தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து விட வேண்டாம்...

20210504203738703.jpeg

சென்ற வாரம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்தார். மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு பிரதமர் ஆய்வு செய்தார். அந்தக் கூட்டத்தில் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்துஅதிகாரியும் கலந்து கொண்டார். இது நடைமுறையில் இல்லாதது. அந்த மாநிலங்களின் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வது வழக்கம் தான். ஆனால், சுவேந்து... பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர், அவர் வேண்டுமென்றே அழைக்கப்பட்டிருக்கிறார் என்பது மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு.

புயலால் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களான குஜராத், ஒடிசா மாநிலங்களில் பிரதமரின் ஆய்வு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்படவில்லை. மேற்குவங்கத்தில் மட்டும் அழைத்ததில், அரசியல், பழிவாங்கல் இல்லாமல் வேறு என்ன என்று கேள்வி கேட்டார் மம்தா. இந்தக் கூட்டத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்த மம்தா, புயல் பாதிப்பு குறித்து அறிக்கை தந்து, 20,000 கோடி மத்திய அரசு தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை சமர்ப்பித்துவிட்டு உடனடியாக புறப்பட்டுவிட்டார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அவருடன் வந்த மேற்கு வங்க தலைமைச் செயலாளரும், முதல்வர் மம்தாவுடன் சென்று விட்டார். மத்திய அரசிடம் நிதி உதவி கோரும் மேற்குவங்க முதல்வர், இப்படிப் பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்தது, ஏதோ சம்பிரதாயமாக கோரிக்கையை மகஜராக தந்தது எல்லாமே சரியான அணுகுமுறையாக தெரியவில்லை.

மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலாபன் பந்தோபாத்யாவை, பிரதமரின் ஆய்வு கூட்டம் நடந்த சில மணி நேரங்களிலேயே டெல்லிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதுபற்றி மம்தா பானர்ஜி குறிப்பிடும்போது, இதில் தலைமைச் செயலாளர் என்ன தவறு செய்தார். அவரை திரும்ப அழைப்பது என்பது பழிவாங்கும் அரசியலையே மத்திய அரசு செய்கிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. இந்த உத்தரவை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்தார். ஆனால் அதற்கு பதில், மத்திய அரசு பணிக்கு அழைக்கப்பட்டும் பணியில் சேராத தலைமைச் செயலாளருக்கு, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நோட்டீஸ் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன், மே கடைசி தினம் ஓய்வுபெற இருந்த தலைமைச் செயலாளருக்கு, மூன்று மாதம் பணி நீட்டிப்பு வேண்டும் என்று கேட்டதற்கு... மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்றதும்... அவர் பணி நீட்டிப்பை ஏற்க மறுத்து, பணி மூப்பு அடிப்படையில் மே மாதம் இறுதி நாளன்று ஓய்வு பெற்றதாக மேற்குவங்க அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பிரதமர் முதல்வர் மோதலில் ஒரு அதிகாரி எப்படி எல்லாம் பந்தாடப் படுகிறார் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆளுங்கட்சி, பாரதிய ஜனதா எதிர்க்கட்சி என்பதுதான் மக்கள் தந்த தீர்ப்பு. இதைப் பிரதமரும், முதல்வரும் மனதில் கொண்டு கட்சி அரசியலை தாண்டி ,மக்கள் பிரதிநிதிகள் என்ற கடமை உணர்வுடன் பணி செய்வது தான் நாட்டுக்கு நல்லது. மக்கள் எதிர்பார்ப்பும் அதுதான்...