் கண்களும் ஆதியோகி சிலையை நோக்கியே இருந்தன .
அந்த பிரமாண்ட சிலையை போக்கஸ் செய்து படங்கள் எடுத்து கொண்டேயிருந்தனர் .
நாம் அருகில் செல்ல ஆதியோகி சிலை மிக பிரமாண்டமாக தெரிந்தது .
எல்லோரும் மெய்சிலிர்த்து போனோம் .
இந்த பிரமாண்ட ஆதியோகி சிவா சிலை உலகில் உள்ள மார்பளவு சிலைகளில் மிக பெரியது என்பது குறிப்பிடத்தக்கது .
112 அடி உயரம் ( 34 மீட்டர் ) 500 டன் எடைகொண்டது .
இந்த சிலையின் உயரம் 112 அடி உயரம் 112 அறிவொளிக்கான பாதையை குறிக்கிறது .
முழு ஆதியோகி சிலை கருப்பு கலரில் உருவாக்கப்பட்டது .
இந்த சிலை ஆயிரம் டன் எக்கு தாள் உலோகத்தால் வடிவைமிக்கப்பட்டதாம் மொத்தம் 500 டன் எக்கு கொண்டு உருவாக்கப்பட்டது .
20000 தனி இரும்பு பிளேட்களை கொண்டு உருவாக்கப்பட்டது .
ஆதி யோகி சிவா சிலையின் முகம் மிகவும் வித்தியாசமாகவும் அனைவரையும் ஈர்ப்பதாக உள்ளது .
சிலையின் காதில் செம்பு கம்மல் அணிவிக்கப்பட்டுள்ளது .அது மட்டும் சூரிய ஒளியில் ஜொலிக்கிறது .
சிறு இரும்பு துண்டுகளால் வடிவமைத்து பின்னர் ஒன்று சேர்த்து முகம் உருவானதாம் .
மொத்தம் 300 உள்ளூர் உலோக தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர் .
இந்த சிலையை வடிவமைக்க மட்டும் இரண்டு வருடங்கள் ஆனதாம் .
சிலை உருவாகி நிலை நிறுத்த எட்டு மாதங்கள் ஆகியுள்ளன .
இந்த சிலையின் 112 மைய கருத்துடன் உருவாக்கியது சத்குரு ஜஃகி வாசுதேவ் .
2017 பிப்ரவரி 24 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதி யோகி சிவா சிலையை திறந்து வைத்தார் .
ஈஷா யோகா மையம் 150 ஏக்கர் பசுமையான நிலப்பரப்பில் அமைத்துள்ளது .
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு ஏராளமான வனவிலங்குகள் உலாவும் நீலகிரி உயிர்க்கோளத்தின் ஒரு பகுதி என்பது இயற்கை ஆர்வலர்களை ஒரு கேள்வி குறியுடன் எட்டி பார்க்க செய்கிறது .
நாம் ஆதி யோகி சிவா சிலையை பார்த்து பிரமித்து போய் நகர அடுத்த முக்கிய தியானலிங்க கோயிலுக்கு செல்ல சற்று நீண்ட நடை கட்டவேண்டியிருந்தது ..

மையத்தில் இயங்கும் கோசாலையில் இருந்து கம்பீர காளைகள் சற்று மாடர்ன் மாட்டுவண்டி பூட்டப்பட்டு சவாரிக்கு ரெடியாக நிற்க ஏகப்பட்ட கியூ ...காளை பூட்டிய மாட்டு வண்டியை ரசித்து விட்டு நடையை கட்டினோம் .
எந்த சப்தமும் இல்லாமல் காளைகள் மக்களை ஏற்றிக்கொண்டு நகர்ந்தது பார்க்க வித்யாசமாக அழகாக இருந்தது .
பல ஊர்களில் இருந்து மக்கள் வந்தவண்ணமிருக்க நாமும் நகர்ந்து சென்றோம் .

பெரிய நந்தி அனைவரையும் ஈர்த்து நிறுத்தியது எழுந்து தியான லிங்கத்தை நோக்கி செல்வது போல இருக்க அதை கடந்து நிஜ காளைகள் செல்வது அருமை .

தியானலிங்க கோயிலுக்கு செல்லுவதற்கு முன் நம் செல்போன் மற்றும் கேமெராக்களை டெபாசிட் செய்துவிட்டு செல்லவேண்டும் அதனால் நம்மால் படமெடுக்க முடியாமல் போனது வருத்தமான ஒன்று .
வாயிலில் ஏகப்பட்ட கெடுபிடி பெண்களின் ஹண்ட் பேக்குகளை செக் செய்யும் பெண்கள் செக்யூரிட்டி தேவையற்று டென்ஷன் ஆகிவிடுகிறார்கள் .
நம் காலணிகள் ஒப்படைத்து விட்டு உள்ளே செல்ல நாம் சந்தித்த இடம் புத்துணர்ச்சி கொடுக்கும் குளம் .
ஆண்களுக்கு சூர்யகுண்ட் குளம் , பெண்களுக்கு சந்திரகுண்ட் தண்ணீர் புனித நீராக ஊற்ற அதில் நீராடி தியானம் செய்தால் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை .
வெளிநாட்டு பெண்களும் ஆண்களும் ' அமைதி காக்கவும் ' என்ற போர்டை வைத்து கொண்டு நம்மை விரைத்து பார்க்கிறார்கள் .
இளம் பெண்கள் ஆங்காங் அமைதியாக நடந்து செல்வதை பார்க்கமுடிந்தது .

அடுத்து நாம் சென்றது தியானலிங்கம் வீற்றிருக்கும் தூண்கள் இல்லாத குவி மாடம் உள்ளே செல்ல மங்கின வெளிச்சம் பிரமாண்ட தியானலிங்கத்தை சுற்றி ஏகப்பட்ட பேர் தியானத்தில் மூழ்கியிருந்தனர் .
அதனுள் பேர் அமைதி நிலவியது .

எல்லோரும் நடந்து செல்லும் மெல்லிய சலசலப்பு மட்டும் கேட்டது .
லிங்கத்திற்கு தொடர் பூஜை நடந்துகொண்டேயிருந்தது .
அங்கிருந்து வெளியே வர ஆதி யோகி ஆலயத்தின் அருகில் பலர் தியானத்தில் மூழ்கியிருந்தனர் .
ஒருவர் புல்லாங்குழல் வாசித்து கொண்டு தியானத்தில் இருக்க இசை தவழ்ந்து வந்துகொண்டிருந்தது .
வெளியே வர ஷாப்பிங் சென்டர் அதில் புத்தகங்கள் , ஆர்கானிக் ஆடைகள் , உடல் ஆரோக்கிய பொருட்கள் மற்றும் கேண்டீன் ...
நமக்கு சற்று பசி எடுக்க சூடான வாழைக்காய் பஜ்ஜி மற்றும் காபி அருந்தி விட்டு வெளியே வர ஏகப்பட்ட கூட்டம் !.
இருள் சூழும் வேளை காளைகள் எல்லாம் கோசாலாவுக்கு சென்று சென்றுகொண்டிருந்தன .
நமக்கு மாட்டு வண்டியும் , பேட்டரி காரும் கிடைக்காமல் நடந்தே திரும்பி வந்தோம் .
மீண்டும் ஆதியோகி சிலை அருகில் வர நடக்கவே இடமில்லை மக்கள் பெரும் திரளாக அமர்ந்து கொண்டிருந்தனர் .

என்ன என்று கேட்க ஆதியோகி சிலையில் லேசர் லயிடிங் காண அமர்ந்திருக்கிறார்கள் .
வருடந்தோறும் நடைபெறும் சிவராத்திரி இரவு மிக சிறப்பாக இருக்கும் .
மதியம் நாம் நடந்து வரும்போது வெறும் மைதானத்தை பார்க்க முடிந்தது .
மாலை 7 மணிக்கு திரும்ப மக்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வந்து வெளியேறினோம் ....
இயற்கை சூழலில் வீற்றிருக்கும் ஈஷா மையம் கூலாக இருக்க நாமும் கூலாக திரும்பினோம் .

Leave a comment
Upload