
"நேரமாயிண்டே இருக்கு. எவனும் எடுக்கலையா"
பதட்டத்தோடு கேட்டேன்.
"கொஞ்சம் பொறுங்க.ஒருத்தன் எடுத்திருக்கான். வரானா பார்க்கலாம்".
" மூணாவது ஆள். இவனும் கட் பண்ணிட்டா என்ன பண்றது".
"வர வர ரொம்ப மோசமா போச்சு. இந்த ஓலா,உபர் சர்வீஸ் முன்ன மாதிரி ஒழுங்கா இல்ல.
கேஷா? கார்டா?எங்க போறீங்க? எக்ஸ்ட்ரா தரணும். இத்தனையும் கேட்டு ஹிம்ஸை பண்றாங்க.
அவங்க இஷ்டத்துக்கு நாம்ப ஆட வேண்டியதாப் போச்சு."
என் புலம்பல் தாங்காம,
"கொஞ்சம் சும்மா இருக்கேளா.முத்தாலம்மன் கோயில் வாசல்ண்ட வந்துட்டான். அஞ்சு நிமிஷத்துல இங்க வந்துடுவான்"
என் மனைவி சொல்லி முடிப்பதற்குள்,
அவனும் கேன்ஸல் பண்ணிட்டான்.
அடப்பாவி ! இவனும் போயிட்டானே. என்ன பண்ணலாம். நினைத்துக் கோண்டிருக்கும் போதே, இன்னொருவன் அழைத்து, எந்த கேள்வியும் கேட்காம “உடனே வர்ரன் சார்” என்றான்.
"எங்க இருக்கான் பாரு"என்றேன்.
"ஒண்ணரை கிலோ மீட்டர் காட்றது "
GPS ல் அந்த வண்டியை வாட்ச் பண்ணிக் கொண்டிருந்தாள் என் மனைவி.
"என்னடி வரானா? இல்லையா?"
"நகரவே இல்ல.அங்கேயே நிக்கிறான்”
மறுபடியும் ஃபோனில் அழைத்து
"ஏன்பா அங்கேயே நிக்கிற".
"இங்க ஒரே ட்ராஃபிக் கா இருக்கு.இதோ வந்துடேறேன் மா".
ஐந்து நிமிடத்தில் ஆஜரானார்.
என் மனைவிக்கு மூட்டு வலி. தாங்கி நடப்பதைக் கண்டு, தன் சீட் அருகில் இருந்த
சின்ன ஸ்டூலை, கொண்டு வைத்து வண்டியில் ஏறி அமர உதவினான்.
"இக் காலத்தில் இப்படியும் ஒரு ட்ரைவரா" ஆச்சர்யத்தில்
"ரொம்ப நன்றி பா" என்றேன்.
"ஏதோ முடிஞ்ச உதவி சார்" என்றான்.
"கடவுள் உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார். " ஆறுதல் கலந்த ஆசிகள் சொன்னேன்.
"கொரானாகாலத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டன் சார்".
"ஏன்பா என்ன ஆச்சு. கொரானா வந்துச்சா"
"அதெல்லாம் ஒண்ணும் வரல சார்". சவாரியே இல்ல, வருமானமும் இல்ல சார்".
"அந்த சமயத்துல திடீர்னு என் பொஞ்சாதி வேற, முடக்கு வாதத்தில முடங்கிப் போனா சார்.
"ஆஸ்பத்திரி அது, இதுன்னு ஏகப்பட்ட சிலவு".
"அப்புறம் எப்படி பா சமாளிச்ச"
ஒரு கேட்டரிங் சர்வீஸ்ல, சமையல் வேலைக்கு துணை.
பாத்திரங்களை சுத்தம் பண்ணி, சாயந்தரம் வீட்டுக்கு போகும்போது, அங்க காலையில சமைச்சத பொட்டலம் கட்டி, வீட்டுக்கு கொண்டு போவங்க. இப்படி தாங்க ரெண்டு வருஷம் ஓடிச்சு..
"உனக்கு குழந்தைங்க உண்டா பா"
இரண்டு புள்ளைங்க.. ஆர்ட்ஸ் காலேஜில் படிக்கிறானுங்க.முதல் வருஷம்,ரெண்டாம் வருஷம்.
" உன்ன பார்த்தா ரொம்ப சின்ன வயசா தெரியுது".
“நாற்பது வயசு தான் ஆகுதுங்க.எங்க அப்பா,அம்மா சின்ன வயசிலே விட்டுட்டு போயிட்டாங்க”.
என் இருபது வயசுலேயே தாத்தா கல்யாணம் பண்ணி வச்சாரு. நான் போயிட்டா, உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பொறுப்பா யாருமில்லப்பா.
கட்டாயப் படுத்தி பண்ணி வச்சிட்டார்.
"இப்ப உன் மனைவி எப்படி இருக்கா".
"ஏதோ கொஞ்சம் பரவாயில்லீங்க.வீட்டோட நடமாட முடியுது.சமையல் செஞ்சுக்க முடியுது".
" நான் இப்ப பழைய படி தைரியமா வண்டி ஓட்ட ஆரம்பிச்சுட்டங்க".
"பொழுதோட வீட்டுக்கு போயிடுப்பா".
"இல்ல சார்.சவாரி கிடைக்கிற வரை,
ஓட்டி முடிச்சுட்டு தான் போவேங்க."
"சார் உங்க இடம் வந்துடுச்சு".வண்டியை நிறுத்தி மீட்டரை பார்த்தான்.
“310/ரூபாய் காட்டுது சார்”.
இரு நூறு ரூபாய் தாள்கள் இரண்டை அவனிடம் நீட்டினேன்.
மீதி தொண்ணூறு ரூபாயை என்னிடம் கொடுக்க வந்தான்.
ஏதோ ஒரு கருணையில் "பரவாயில்ல. நீயே வச்சுக்கோப்பா" என்ற போது,
"எதுக்கு சார்" என்றான்.
"ஏதாவது சிலவுக்கு வச்சுக்கோ"என்றேன்.
"சார் நான் இதுவரை என் உழைப்பில வர காச மட்டுமே நம்பி வாழ்ந்து கிட்டிருக்கன் சார்".
"அது போதுங்குற திருப்தியையும், அந்த சந்தோஷத்தையும், அந்த ஆண்டவன் எனக்கு எப்பவும் தரணும்னு வேண்டிக்கங்க சார்".என்று மீதி பணத்தை என் கைகளில் அழுத்தி ஆசி கேட்ட போது ….
நான் தாழ்ந்து போனேன்.

Leave a comment
Upload