
ரவிக்குமார் யோசனையில் இருந்தான். அம்மா மதியம் போனில் சொன்ன விஷயங்களை அசை போட்டு பார்த்தான்.
ராதிகாவிடம் இதை எப்படி சொல்வது? சொல்லியாக வேண்டும். இரவு டின்னர் முடித்ததும் மொட்டை மாடியில் ஒரு குட்டி வாக் போவான். ராதிகாவும் உடன் வருவாள். அந்த சமயம் சொல்லிவிடுவது என்று நினைத்தான்.
மாமியார் சொன்னதை தானும் யோசித்துக் கொண்டிருந்தாள். என்ன அத்தை இப்படி சொல்கிறார்கள் என்று ஆச்சர்யப்பட்டாள்.
ரவியிடம் சொல்வதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏங்க, ஒரு விஷயம் பேசணும், நடந்தது போதும். கொஞ்சம் இப்டி ஒக்காருங்க” என்றாள்.
“நானும் ஒரு விஷயம் பேசனும். நா மொதல்ல சொல்லிடறேனே” என்று இடை மறித்தான்.
அவள் பாட்டுக்கு சம்பந்தமில்லாமல் எதாவது விஷயத்தைச் சொல்லி, அதைப்பற்றி ஆலோசித்து மண்டையை உடைத்துக் கொள்ள அவன் தயாராக இல்லை.
இருந்தாலும் இவன் சொல்லப் போகும் விஷயத்தை அவள் கேட்க வேண்டுமென்றால், முதலில் அவள் சொல்வதைக் கேட்டாக வேண்டும். இது என்ன சித்ரவதை?
இருவருமே அவரவர் சொல்லப்போகும் விஷயத்தை எப்படி ஜோடித்துச் சொல்லி சாதிப்பது என்பதில் அதிக கவனமாக இருந்தனர்.
“இருந்தாலும் ஒங்க அம்மா அப்பிடிச் சொன்னது எனக்குப் புடிக்கலீங்க” ராதிகாவே ஆரம்பித்தாள்.
“அம்மாவா... என்ன சொன்... சொன்னாங்க?” சற்றுத் தடுமாறினான்.
“மத்தியானம் போன் செஞ்சாங்க. ஷாமிலிக்கு, அதான் ஒங்கத் தங்கச்சிக்கு சீமந்தம் வருதில்ல, அதுக்கு நாள் குறிச்சிட்டாங்களாம்”
ரவிக்குமாருக்கு சற்று வியர்க்கத் துவங்கியது. அம்மா இவளிடம் என்ன சொல்லியிருப்பாள்? தலை சுற்றியது.
“கேககிறீங்கதானே?”
“ம்ம் சொல்லுமா சொல்லு” என்றான்.
“அவங்களே அப்பிடி எப்பிடி முடிவெடுப்பாங்க?” – ராதிகா
“என்ன ஏது –து முடிவ்—முடிவா?” திணறினான்.
“சீமந்தத்திற்கு சீர் செய்யணுமாம். நகை, பட்டுப்பொடவை, மாப்பிள்ளைக்கு ட்ரெஸ், சாப்பாட்டுச் செலவு எல்லாம் இருக்குதாம்” சற்று நிறுத்தினாள்.
முகத்தில் சலனங்களுடன் அம்மா என்னத்தைச் சொல்லித் தொலைத்தாள் என்று ஆர்வமானான்.
“இதெல்லாம் ஒங்கக்கிட்டச் சொன்னா நீங்க காதுல வாங்க மாட்டீங்களாம். முடியாதுன்னு சொல்லிடுவீங்களாம். அதனால என்னிய மெல்ல ஒங்களுக்குச் சொல்லி புரிய வைக்கச் சொல்றாங்க
“எனக்கு புரியல, ஒங்கத் தங்கச்சிக்கு நீங்க செய்யாம யார் செய்வாங்க? இருந்தாலும் ஒங்க அம்மா ஒங்கள புரிஞ்சுகிட்டது அவ்ளதான்” என்றாள்.
ஆஹா, அம்மா வேற ரூட்ல வந்துருக்காங்க போலியே! என்ன மூளை! நம்ப அதையே கொஞ்சம் மாத்தி சொல்ல நெனைச்சோம். தப்பிச்சோம் என்று நினைத்தான்.
“ஏன் அப்படி சொன்னாங்க தெரியலை, நான் பாரு எல்லாரும் அசந்து போகிற மாதிரி சீர் செய்கிறேன்” என்ற ரவியிடம்
“ஒங்கம்மா ஒங்க நல்ல குணத்தை புரிஞ்சுக்கணும் மொதல்ல” என்றாள்.
“நீங்க என்னமோ சொல்ல வந்தீர்கள்?”
“இதப்பத்தித்தான், தேதி குறிச்சிட்டிங்களான்னு... கேக்க நினைச்சேன்” மழுப்பினான் ரவி.
மொத்தத்தில் அம்மாவும் பிள்ளையும் உருட்டி பெரட்டி ராதிகாவை சம்மதிக்க வைத்தாயிற்று.
இனி சீமந்த வேலைகளை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

Leave a comment
Upload