தொடர்கள்
அனுபவம்
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்

ஆசிரியர் : வசுதேந்த்ரா

தமிழில் : கே. நல்லதம்பி

இவ்வளவு சுவாரஸ்யமான தன்வரலாற்று நூலை சமீபமாக நான் வாசிக்கவில்லை என்றே கூறுவேன். நூலை எடுத்தது தான் தெரியும் கீழே வைக்க முடியாமல் வாசிக்க தோன்றுகிறது. இடையிடையே வெடித்து சிரிக்கவும் வைக்கிறார் ஆசிரியர். இந்த நூல் கர்நாடக சாகித்ய அகாடெமி விருது பெற்ற நூலாகும். தமிழில் கே. நல்லதம்பி அவர்கள் மொழி பெயர்த்திருக்கிறார். இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற எண்ணமே இல்லாமல் தமிழில் எழுதப்பட்ட நூல் போன்று அவ்வளவு சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்யப்பராட்டிருக்கிறது.

நூலுக்குள் சென்றால், தன்னுடைய அம்மா இப்படி தான் இருப்பார் என்ற சித்திரத்தை வரைகிறார் ஆசிரியர், அது நமது அம்மாவின் சித்திரத்தை ஒத்ததாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை தானே! அம்மாவின்உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் சிரமப்பட்டதையெல்லாம் சொல்லும் போது அவளை தான் அக்காவிடம் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு போனது குறித்த குற்ற உணர்வு இருக்கிறது ஆசிரியரிடம். உண்மையில் அம்மாவுக்கு உடல் நலக் கோளாறுகள் பல இருப்பினும் அவள் மகிழ்ச்சியானவளாகவே இருந்திருக்கிறாள். சின்ன வயதில் இருந்து அவளின் ஹாஸ்ய பேச்சுகளை ரசித்த மகனுக்கு அதை அசைபோடுவது சுகமான அனுபவமாக இருக்கிறது.

2026002816381958.jpeg

அம்மாவிற்கு எவர்சில்வர் பாத்திரங்களின் மேல் அதிக பிரேமை உண்டாம், அவர்கள் வீட்டிற்கு டிகாஷன் காப்பி போட புதிதாய் ஒரு பில்டரை வாங்குகிறார்கள். அதில் பொடியை போட்டு தண்ணியை ஊற்றியும் ஒன்றுமே நடக்கவில்லை, டிகாஷன் கீழிறங்கும் வழியை காணும். உடனே பாத்திரக்காரனிடம் சென்று அந்த பில்டரில் உள்ள ஓட்டைகளை பெரிது படுத்துகிறார்கள், அவனும் பாவம் ஒவ்வொரு ஓட்டையையும் பொறுமையாக பெரிது படுத்தி தருகிறான். அதன் பிறகு மொத்த பொடியும் சேர்ந்து கீழிறங்கி விடுகிறது, இது குறித்து ஆசிரியரின் அம்மா கடைக்காரரிடம், "என்ன ப்பா இப்போ நானே உள்ள இறங்குற மாதிரி இவ்வளவு பெரிய ஓட்டையா போட்டு வச்சிருக்க ?" என்று கேட்கவே, கோபம் கொள்ளும் கடைக்காரர் "எங்க இப்போவே அந்த ஓட்டைக்குள்ள இறங்கி காட்டுங்க பாக்கலாம் ?" என்கிறார், இப்படி எண்ணற்ற இடங்களில் நகைச்சுவை தெறிக்கிறது.

முதல் முறை தன்னுடைய சேமிப்பில் இருந்து வீட்டுக்கு ஒரு டிவி வாங்க காசு அனுப்புகிறார் ஆசிரியர், இவர் வீட்டுக்கு போய் சேரும் தருணத்தில் டிவி வேலை செய்யாமல் போய்விட, ஊரே இவர் பெரிய படிப்பு படித்தவர் எல்லாவற்றையும் சரி செய்து விடுவார் என்று நம்பி இருக்க, ஒன்றும் புரியாமல் முழிக்கும் ஆசிரியர் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறார். இறுதியில் அதிகம் படிக்காத அக்கா ஆன்டெனாவை திருப்பி வைக்கவே டிவி தெரிய தொடங்குகிறது, என்ஜினீயர் படிப்பு சுக்குக்கும் பிரயோஜனம் இல்லை என்று அப்பா வைகிறார். இந்த சுய எள்ளல் கலந்த எழுத்து நடை வாசிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது கூடவே வலி நிறைந்த தருணங்களையும் விவரிக்கிறார்.

சினிமா எப்படி அந்த நாட்களில் மக்களின் வாழ்வுடன் ஒன்று கலந்து இருந்தது என்பதற்கும் நிறைய சம்பவங்களை பட்டியலிடுகிறார். கன்னட நடிகரான ராஜ்குமாரை இவர்கள் அண்ணார் என்று தான் அழைப்பார்களாம். அந்த நாட்களில் இவர்கள் ஊருக்கு அண்ணார் சினிமா வந்தால் ஊரே அதை கொண்டாடி தீர்க்குமாம். அப்படி கொண்டாடப்பட்ட அந்த சினிமாவை பார்க்க வேண்டுமென்கிற ஆவல் குழந்தைகளுக்கு இருப்பது இயல்பு தான் அல்லாவா! ஆனால் மிக குறைவான காசாக இருந்தாலும் அந்த சின்ன காசு கூட இல்லாத வீடுகள் தான் அந்த காலகட்டத்தில் இருந்திருக்கிறது. புட்டன் என்ற சிறுவன் அண்ணாரின் படத்தை பார்க்க கொண்ட ஆசையும் அதற்காய் அவர்கள் வீட்டில் நடந்த கூத்தையும் வாசிக்கும் போது நமக்கு கண்கள் கசிகிறது, குழந்தைமையின் அழகுடன் அழுதுவிட்டு சினிமா பார்க்காமல் அவன் தூங்கி விடுவது அந்த அத்தியாயத்தை மேலும் கவித்துவம் ஆக்கி விடுகிறது.

தண்ணீருக்காக அந்த ஊர் மக்கள் படும் துயரங்களை வாசிக்கும் போது நமக்குள்ளும் கழிவிரக்கம் உருவாகிறது. வெளிநாட்டவர்களுடன் மீட்டிங்கில் இருக்கும் போது "நம்ம வீட்டுக் குழாயில் தண்ணி வந்திருச்சுடா" என்று அக்காவும் தம்பியும் பரவச படும் தருணங்கள் கவிதையாய் மிளிர்கிறது. குரங்குகள் அந்த ஊரில் செய்த அட்டகாசங்களையும், கோவிலை சுற்றி இருந்த காடுகள் அழிந்ததால் குரங்குகள் சாப்பிட பிச்சை கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதையும் எழுத தவறவில்லை ஆசிரியர்.

அம்மா என்பவள் ஒரு தேவதையல்ல, அவளும் ஒரு சாதாரண மனுசி தான் அவளுக்குள்ளும் பல ஆசாபாசங்கள் இருக்கும். அவளுக்கு தேவதை என்ற பிம்பத்தை கொடுத்துவிட்டு அவளை இயல்பாக இருக்க விடாமல் செய்வது அறியாமையே என்கிறார். அவளுக்கும் கோபம் வரும், அவளும் தவறு செய்வாள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு எடுத்துரைக்கிறார். பருப்புவடை ஆச்சாரியார் குறித்தும் அவரது மனைவி குறித்தும் எழுதப்பட்ட அத்தியாயம் வெகு எதார்த்தம் எனக்கு எங்கள் ஊரில் வாழ்ந்த ஜெகதீச குருக்கள் நினைவுக்கு வந்தார்.

அம்மாவே பிரதான கதாபாத்திரமாக இருந்தாலும் அப்பாவுக்கும் இந்த நூலில் அற்புதமான இடமுண்டு. அப்பாவின் சிக்கனம் கலந்த கண்டிப்பு, எதையும் திட்டமிட்டு செய்யும் அவர் பாங்கு, மகன் வெளியூரில் படிக்க போயிருக்கும் தருணத்தில் தன்னால் இயன்ற காசை எப்படியாவது அவனுக்கு அனுப்ப எத்தனிக்கும் பாசம் என்று எல்லாமே அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. முதல் மாசத்திலேயே பெரிய சம்பளம் வாங்கும் மகனை குறித்து பெருமை ஒருபுறமும் பொறாமை ஒருபுறமும் என ஆசிரியரின் அப்பாவை மிக இயல்பாக படம் பிடித்து காட்டுகிறது அவர் எழுத்து. உணவை வீண் செய்யாமல் சாப்பிட்டால் அப்பா தரும் ஐந்து காசு இன்றளவும் தன்னை உணவை வீணடிக்க விடவில்லை என்று கூறும் ஆசிரியரை பாராட்டாமல் இருக்க முடியாது. எண்பதுகளின் இறுதி, தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெல்லாரியை சேர்ந்த ஒரு நடுத்தர வர்க்க வாழ்வியலை நகைச்சுவை கலந்து அழகாக விவரிக்கிறது இந்த நூல். இந்த நூலை வாசித்த பிறகு நான் வசுதேந்த்ரா அவர்களது நூல்களை தொடர்ந்து வாசிக்கும் ஆவல் கொண்டு விட்டேன். நிறைவான வாசிப்பனுபவம்.

பக்கங்கள் : 219

பதிப்பகம் : Two shores press

இந்துமதி கணேஷ்