செவ்வாய் (அங்காரகன்) ஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோயில்

நவகிரக ஸ்தலங்களில் மூன்றாவது ஸ்தலமாக விளங்குவது தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயில், செவ்வாய்க்கு (அங்காரகன்) உரியப் பரிகாரத் தலமாகக் கருதப் படுகின்றது.
அங்காரகன் இங்குத் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். குஜன், மங்களன், பௌமன், உக்கிரன், அங்காரகன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் குஷ்ட நோயினால் அவதியுற்ற போது சிவ பெருமான் வைத்தியராக வந்திருந்து, நோய் நீக்கிய ஸ்தலம் என்பதால் இக்கோயில் வைத்தீஸ்வரன் கோயில் என்றாயிற்று
சிவபெருமான் வைத்தியநாதராக அருளும் இக்கோயிலில், உடல் நோய்கள் மற்றும் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமணம் தடைப்பட்டவர்கள் இங்கு அருள்பாலிக்கும் அங்காரகனை வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
இங்குள்ள மூலவர் தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி. இங்குள்ள செல்வ முத்துக் குமார சுவாமி என்னும் முருகன் செவ்வாய் தோஷ நிவர்த்திக்குரிய தெய்வமாகவும், ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகளால் பிள்ளைத் தமிழ் பாடப்பெற்ற சிறப்பு மிக்கவராகவும், பக்தர்களின் நோய் தீர்க்கும் நாதராகவும் வழிபடப்படுகிறார்.
நாயன்மார்கள், அருணகிரிநாதர், குமரகுருபரர், காளமேகப் புலவர் ஆகியோர் இங்கு வந்து, இத்தலத்தில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் பெருமைகளைப் பாடியுள்ளார்கள். இக்கோயிலில் வழங்கப்படும் திருசாந்துருண்டை நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாகக் கருதப்படுகிறது

7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகிய நாயன்மார்களின் தேவாரப் பாடல்களில் இத்தலம் இடம்பெற்றுள்ளதால் இது 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே வழிபாட்டில் இருந்த ஒரு பழமையான தலம் என நம்பப்படுகிறது.
இங்குள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070–1122) காலத்தைச் சேர்ந்தவை. விக்ரம சோழன், வீரராஜேந்திர பாண்டியன், நாயக்க மன்னர்கள் மற்றும் மராட்டிய மன்னர் துளஜா ஆகியோர் இக்கோயிலின் கட்டுமானப் பணிகளிலும் திருப்பணிகளிலும் பங்களித்துள்ளனர்.
ஸ்தல புராணம்:
காவிரி வடகரையில் அமைந்துள்ள வைதீஸ்வரன் கோயில், தேவார காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடன் விளங்கியது
. சடாயு என்னும் புள் (பறவை), ரிக்வேதம், முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

அங்காரகன் வழிபட்ட ஸ்தலம் என்பதால் 'அங்காரக புரம்' என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. சூரபத்மனை வெல்வதற்காக, இத்தல அம்பாளை முருகப்பெருமான் வழிபாடு செய்துள்ளார்.
இத்தலத்தில் காமதேனு, துர்கை, பிரம்மா, சரஸ்வதி, பூமிதேவி, ஸ்ரீராமர், சூரியன், போன்றோரும் பராசரர், துர்வாசர் போன்ற மகரிஷிகளும், ஜடாயு, சம்பாஜி போன்ற பறவைகளும் வணங்கி வழிப்பட்ட திருத்தலம் இது.
ஸ்தல அமைப்பு:
இக்கோவில் ஏழு நிலை இராஜகோபுரங்களுடனும் ஐந்து பிரகாரங்களுடனும் அமைந்துள்ளது.
இங்குள்ள ஐந்து கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. கிழக்கில் உள்ள ஏழு நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே செல்லும்போது, வலதுபுறம் அமைந்துள்ள ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தடியில் மேற்கு நோக்கிய ஆதி வைத்தியநாதர், வீரபத்திரர் சந்நிதி, உள் வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதி
. அடுத்து இடது புறத்தில் சித்தாமிர்தகுளம் உள்ளது.

மேற்கு இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார்.
மூலவருக்கு எதிரில் இரு த்வஜஸ்தம்பங்கள் உள்ளன. இங்கே உள்ள த்வஜஸ்தம்பங்கள் நம்மிடமுள்ள எதிர்மறையான ப்ராணசக்தியை விலக்கிவிடுகிறது. இந்தத் தலத்தில் உள்ள வைத்தியநாதரை வழிபட்டால், ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவன் கோயில்களைத் தரிசித்த பலன் கிடைக்கும். பிறவிப் பிணியைப் போக்கும் வைத்தியநாதர் மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார்.
இரண்டாம் பிராகாரத்தில் தெற்கு நோக்கி அருளும் தையல்நாயகி அம்மன், தைலபாத்திரம், அமிர்தசஞ்சீவி, வில்வத்தடி மண் தாங்கி 4448 நோய்களைத் தீர்க்கிறார். இவருக்கு அருகில் கிழக்கு நோக்கி முத்துக்குமார சுவாமியும், செல்வ முத்துக்குமார சுவாமி சந்நிதிக்கு முன் கற்பக விநாயகரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
வடக்குப் பிரகாரத்தில் பத்தரகாளியம்மன் சந்நிதி உள்ளது.
வீரபத்திரர், அன்னபூரணி, தட்சிணாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் உள்ளன.
நடராஜ சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்காலம்மையாரும் உள்ளனர். ரிக் முதலிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும் சஹஸ்ரலிங்கமும் வரிசையாகக் காட்சியளிக்கின்றனர்.

கோயிலின் தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
இங்குள்ள சடாயு குண்டத்தில் இன்றும் சாம்பல் இருந்து கொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம். இக்கோயிலில் வைத்தியநாதரின் சந்நிதிக்குப் பின்புறம் நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம்.
அங்காரகன் (செவ்வாய்) தனி சந்நிதியில் காட்சிதருகின்றார், அதனருகில் உற்சவர் விக்கிரகமும் காணப்படுகின்றன. இத்தலத்தில் பிணி தீர்க்கும் தன்வந்திரி, ஜுரஹரேஸ்வரர் ஆகிய தெய்வ சந்நிதிகள் பக்தர்களின் பிணி தீர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
ஸ்தல தீர்த்தம் : சித்தாமிர்த தீர்த்தம்
ஸ்தல விருட்சம் : வேப்ப மரம்
ஸ்தல பெருமை:
வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடினால், தீராத வியாதிகளும் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தலத்தில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் திருச்சாந்து என்ற மருந்து உருண்டை மிகவும் புகழ் பெற்றது. மேலும் நாடி ஜோதிடத்திற்கும் இத்தலம் பிரசித்தி பெற்றது.
சித்தாமிர்த தீர்த்தம்:

இக்கோயிலில் உள்ள குளம் சித்தாமிர்தம் என்று அழைக்கப்படுகிறது. இதில் நீராடினால் தீராத வியாதிகளும் குணமாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இத்தல இறைவனுக்குச் சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டுப் பல வரங்கள் பெற்றனர்
. அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும்.
இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது தவளையைப் பாம்பு விழுங்க முயற்சித்து இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்புகளும், தவளைகளும் காணப்படுவதில்லை.
திருச்சாந்து உருண்டை:
நோய் தீர்க்கும் சக்தி கொண்டதாக நம்பப்படும் புனித பிரசாதமாகும். இது அங்கசந்தான தீர்த்த மண், மூலிகைகள், வேப்பிலை, விபூதி, மற்றும் ஹோம குண்ட சந்தனம் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
தயாரிக்கும் முறை: வைத்தியநாதர் கோயிலில் வளர்பிறை நாட்களில் அங்க சந்தான தீர்த்தத்தில் நீராடி, தீர்த்தக் கரையில் இருந்து மண்ணை எடுப்பார்கள். பின்னர் அந்த மண்ணுடன், ஜடாயு குண்டத்திலிருந்து எடுக்கப்பட்ட விபூதி, சித்தாமிர்த தீர்த்த நீர் ஆகியவற்றைக் கலந்து, பஞ்சாட்சர மந்திரம் ஜெபித்தபடி பிசைவார்கள். இந்த கலவையை முத்துக்குமாரசுவாமி சன்னதியில் உள்ள குழி அம்மியில் அரைத்து, சிறுசிறு உருண்டைகளாகப் பிடிப்பார்கள். இவ்வாறு தயாரிக்கப்பட்ட உருண்டையை அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சிப்பார்கள்.
நாடி ஜோதிடம்:
உலகப் புகழ்பெற்ற நாடி ஜோதிடம் இத்தலத்தில் மிகவும் பிரபலம்.
சூரிய ஒளி மேற்கு கோபுரம் வழியாகச் சிவலிங்கத்தின் மீது சில நாட்கள் படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது
தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு வருபவர்கள் உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர்.
திருவிழாக்கள்:
இங்கு பங்குனி பிரம்மோற்சவம் (28 நாட்கள்), தை மாத விழா (10 நாட்கள்), ஐப்பசி கந்த சஷ்டி(6 நாட்கள்), வைகாசி முத்துக்குமாரசுவாமி திருவிழா, கார்த்திகை மாதத்திலும் விழா எடுக்கப்படுகின்றது. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும். மற்றும் மாதந்தோறும் கிருத்திகை ஆகியவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பிரார்த்தனை:
இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு மன அமைதி கிடைக்கும்.
வைத்தீஸ்வரன் கோயில் தீராத நோய்களைக் குணமாக்கும் 'வைத்திய நாதர்' மற்றும் செவ்வாய் தோஷ நிவர்த்திக்குப் புகழ்பெற்ற தலமாகும். இங்கு வழிபட்டால் நாள்பட்ட நோய்கள் நீங்குதல், செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடுதல், தோல் நோய்கள் குணமாதல், குழந்தை பாக்கியம் மற்றும் வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய் தோஷ நிவர்த்தி பூஜைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் சிறப்பாக நடைபெறும்.

எப்படிச் செல்வது:
இக்கோயில் சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்கும் இடையே அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 17 கி.மீ மற்றும் சீர்காழியிலிருந்து 13 கி.மீ தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது. இக்கோவிலைச் சென்றடையப் பல்வேறு போக்குவரத்து வசதிகள் உள்ளன. சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை ஆகிய இடங்களிருந்தும் பேருந்து வசதி உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் இரயில் நிலையத்திலிருந்து 1கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
செவ்வாய் தோஷங்கள் நீங்கி, நல்ல வாழ்க்கை அமைய வைத்தீஸ்வரன் கோயில் அங்காரக பகவானின் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம்..!!

Leave a comment
Upload