தொடர்கள்
தொடர்கள்
சினிமாவும் இலக்கியமும் 19. தி.குலசேகர்

20260031070020169.jpg

புதியபுதிய சிந்தனைகளின் சாளரத்தை திறந்து விடுகிற அனுபவத்தை தந்து கொண்டேயிருப்பது இலக்கியம்.

பொதுவாக ஒரு புத்தகத்தை ஒரு முறை தான் படிப்போம். சில நூல்களை மட்டும் எத்தனை முறை படித்தாலும் புதியபுதிய அனுபவங்களை அது உணரத்தரும்.

படித்துக்கொண்டே இரு என்று அது நம்மை உந்தித்தள்ளும். ஒவ்வொரு முறை படிக்கிற போதும் அது புதிதாய் படிக்கிற அனுபவத்தை தரும். நம்முடைய மனதின் வளர்ச்சியோடு சேர்ந்து அதுவும் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

அப்படிப்பட்ட சில நூல்களை முதலில் நமது வீட்டு நூலகத்தில் வைத்து விட்டால், அதுவே ஒரு முழுநூலகத்திற்கு சமமானதாகி விடும்.

இப்போது குறிப்பிட இருக்கிற அந்தச் சில நூல்கள் இங்கே தமிழிலும், ஆங்கிலத்திலம் கிடைக்கின்றன. அப்படியான சில புத்தகங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

பாவ்லோ கொய்லோ எழுதிய ரஸவாதி அல்லது அல்கெமிஸ்ட். இந்த புத்தகம் வாழ்வின் ஞானத்தை, ரஸவாதத்தின் சூட்சுமத்தை புறத்தில் தேட வேண்டாம். அகத்தில் தேடுவோம் என்கிற சேதியை, ஒரு இளைஞனின் ஊகப்புனைவுகள் என்கிற அசாத்திய கற்பனாலோக பயணத்தின் ஊடாக உண்டாகிற அனுபவங்கள் வாயிலாக, இந்தப் படைப்பு உணர்த்துகிறது.

ஃபிரான்சிஸ் காஃப்கா எழுதிய ‘மெட்டமார்பாசிஸ்’. தமிழில் உருமாற்றம் என்று வந்திருக்கிறது.

இது ஒரு இருத்தலியல் சார்ந்த குறுநாவல். பிடிக்காத விற்பனை பிரதிநிதி வேலையை புற நிர்பந்தம் காரணமாக பார்த்துக்கொண்டிருக்கிற நாயகன் அந்த வேலையை ஒரு நாள் பொறுக்கவியலாமல் உதறி விடுகிறான்.

உடனே அவன் மிகப்பெரிய அளவிலான ஒரு கரப்பான் பூச்சியாக மாறி விடுகிறான். அவனுடைய வீட்டில் உள்ளவர்கள் அன்றிலிருந்து அவனை அற்பமாக பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தங்கை மட்டும் அப்போதும் அவன் மீது அன்பை காட்டுகிறவளாக இருக்கிறாள்.

ஒரு நாள் அவன் அவமானத்தாலும், கவனிப்பில்லாததாலும் ஒரு நாள் மரித்துப் போகிறான். அவர்கள் ஏற்கனவே அன்று சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்திருப்பார்கள். அந்த பெரிய அளவிலான கரப்பான் பூச்சியை குப்பைத்தொட்டியில் எடுத்துப்போட்டு விட்டு, திட்டமிட்டிருந்த உல்லாச பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

காஃகாவின் இன்னொரு நாவலான ‘தி ட்ரயல்’. இதில் நாயகன் அறம் சார்ந்து இயங்குகிறவனாக இருக்கிறான். திடீரென ஒரு நாள் அவனைக் காரணம் சொல்லாமலே அதிகாரத்தின் ஏவலளராக இருக்கிற காவல்துறை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் கொண்டு போய் நிறுத்துகிறது. உண்மையில் நாயகனுக்கு எதற்காக தன்னை கைது செய்திருக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

உண்மையில் காவல்துறைக்கும் எதற்காக கைது செய்தோம் என்று தெரிவதில்லை.

அரசு சொன்னதால் கைது செய்திருக்கிறார்கள். அவ்வளவு தான் அவர்களுக்கு தெரிந்தது. அவனை அரசு ஆபத்தானவனாக நினைக்கிறது. எதற்காக என்றெல்லாம் யாருக்கும் தெரியாது

. அவனுக்கும் தெரியாது. அரசுக்கும் சொல்லத் தெரியவில்லை. நீதிமன்றத்திற்கும் அவனின் குற்றம் என்னவென்று பிடிபடவில்லை.

என்னவோ பண்ணியிருக்கிறான் என்று மட்டும் நம்ப ஆரம்பிக்கிறது. யாருக்குமே பிரச்னை என்ன, நாயகன் செய்த தவறு என்ன என்று கடைசி வரை தெரிவதில்லை. நாயகன் ஒரு கட்டத்தில் தனக்கே தெரியாமல் தான் ஏதாவது தவறு செய்திருப்போமோ என்று எண்ண ஆரம்பித்து விடுகிறான்.

அதிகாரம் தனிநபர் உரிமைகளில் எந்த அளவு ஆக்கிரமிப்பை செலுத்துகிறது என்பதை பூடகமாக இந்த படைப்பு பதிவு செய்கிறது.

மிக்கைல் நைமி எழுதிய ‘புக் ஆஃப் மிர்தாத்’. இதில் ஆன்மீகம் எந்தளவு நிறுவனமயமாக்கப்பட்டு, அதிகாரத்தின் வேட்கையில் செயல்படுகிறது. ஒரு அறிந்திராத கதாபாத்திரத்தின் வழியாக இறுதியில் எப்படி ஆன்மீகம் மீளுருவாக்கம் பெறுகிறது.

தன்னலமற்ற அன்பின் சேவையாக அது எப்படி பரிமளிக்கிறது என்பதை மாயயதார்த்தவாத தன்மையோடு இந்த புத்தகம் விவரிக்கிறது.

மிக்கைல் நைமியின் மற்றொரு புத்தகம் ‘மெமைர்ஸ் ஆஃப் எ வேக்ரன்ட் ஸோல்’. தமிழில் ஒரு ‘ஆன்மாவின் தேடல்’. இவரது புத்தகங்களின் தமிழ் பதிப்புகளை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது

. இந்தப் படைப்பில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் வருகின்றன. ஒன்று இன்னொன்றின் எதிர்நிலையில் நின்று உரையாடும். ஒரு கட்டத்தில், இரண்டும் ஒன்றின் இரண்டு பக்கங்கள் என்பது தெரிய வரும்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு கொலை செய்தவன், உன்னதமான உயிர்நிலையை எப்படி தனக்குள்ளேயே தேடித்தேடி கண்டடைகிறான் என்பதை காவியநயத்தோடு இந்த படைப்பு முன்வைக்கிறது.

பியாதர் தாஸ்தாயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் பிரதர்ஸ்’. இதில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் அத்தனை ஆழமாக, அத்தனை தெளிவோடு சிருட்டிக்கப்பட்டிருக்கின்றன.

அந்தந்த கதாபாத்திரங்கள் தங்களின் பார்வையை கச்சிதமாக முன்வைக்கிறபோது அதனதன் நியாயங்களை அப்படியே நாம் ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவை இருக்கும்.

அத்தனை நுட்பமாக அத்தனை கதாபாத்திரங்களும் தன்னுடைய அந்தரங்க உண்மையின் பக்கங்களை வெளிப்படுத்தும் விதத்தில், அதனதன் பக்கம் நின்று அததுவாகவே மாறி மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்.

உண்மை என்பது பன்முகத்தன்மை கொண்டது என்பதையும், அத்தனை பரிமாணங்களையும் ஒன்றிணைத்தே உண்மையின் தன்மையை உள்வாங்க முடியும் என்பதையும் இந்தப் படைப்பு அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

கதாபாத்திரங்களின் ஆழமான உளவியற்தன்மை படிக்கிற நம்மை அவரவர்களாகவே மாறி நின்று பிரமிக்க வைக்கிறது.

இவரது இன்னொரு முக்கியமான நாவல் ‘தி வொய்ட் நைட்ஸ்’. இதை தமிழில் வெண்ணிற இரவுகள் என்கிற பெயரில் பலரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இதை இத்தாலிய இயக்குநர் விஸ்காண்டி திரைப்படமாக இயக்கியிருக்கிறார். அந்த திரைக்கதையை மொழிபெயர்த்து நாவலாக எழுதியிருக்கிறேன்.

இது நான்கு இரவுகளில் நடக்கிற கதை. காதலின் மாயாஜாலத்தன்மையை இந்த படைப்பு நுட்பமாக பதிவு செய்கிறது. இணைவதல்ல, நினைப்பதில் இருக்கிறது காதல் என்பதை கவித்துவமாக வெளிப்படுத்துகிறது.

கலீல் ஜிப்ரான் எழுதிய ‘தி புராஃபெட்’ தமிழில் ‘தீர்க்கதரிசி’ இந்த குறுநாவல் மானுடத்தின் மெய்யியல் நோக்கிப் பயணிக்கிறது. தன்னலமற்ற பேரன்பின் வாசத்தை வழிநெடுக விதைத்துச் செல்கிறது.

ஏர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘தி ஓல்ட்மேன் அன்ட் தி ஷீ’ என்கிற ‘கடலும் கிழவனும்’ குறுநாவல். இதில் வருகிற நாயகன் ஒரு வயோதிகன். அவனுக்கு சீடனாக ஒரு பதின்பருவச் சிறுவன். ஒரு கட்டத்தில் வயோதிகன் மீன் பிடிக்க லாயக்கில்லாதவனாகிவிட்டான் என்று மற்றவர்கள் நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.

அவனோ ஒரு பெரிய சாகசம் செய்ய துணிகிறான். சுறா மீன் வேட்டைக்கு செல்கிறான். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஒரு சுறா மீன் அவன் வலையில் சிக்குகிறது. இப்போது அந்த பிடிபட்ட சுறா மீனை கரைக்கு கொண்டு வந்து மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்கிற துடிப்போடு படகை செலுத்துகிறான்

. மற்ற பெரிய மீன்கள் பிடிபட்ட சுறாவின் ரத்தவாடைபிடித்து துரத்திவந்து அந்த மீனின் ஒவ்வொரு பாகங்களாக தின்ன ஆரம்பிக்கின்றன. இறுதியில் அதன் எலும்புப் பகுதி மட்டுமே அவனின் வலையில் மிஞ்சுகிறது.

அதனால், அவன் சுறா வேட்டையாடியதை யாரும் நம்பத்தயாராக இல்லை. அந்தச் சிறுவனை தவிர. நிறைய யோசிக்க வைக்கிற நாவல்.

ஆல்பர் கேம்யூ எழுதிய ‘தி ஸ்ட்ரேஞ்சர்’. இந்த நாவல் இருத்தலியல் கோட்பாட்டை துல்லியமாக வெளிப்படுத்தும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

இது தமிழில் ‘அந்நியன்’ என்கிற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கட்டிதட்டிப்போன சமூக முரண்களோடு பொருந்தமுடியாமல், உண்மையின் சுவாசத்திற்காக ஆவேசத்தோடு ஏங்கிக்கொண்டிருக்கும் நாயகன் தன் அகச்சீற்றத்தை எப்படியெல்லாம் இந்த சமூக முரண்கள் மீது வெளிப்படுத்துகிறான் என்பதே இந்த குறுநாவல்.

இந்தச் சமூகம் எப்படியிருக்கிறது என்று யோசிக்க வைக்கிறது. வெட்கப்பட வைக்கிறது. மாற்றம் குறித்த மறுசிந்தனைக்கு நம்மை உந்தித் தள்ளுகிறது.

ஜெயகாந்தன் எழுதிய ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’ உறவுகளின் சிக்கலை கவிதையாக இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. காதலின் வழியில் அகம்பாவம் குறுக்கிடுகிறபோது அது என்னவாகிறது.

அதே ஆணவம் அதனிலிருந்து தன்னிச்சையாக விலகுகிறபோது அது எப்படிப்பட்ட அதிசயத்தை நிகழ்த்திக்காட்டுகிறது என்பதை கலாப்பூர்வமாக இந்த நாவல் செதுக்கியிருக்கிறது.

கே.வி.ஷைலஜா எழுதிய சஹிதா நாவல், ஒரு எளிய பெண்ணின் மெய்யியல் தேடலை கம்பீரமாக நம்முன் வைக்கிறது. நட்பு, காதல், காமம் என அனைத்திலும் மிகுந்த நேர்மையோடும், பொறுப்போடும் செயல்படுகிறது.

ஜென் மனநிலையிலான நிதானத்தோடு தன்னை, தன்னுடைய விருப்பங்களை அந்த குடும்பத்திலுள்ளவர்கள் முன், அவர்கள் ஏற்கும்விதத்தில் முன்வைக்கிறாள். அந்த கதாபாத்திரம் முழுமையை உணர்வதற்காக பரிபூரண விடுதலை நோக்கி ஒரு புதுமையான பயணத்தை மேற்கொள்கிறது. வம்சி புக்ஸ் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது.

குலசேகர் எழுதிய ‘ஜே.கிருஷ்ணமூர்த்தி’, ‘புத்தர்’ ‘ஓர் இரவில்’ போன்ற புத்தகங்கள் ஜென் மனநிலைக்குள் பயணிக்க வைப்பவை. நிகழ்காலத்திற்குள் மனதை உட்செலுத்த வைப்பவை. அதற்கான சூட்சுமத்தை கண்டடைய அழைப்பவை.

மகிழ்வின் சூட்சுமம் அறிவிப்பவை. புலம் பதிப்பகம் மற்றும் நாற்கம் பதிப்பகம் இந்த நூல்களை வெளியிட்டிருக்கின்றன.

சலாலுதீன் ரூமி எழுதிய ‘தாகங்கொண்ட மீன் ஒன்று’ சூஃபியிஸம் குறித்த கவிதைகளால் ஆன தொகுப்பு. இவை ஆன்மீக பரப்பில் பிரபஞ்சக்காதலை எளிய கவிதைகள் வழியாக விரித்து வைக்கின்றன.

சார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய ‘அஞ்சல் நிலையம்’ இன்னொரு முக்கியமான நூல். இவர் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி. வாழ்வின் இருண்டபக்கங்களுக்குள் பயணித்து வெளிச்சத்துளிகளை சேகரம் செய்கிறவர்.

எனக்குள் ஒரு நீலப்பறவை பேசுகிறது என்கிற இவரது கவிதை பிரசித்தமானது. ஆன்மீகக்காதலின் உச்சம் அது. அவரது இந்த குறுநாவலும் அப்படியான ஒரு அனுபவத்தை வழங்கக்கூடிய படைப்பு தான்.

நீட்சே எழுதிய ‘ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்’. நீட்சே ஒரு இருத்தலியவாதி. மென்மனதுக்காரர். உலகம் அத்தனை ஜீவராசிகளும் வாழத்தக்க வகையில் மாற வேண்டும் என பிரயாசை கொண்டிருந்தவர்.

மரபுகளை புறந்தள்ளியவர். உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே வாழ்வின் அர்த்தம் என நம்பியவர். மனிதன் படைத்த கடவுள் எப்போதோ இறந்தாகி விட்டது என்று பிரகடனம் செய்தவர். சூப்பர் ஹீரோவிலிருந்து சூப்பர் ஹீயூமன் எப்படி உருவாக போகிறார் என்று அகத்திற்குள் தேடியவர்.

அந்த மாமனிதர் ஒரு சூப்பர் ஹுயூமனாக இருப்பார். நிதானத்தின் உச்சத்தில் இருப்பார். பேரன்பும், பெருங்கருணையுமுள்ளவராக இருப்பார். அந்த மாமனிதரின் தரிசனத்தை இந்த படைப்பின் ஊடாக ஆழ்ந்து தரிசிக்கலாம்.