தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 8- மோகன் ஜி

"கனாக் கண்டேனடி....தோழி !"

20260028212247173.jpg

இன்று காலை கல்லூரி வளாகத்தில் ஒரு மரத்தடியில் நானும் ஒரு தெலுங்கு நண்பரொருவரும் பேசிக் கொண்டிருந்தோம். சற்று தொலைவில் கண்மூடி படுத்திருந்த ஒரு நாய், திடுக்கிட்டு விழித்து சிறு குரைப்பு குரைத்து விட்டு, மீண்டும் கண்களை மூடிக் கொண்டது .

“கனா ஏதும் கண்டிருக்கும்” என்றேன்.

“மிருகங்களும் பறவைகளும் கனாக் காணாது.. மனுசப்பயல் தான் ஏங்கிஏங்கிக் கனவு காண்பவன்”என்று என் கூற்றை நண்பர் நிராகரித்தார்.

அவரை மறுத்தேன். “வடமொழி மட்டும் தமிழிலக்கியத்தில் மிருகங்களும் கனாக்காண்பவையே என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.”

“அவற்றையெல்லாம் எழுதினது உங்களைப் போன்ற கவிகள் தானே? டிரீம் மெர்ச்சண்ட்ஸ்!”

பரவாயில்லை.. நம்மையும் கவி என்கிறார்.. சரி! அவரை விட்டுவிடுவோம்..

இரவு இந்த உரையாடலை யோசித்தபடி இருந்தேன். மிருகங்களும் பறவைகளும் கனாக்காணும் சில சங்கப் பாடல்கள் உண்டு. நினைவு கூர்ந்ததில் ஒன்று:

நற்றிணையில் ஒரு பாடல். இதை எழுதியவர் நக்கண்ணையார்.

பாடல்:

உள்ளூர் மா அத்த முள் எயிற்று வாவல்

ஓங்கல்அம் சினைத்தூங்கு துயில் பொழுதின்

வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங்காட்டு

நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு

அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப்

பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்

பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே.

பொருளுரை:

மா அத்த – மாமரம்

முள் எயிற்று வாவல் – முட்கள் போன்ற பற்கள் கொண்ட வௌவால்

ஓங்கல் – உயர்ந்த

அம் – அழகிய

சினை –கிளை

தூங்கு – தொங்கிக்கிடக்கும்

அழிசி – அழிசியம் எனும் பெருங்காடு

நெல்லி அம் புளிச் சுவைக் – சுவையான புளிக்கும் நெல்லிக்கனிகள்

கனவியா அங்கு –என் கனவே போல்

அது கழிந்தன்றே – எனை விட்டகன்றது

பனி அரும்பு உடைந்த – தண்ணிய அரும்புகள் மொட்டவிழ்ந்த

பெருந் தாட் புன்னை – அகன்ற நடுமரம் கொண்ட புன்னைமரம்

துறை – துறைமுகம்

மேய் இப்பி – உயிருள்ள சிப்பிகள்

நெய்தல் திணையின் அழகான பாடல் இது.

மாமரத்தில் வசிக்கும் ஒரு வௌவ்வால் நெல்லிக்கனி உண்பதில் பெரு விருப்பம் உடையதாம்.. அழிசியம் எனும் பெருங்காட்டிடை விளைந்த புளிக்கும் நெல்லிக்கனிக்காக ஏங்கியபடி உறக்கம் கொள்கிறது. என்றோ உண்ட அக்கனியினை உண்பதாய் கனவும் காண்கின்றதாம் .

நெய்தல் தலைவி , தலைவனுடன் கூடிக்களித்த தருணங்களையே எப்போதும் எண்ணியபடி, கனவிலும் நனவிலும் அந்த நினைவுகளின் கனம் தாங்க மாட்டாது, தோழியிடம் புலம்புகின்றாள்.

நெல்லிக்கனி சுவையை கனாக்காணும் வௌவ்வாலை தனது நிலைக்கு உவமையாய்ச் சொல்லி கழிவிரக்கம் மிகுந்து மயங்குகிறாளாம்.

இதேபோல்,புலியினைக் கனவில் காணும் யானை, இரால்மீனைப் பற்றி கனவு காணும் காகம் என்று பல உவமைகள் சங்கப் பாடல்களில் கிடைக்கின்றன.

என்ன.. கொஞ்சம் படிக்க பொறுமை வேண்டும்.