நீதிக்கு வந்த சோதனை...
ஜார்க்கண்ட் மாநிலத்தில், தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது, ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நீதிபதி, தன்பாத் நகரில் மாஃபியா கும்பலை சேர்ந்தவர்களின் வழக்குகளை விசாரித்து வந்துள்ளார். சமீபத்தில் மாஃபியா கும்பலை சேர்ந்த இரண்டு பேருக்கு ஜாமின் வழங்க மறுத்துள்ளார். அவர்களுக்கு இந்தக் கொலையில் சம்பந்தம் இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் இந்தக் கொலையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கவனித்து வருகிறது.
மாவட்ட நீதிபதி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி ரஞ்சன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காவல்துறை, நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கை விபத்து வழக்காக தான் பதிவு செய்துள்ளது. ஜார்க்கண்ட் தலைமை நீதிபதி, இதை கொலை வழக்காக மாற்றி எப்ஐஆர் போட சொன்ன போதுகூட காவல்துறை தாமதப்படுத்தி இருக்கிறது. அதற்கும் தனது கண்டனத்தை தெரிவித்த தலைமை நீதிபதி, போலீசார் வேண்டுமென்ற இந்த வழக்கை விசாரிப்பதில் காலதாமதம் செய்தால்... உடனடியாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவேன் என்று தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த படுகொலைக்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இந்தக் கொலை தொடர்பாக பேசியதாக தெரிவித்திருக்கிறார். இப்போது உச்சநீதி மன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. நீதிபதி படுகொலை, வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டது அல்ல. கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், இந்தக் கொலையை வீடியோ எடுத்து, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவி விட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவில்... பின்னால் சிலர் பேச்சுக் குரல் கேட்கிறது. குற்ற வழக்கில் ஈடுபட்டவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தால், அவர்களுக்கு இது தான் கதி என்று மறைமுகமாக நீதித்துறையை அந்த வீடியோ அச்சுறுத்துகிறது என்பதுதான் உண்மை.
இது நீதித்துறைக்கு விடப்பட்ட அச்சுறுத்தல், சவால் என்பது தான். காவல்துறை இந்தப் படுகொலையில் மெத்தனமாக இருப்பதை தலைமை நீதிபதியும் சுட்டிக்காட்டியிருக்கிறார். நீதிமன்றம், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனே விசாரித்து, ஜாமீன்.. வாய்தா.. என்று வாய்ப்புகள் தராமல், கடுமையான தண்டனை தந்தால் தான் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.
இந்தச் சம்பவம் நீதிக்கு வந்த சோதனை என்ற நோக்கில் எல்லா நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும் என்பதைத்தான் இந்தக் கொலை சம்பவம் உணர்த்துகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Leave a comment
Upload