தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

20211026180131673.jpg

ஏன் இந்த அலட்சியம்

அரசாங்கம் சில திட்டங்களை அவசர அவசரமாக செயல்படுத்தும். பிறகு, பாதியில் அந்தத் திட்டங்களை அம்போ என்று விட்டுவிடும். அதற்கான காரணம் என்றுமே மர்மமாக தான் இருக்கும், எதுவுமே வெளிப்படையாக இருக்காது.

மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கும் விழா என்று பிரமாதமாக நடத்துவார்கள். ஆனால், அந்த ஆம்புலன்சை இயக்க ஓட்டுநரை நியமிக்க மாட்டார்கள். இதுபற்றிய கடிதப் போக்குவரத்து மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கும். அதிகாரிகள் கடிதம் எழுதியதோடு, தங்கள் வேலை முடிந்தது என்று விட்டுவிடுவார்கள். இதுதான் அவர்கள் கடமை உணர்வுக்கு அடையாளம்.

ஆம்புலன்ஸ் மட்டுமல்ல... குடிநீர் தொட்டி, பள்ளி கட்டிடம், கழிப்பறை எல்லாம் கட்டி முடித்து மூடி வைத்திருப்பார்கள். இதற்கு என்னk காரணம் என்பது யாருக்குமே தெரியாது. இதன் விளைவு.... அந்த இடங்களெல்லாம் சமூக விரோதிகளுக்கு வசதியாக இருக்கும்.

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றிய திருமழப்பாடி கிராமத்தில், காந்தி நகர் கிராம மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு, 8 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அந்த கழிப்பிடம் கிராம மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கவில்லை, அதிகாரிகள் அதை மூடியே வைத்திருந்தார்கள்.

கிராம மக்கள் எல்லோரும் புகார் கடிதம் தந்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. பயன்பாட்டில் இல்லாத அந்தக் கழிப்பிட கட்டிடம், சேதமடைந்து செடி முளைத்து, பாழடைந்த கட்டிடம் ஆகிவிட்டது. கழிப்பறை வசதி இல்லாத கிராம மக்கள், திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். இப்போது உச்சகட்டமாக கிராமத்து மக்கள், கழிப்பிடத்தை சீரமைத்து தொலைக்க வேண்டுமென்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அதற்கும் இன்றுவரை எந்த பலனும் இல்லை.

அரசு நிர்வாகம் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து கட்டிய கட்டிடத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்காமல் அதை பாழ் செய்திருக்கிறார்கள். இதற்க்கு யார் காரணம் என்று கண்டறிந்து, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். தவிர... இது போன்று கட்டி முடித்து பயன்பாட்டுக்கு இல்லாத கட்டிடங்களை கண்டுபிடித்து, அதை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். கிராமத்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு, அதுதான் சரியான பிராயச்சித்தமாக இருக்கும்.