தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை - தெளிவுற அறிக தெளிவுபட மொழிக - மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

20260031071639402.jpeg

நல்லனவெல்லாம் செய்தி அல்ல என்பது பத்திரிகை உலக வாசகம். நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தி அல்ல. மனிதன் நாயை கடித்தால் செய்தி என்பார்கள். அவனும் இந்தப் போக்கில் நல்லனவற்றை விட்டு அல்லனவற்றையே அதிகம் எழுதினான்.


விமர்சனக் கட்டுரைகளை எழுதிய காலத்தில் அவன் மீது வசை பொழிந்தவர்கள் பலர். அவனுக்கு இரண்டுமே ஒன்றுதான். அவனது கவனம் பொருளுக்கேற்ற சொல் இருக்க வேண்டுமென்பது.
ஆங்கில இலக்கிய மாணவனாக இருந்தபோது அந்த மொழியை அவன் பொழுதுபோக்குக்காக படிக்கவில்லை. இலக்கியப் படைப்புகளை ரசித்து ரசித்து படித்தான். ஆங்கிலச் சொற்களின் காதலனாகி விட்டான். அதன் பிறகே அவன் ஆங்கிலப் பேராசிரியர் ஆனான். அடுத்து ஆங்கில ஹிண்டுவின் நிருபர் ஆனான்.


இன்ன செய்தியை இன்ன வார்த்தைகளில் எழுத வேண்டுமென்பதில் கவனம் செலுத்தினான். மாணவப் பருவத்தில் பேச்சுப் போட்டிகளிலும், கட்டுரைப் போட்டிகளிலும் கலந்து கொண்டபோது பெற்ற மொழிப்பயிற்சி பின்னர் கைகொடுத்தது.


பள்ளிப்படிப்பை முடித்து பி.யூ.சி. வகுப்பில் சேர்ந்தபோது அவனது ஆங்கிலப் பேராசிரியர் ஆர்.ராஜரத்னம் வகுப்பறையில் சொல்வது உண்டு, ‘if five words are enough dont add the sixth’ ஆங்கில மொழியின் நயமே அதன் சொற் சுருக்கம் தான். அதை உணர்ந்தே அவன், இப்போதும் எழுதி வருகிறான்.


என்.எல்.சி. நிறுவனம் பழுப்பு நிலக்கரி சாம்பலுடன் சிமெண்ட் கலந்து செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களை தயாரித்தபோது அவன் எழுதிய கட்டுரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த சாம்பலுக்கு ‘fly ash’ என்று பெயர். அவன் கட்டுரையின் நிறைவு வாசகத்தை இப்படி எழுதினான். ‘Ash usually signifies an end but with Fly Ash NLC Engineers have made a beginning a good beginning too.”


அதே நேரம் நெய்வேலியில் வேலை நிறுத்த காலத்தில் மின்சார விளக்குகள் இரவும் பகலுமாய் எரிந்தன. அணைப்பதற்கு ஊழியர்கள் யாரும் முன்வரவில்லை என்று எழுதியபோது என்.எல்.சி நிர்வாகம் வருத்தப்பட்டது. பாராட்டும் செய்திதான், விமர்சனமும் செய்திதான். அவனுக்கு வாழ்த்தும் ஒன்றுதான் வசையும் ஒன்றுதான்.


செய்திகள் எழுதிய காலத்தில் இன்ன வார்த்தைகள் போட வேண்டுமென்று யோசித்துப் பார்த்ததில்லை. இன்ன வார்த்தை செய்தி சம்பந்தபட்டவர்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்று ஆராய்ந்ததில்லை. எழுத வேண்டியதை தன் மனதில்பட்டபடி எழுதினான். ‘கூப்பிட்ட குரலுக்கு வரவேண்டும் சொல்’ என்ற பாடினார் குமரகுருபரர் ஸ்வாமிகள். அவர் வாழ்ந்த ஊரில் சில காலம் வசித்ததாலோ என்னவோ, அவனுக்கு சொற்கள் வசப்பட்டன.


அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் நீண்டகால மாணவர்கள் போராட்டத்திற்குப் பிறகு முதலில் பொறியியல் பிரிவு தொடங்கப்பட்டது. அன்று மூன்று மாணவர்கள்தான் வந்திருந்தார்கள். இன்னொரு ஆங்கிலப் பத்திரிகையும் இரண்டு ஏஜென்சிகளும், ‘Only three students attended on the re-opening day’ என்று எழுதினார்கள்.


அவன் எழுதிய வாசகம், ‘‘On the reopening day only three studnets turned up, one from Salem, and two from Jerusalam. While the Salemite is a hostler, the Palasteenians are day scholars. தந்தியை அனுப்பிக் கொண்டிருந்தபோது சிதம்பரம் போஸ்ட் மாஸ்டர் சக ஊழயர்களிடம் ஹிண்டுவுக்கும், பிறருக்கும் மொழி நடையில் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள் என்று தந்தியின் வாசகங்களைப் படித்து காண்பித்தார். அந்த நேரம் அங்கே இருந்த அவனுக்கு தானும் தன் பத்திரிகையும் பாராட்டப்படுவது பெருமிதம் தந்தது. நன்றி ஆங்கில மொழிக்கு.


செய்திகளில் குறிப்பிடப்படுபவர்கள் சில வார்த்தைகளைப் படித்துவிட்டு நொந்து போய் இருக்கிறார்கள். சிலர் அதை அவனிடம் சொன்னதில்லை. ஆனால் ஓரிருவர் சண்டை போட்டிருக்கிறார்கள்.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி அவன் வருடம் தவறாமல் சில ஆசிரியர்களை வீட்டில் சந்தித்து, நமஸ்கரித்து ஆசி பெற்று வந்தான்.


அவர்களில் ஒருவர் முன்னாள் துணை வேந்தர் எஸ்.வி.சிட்டிபாபு. அவர் நல்லி கடைக்கு வாடிக்கையாளராக மட்டுமல்ல, நல்லி குப்புசாமி செட்டியாரின் நண்பரும் கூட. ஒருமுறை நல்லி குப்புசாமி செட்டியார், சிட்டிபாபுவிடம், ‘‘அந்த பத்திரிக்கையாளர் நன்றாக ஆங்கிலமும் தமிழும் பேசுவார் எழுதுவார். நீங்களும் அப்படித்தான் இரண்டு மொழிகளையும் கையாளுகிறீர்கள்.’’


இது பற்றி நான் அந்த பத்திரிக்கையாளரிடம் கேட்டபோது, தான் தமிழ்ப் பெரும்புலவர், சரவண ஆறுமுக முதலியாரின் மாணவன் என்றார். நீங்கள் யாருடைய மாணவர் என்று சிட்டிபாபுவைக் கேட்டார் நல்லி செட்டியார். சிட்டிபாபு சொன்னார், ‘நானும் அதே ஆறுமுக முதலியாரின் மாணவன் தான்’.
இந்த உரையாடலின் போது அருகில் இருந்த அவன் கேட்டான், ‘நீங்கள் என் தந்தையை விட ஒரு வயது மூத்தவர். நாம் எப்படி ஒரே ஆசிரியிரிடம் படித்தோம்’ என்று கேட்க சிட்டிபாபு சொன்னார், ‘நான் கல்வித்துறையில் தொடர்வதற்காக 32 வயதில் ஙி.ஜி’ படிக்கப் போனேன்.அப்போது சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் ஆறுமுக முதலியார் என் பேராசிரியர். அவர் ஓய்வு பெற்ற பிறகு பழனியில் நீங்கள் அவரது மாணவர்’ என்றார்.


இரு மொழித்திறமை உள்ள ஒரு ஆசிரியரின் மாணவர்கள் அந்தத் திறமையை அப்படியே கிரகித்துக் கொள்கிறார்கள்.


அடுத்த சில வருடங்களில் தேவகோட்டையில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்ட வடலூர் துறவி ஊரன் அடிகளார் அவனைப் பார்த்து எங்கே படித்தீர்கள் என்று கேட்டார். ‘அவன் பழனியில்’ என்றான். அவர் கேட்டார், ‘நீங்கள் ஆறுமுக முதலியாரின் மாணவனா?’
அவன் ‘ஆம்’ என்றதும் அவர் சொன்னார், ‘அப்படியானால் உங்களுக்கு ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழியிலும் ஆளுமை இருக்க வேண்டுமே’ என்றார். ஒரு நல்ல ஆசிரியரின் முத்திரை அது.
ஒருவர் ‘கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்’ என்பதை ஆங்கிலத்தில் ‘Stabbed to Death’ என்று எழுதலாம். கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார் என்பதை ‘Pelted to death’ என்று எழுதலாம். அறுத்து கொலை செய்யப்பட்டார் என்பதை ‘Hacked to death’ என்று சொல்லலாம். சந்தர்ப்பத்துக்கு தகுந்தபடி வார்த்தைகள் தேவை. வினோதமான சந்தர்பங்களில் எப்படிச் சரியான ஒற்றை வினைச்சொல்லை பயன்படுத்துவது என்பதற்கு வளமான மொழியறிவு தேவை.


ஒருமுறை நெய்வேலியில் கன்வேயர் பட்டையில் சிக்கி ஒரு ஊழியர் உயிரிழந்தபோது அவன் எழுதினான், ‘Caught in a conveyor an employee was tucked to death’ என்று எழுதினான். ‘tucked’ என்பது தான் சரியான வார்த்தை. ஏனென்றால் கன்வேயர் திசை திரும்பியபோது அதில் சிக்கிய தொழிலாளி திசைமாற்றும் சிலிண்டரால் மடித்து கொல்லப்பட்டார். ‘மடித்து’ என்பதற்கான சரியான ஆங்கிலச் சொல் tucked. சில நண்பர்கள் அதுவரை கேள்விப்படாத வார்த்தை அது என்றும், ஆனால் அதுவே சரியான வார்த்தை என்று புரிவதாகவும் சொன்னார்கள். சொல்லில் இருக்கிறது செய்தியின் தாக்கம்.

அதுதான் ஒரு நிருபரின் கடமை. இதை உணர்ந்து கொண்டால் அந்த நிருபருக்கு ஆயுட்காலம் முழுவதும் மதிப்பு இருக்கும்.