தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...! - ஜாசன்

மறுப்பும் பாராட்டும்...

20210704085730258.jpeg

ஜூனியர் விகடன் தொடங்கிய இரண்டாவது இதழ் முதல், நான் எழுதத் தொடங்கினேன். எழுத்தாளனாக வேண்டும் என்ற என் நோக்கம், நிரூபன் என்று திசையில் திருப்பியது ஜூனியர் விகடன் தான்.

என் முதல் கட்டுரை... “இதுதான் கூடுவாஞ்சேரி” அந்தக் காலத்தில் இவன் சரியான கூடுவாஞ்சேரி. எவனாவது கூடுவாஞ்சேரியில் இருந்து வருவான், அவன்கிட்டே சொல்லு... இது இதுபோன்ற டயலாக் சினிமாவில் வந்து, கூடுவாஞ்சேரி என்றால் கிராமத்து ஆளாக நினைத்த காலம் அது. எங்கள் அப்பா கடைசியாக மாற்றலாகி வந்தது கூடுவாஞ்சேரி. 1979இல் நான் கூடுவாஞ்சேரிவாசி ஆனேன்.

அந்தக் கட்டுரையில் நீங்கள் நினைக்கிற மாதிரி கூடுவாஞ்சேரி கிராமம் இல்லை. அங்கு டிவி இருக்கிறது, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பெண்கள், சுடிதார், ஜீன்ஸ் போட்ட பெண்கள் தான் இருக்கிறார்கள் என்று எழுதிய நான், கூடவே... உலக சமுதாய சேவா சங்கம் என்று போர்டு இருக்கிறது. ஆனால், எப்போதும் பூட்டியே வைத்திருக்கிறார்கள். ஜீவா வாலிபர் சங்கம் என்று ஒரு காலி கீற்றுக் கொட்டகை இருக்கிறது என்றும் எழுதி இருந்தேன்.

உலக சமுதாய சேவா சங்கம் என்பது வேதாத்திரி மகரிஷி தொடங்கியது. வேதாத்திரி மகரிஷியின் பூர்வீகம் கூடுவாஞ்சேரி தான். அங்கே யோகா முதல், அவர்கள் என்னென்ன சேவை செய்கிறார்கள் என்று நீண்ட மறுப்பு கடிதத்தை எழுதியிருந்தார்கள். இதேபோல் ஜீவா வாலிபர் சங்கமும், நாங்கள் சும்மா இல்லை என்று ஒரு மறுப்புக் கடிதம் எழுதியிருந்தார்கள். இந்த இரண்டு கடிதத்தையும் மதன் சார் என்னை அழைத்து காட்டி படித்துப் பார்க்க சொன்னார். இப்படியாக எனது முதல் கட்டுரைக்கு, இரண்டு மறுப்புகள் வந்தது. அதுவும் வெளியிடப்பட்டது. இப்படித்தான் என் நிருபர் வாழ்க்கை தொடங்கியது.

ஒரு முறை... நண்பர் ஒருவரை பார்க்க மின்சார ரயிலில் பொன்னேரி போய்விட்டு சென்ட்ரல் திரும்பிக் கொண்டிருந்தபோது... வழியில் ஒரு ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் எங்கள் பெட்டியில் ஏறி டிக்கெட் பரிசோதனை செய்தார். என் டிக்கெட்டை காண்பித்தேன் ரைட் என்று மார்க் போட்டுக் கொடுத்துவிட்டார். என் எதிரே உட்கார்ந்திருந்த நடுத்தர வயது பெண்மணியிடம் டிக்கெட் கேட்க... அவர் டிக்கட்டை காண்பித்தபோது, இது பழைய டிக்கெட் செல்லாது... புதிய டிக்கெட்டை காண்பியுங்கள் என்று சொன்னார். அப்போது அந்தப் பெண்மணி, இது பழைய டிக்கெட் அல்ல... அரை மணிநேரம் முன்பு, மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நான் வாங்கியது என்று சொன்னார்.

அந்த டிக்கெட் பரிசோதகரோ... டிக்கெட்டில் போடப்பட்டிருந்த ரப்பர் ஸ்டாம்ப் தேதியை காண்பித்து, தேதி இரண்டு என்று போட்டிருக்கிறது. இன்று என்ன தேதி என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லிவிட்டு, நீங்கள் அபராதம் கட்டவேண்டும் என்று சொன்னார்.

ஆனால் அந்தப் பெண்மணி, நான் அபராதம் எல்லாம் கட்ட மாட்டேன். இது நான் இன்று வாங்கிய டிக்கெட் தான், அரைமணி முன்புதான் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வாங்கினேன் என்று ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொன்னார். அப்போது டிக்கெட் பரிசோதகர், நீ பொய் சொல்ற... இந்த பழைய டிக்கெட்டை காமிச்சு ஏமாத்துற... நீ இப்ப வித்தவுட்ல தான் வந்திருக்க என்று சொன்னதும், அந்தப் பெண்மணி கோபமாக நான் எதுக்கு பொய் சொல்லணும், நான் ஒன்றும் வக்கு இல்லாதவள் அல்ல... என்று பர்சை திறந்து கத்தையாக 100 ரூபாய் நோட்டுக்களை காண்பித்தார்.

அப்போதும் அவர், விடாப்பிடியாக இல்லை... நீ வித்தவுட் தான். அபராதம் கட்டித்தான் ஆகவேண்டும் என்றார் பிடிவாதமாக. இப்படி விவாதம் நீண்டுகொண்டே போக... அதற்குள் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் வர, நீ இறங்குமா இங்க வா வந்து ஃபைன் கட்டு என்று டிக்கெட் பரிசோதகர் சொல்ல... அந்தப் பெண்மணி கொஞ்சமும் அசராமல், நான் எங்கு வேண்டுமானாலும் வருகிறேன். ஆனால், அபராதம் கட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டு, டிக்கெட் பரிசோதகர் உடன் பேசிவிட்டு ரயில்நிலையத்தில் இறங்கினார். என் நிருபர் புத்தி என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று நானும் இறங்கினேன்.

பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலும், டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து அவரை அபராதம் கட்டு என்று சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் பெண்மணியும் உறுதியாக முடியாது என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்மணி என்னுடன் மீஞ்சூர் ரயில் நிலையம் வாருங்கள், தினந்தோறும் எந்த எண் முதல் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்திருப்பார்கள், அது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இந்த டிக்கெட் எண்ணை அந்த ரிஜிஸ்டரை வைத்து செக் செய்து கொள்ளுங்கள். இது பழைய டிக்கெட் என்று நிரூபித்தால், நான் நான்கு மடங்கு அபராதம் கட்ட தயார் என்றார்.

இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்து பொதுஜனங்கள், அந்தப் பெண்மணிக்கு ஆதரவாக டிக்கெட் பரிசோதகரிடம்... அந்தம்மவை பார்த்தா வசதியானவங்க மாதிரி இருக்காங்க என்று சொல்ல... அதற்கு டிக்கெட் பரிசோதகர், நீங்க உங்க வேலைய பாருங்க.. நான் என் வேலையை பாக்குறேன் என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்மணியிடம், சரிம்மா.. நீ சொல்றபடி நான் மீஞ்சூர் ரயில்வே ஸ்டேஷன் வருகிறேன். அங்கே செக் பண்ணுவேன், இது பழைய டிக்கெட் என்றால் நீ சொன்னபடி நாலு மடங்கு அபராதம் கண்டிப்பா கட்டணம் என்று சொல்ல... அப்போதும் அந்தப் பெண்மணி உறுதியாக உங்களிடம் வெள்ளை பேப்பர் இருந்தால் தாருங்கள், அதில் எழுதி கையெழுத்துப் போட்டு தருகிறேன் என்று சொன்னார்.

எனக்கு இந்தச் சம்பவம் சுவாரஸ்யமாக இருக்கவே, நானும் ஓடிப்போய் மீஞ்சூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கெட் வாங்கிக்கொண்டு காத்திருந்தேன். ரயில் வந்ததும் அவர்களுடன் நானும் மீஞ்சூர் ரயில்வே ஸ்டேஷன் போனேன்.

மீஞ்சூர் ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் ஆவலுடன் நான் இறங்கி, அவர்களை பின் தொடர்ந்தேன். டிக்கெட் பரிசோதகர் அந்தப் பெண்மணி கொடுத்த டிக்கெட்டை டிக்கெட் கவுண்டரில் காண்பித்து, இது என்று வாங்கிய டிக்கெட் என்று கேட்டார். அதற்கு டிக்கெட் கவுண்டரில் இருந்த அந்த கிளார்க், இது இன்றைக்கு வாங்கிய டிக்கெட் தான் சார் என்றார். அப்போதும் அவர் நம்பாமல், ரப்பர் ஸ்டாம்ப் தேதியை காண்பித்து இதில் எதுவும் சரியாக இல்லையே என்று கேட்டபோது... அந்த கிளார்க், ஆமாம் சார்... ரப்பர் ஸ்டாம்ப் எழுத்து தேஞ்சு போச்சு, சரி இல்லை... வேற ரப்பர் ஸ்டாம்ப் கேட்டு இருக்கிறோம். ஸ்டாக் இல்லை, வந்ததும் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்ல... அப்போது அந்த டிக்கெட் பரிசோதகர், அந்த ரப்பர் ஸ்டாம்பை வாங்கி ஒரு வெள்ளை பேப்பரில் சோதித்தபோது... ஒவ்வொரு முறையும்... தேதி, வருஷம், மாதம் எல்லாம் மாறி மாறி காட்டியது. அதன் பிறகுதான் அவர் திருப்தியானர்.

உடனே அந்த பெண்மணியிடம், சாரி மேடம்.. இது இன்னிக்கு வாங்கிய டிக்கெட் தான், நீங்கள் போகலாம் என்று சொல்ல... உடனே ஆவேசப்பட்ட அந்தப் பெண்மணி, என்னது போகலாமா... இதைத்தான் முதலிலிருந்து நான் சொன்னேன். அப்ப எல்லாம்... நீ, வா, போ என்று பேசிவிட்டு... இப்போது சாரி மேடம் என்று சொல்கிறீர்கள்.

பேசின்பிரிட்ஜ் ஸ்டேஷனில் என்னை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள். அவர்கள் எல்லோரும் நான் ஏதோ வித்தவுட்டில் வந்ததாக தானே நினைத்திருப்பார்கள். நான் அடிக்கடி ரயிலில் பயணிப்பவள். நாளைக்கு என்னை யாராவது பார்த்தால், இந்த பொம்பள நேத்து வித்தவுட்ல வந்து செக்கிங் இன்ஸ்பெக்டர்கிட்ட மாட்டிக்கிச்சி என்று நினைக்க மாட்டார்களா. அவர்களிடம் யார் போய் சொல்வது... ஒவ்வொரு பயணியிடமும், நீங்கள் போய் நான் வித்தவுட் இல்லை என்று வந்து சொல்லுங்கள். இல்லையென்றால், உங்களை விட மாட்டேன் என்று சொல்ல... அப்போதும் அவர் மேடம் சாரி என்று சொன்னதையே திரும்ப சொல்ல... அவர் மூஞ்சி ரொம்பவும் பரிதாபமாக இருந்தது. அதற்குள் ஸ்டேஷன் மாஸ்டர் வர, அவரும் தன் பங்குக்கு சின்ன மிஸ்டேக் என்று சொல்ல... என்னது இது... சின்ன மிஸ்டேக் ஆ என்று ஆவேசமாக கேட்டார். புகார் புத்தகம் எங்கே இருக்கிறது..? நான் அதில் இந்தப் புகாரை எழுத வேண்டும். தரவில்லை என்றால், நேராக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்று அங்கு உங்கள் மேல் புகார் பண்ணுவேன் என்று சொல்ல... அவர் வேறு வழியின்றி புகார் புத்தகத்தைத் தர... அந்தப் புத்தகத்தில் நடந்த எல்லா விஷயத்தையும் அழகாக எழுதி, கையெழுத்துப் போட்டு நேரம், தேதி எல்லாம் பளிச்சென்று தெரியும்படி எழுதினார்.

கூடவே கோடிக்கணக்கில் பட்ஜெட் போடும் ரயில்வேயால், ஒரு ஐந்து ரூபாய் ரப்பர் ஸ்டாம்ப் வாங்க யோகியதை இல்லை. இந்தருங்கள் 200 ரூபாய். எவ்வளவு ரப்பர் ஸ்டாம்ப் வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள், அப்பாவி பயணிகளை அலை கழிக்காதீர்கள் என்று இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை ஸ்டேஷன் மாஸ்டரிடம் நீட்ட... அவர் பயந்து போய், அதெல்லாம் வேண்டாம் மேடம். இப்ப ரெண்டு பக்கத்துக்கு நீங்க ஏழுதி வைத்திருப்பதற்கே எனக்கு ஓலை வரும். அதாவது மெமோ வரும் என்பதை சொல்லி, அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் எப்படியாவது என் சொந்த செலவில் இன்று ரப்பர் ஸ்டம்ப் வாங்கி விடுகிறேன் என்று அந்த பெண்மணியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.

அதன் பிறகு அந்தப் பெண்மணி, டிக்கெட் பரிசோதகரைப் பார்த்து... உங்கள் கடமை உணர்ச்சியை நான் பாராட்டுகிறேன். இவ்வளவு வருடம் சர்வீஸ் செய்த உங்களுக்கு, யார் வித்தவுட்.. யார் நல்லவர் என்று கண்டுபிடிக்க தெரியவில்லை என்று சொல்லிவிட்டு, அடுத்து வந்த ரயிலில் சென்ட்ரலுக்கு போனார். நானும் தான்.

அந்த வாரம் ஜூனியர் விகடனில்... பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி நடத்திய போராட்டம் என்று நடந்த சம்பவத்தை கட்டுரையாக எழுதினேன். அடுத்த வாரம் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தியது என் மனைவிதான், நான் தொடர்ந்து ஜூனியர் விகடன்படிக்கும் வாசகர். உங்கள் நிருபருக்கு, கழுகுக்கு மூக்கில் வியர்க்கும் என்பார்கள், அதுபோல நடந்த சம்பவத்தை நேரில் பார்த்து எழுதியிருக்கிறார் என்று எழுதியிருந்தார். அந்தக் கடிதமும் பிரசுரமானது.