தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

முதல்வர் முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா

20220013161144172.jpg

எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது அவர் தடுப்பூசிகள் பற்றி நிறைய சந்தேகங்களை எழுப்பினார். ஆளுங்கட்சியானதும் தடுப்பூசியை சரியான தீர்வு என்றார். மத்திய அரசு போதிய தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வில்லை என்றால், நாங்களே தடுப்பூசிக்கு உலக அளவில் டெண்டர்கோருவோம் என்றார். அப்போதுதான் இந்தியா தடுப்பூசிகளை உற்பத்தி செய்த தொடக்கநிலை. உற்பத்தி செய்த தடுப்பூசிகளை பாரபட்சமின்றி எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்து தந்தது மத்திய அரசு. அதன் பிறகு அந்த திட்டத்தை கைவிட்டார். இந்தியா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது என்பதை அவர் மறந்து போனார்.

மத்திய அரசு இந்த தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது. அதன் பிறகு தடுப்பூசி தட்டுப்பாடு தீர்ந்தது, தமிழக அரசு பல இடங்களில் முகாம்களை நடத்தி தடுப்பூசி செலுத்தியது.

தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக மாற்றி இருக்கிறோம் என்று பெருமையாகச் சொன்னார் முதல்வர்.

தற்போது மூத்த குடிமகன்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது, இதுவும் இலவசம் தான்.

ஆனால் தமிழக முதல்வர், அவரது 3 டேஸ் தடுப்பூசிகளையும் தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கும் இது பொருந்தும்.

தடுப்பூசி திட்டத்தை ஒரு இயக்கமாக மாற்றி இருக்கிறோம் என்று பெருமை பேசும் முதல்வர், அவர் ஏன் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டிய தார்மீக கடமை அவருக்கு இருக்கிறது. கம்யூனிஸ்ட் தலைவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்லோருமே அரசு மருத்துவமனையில் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். டெல்லியில் பிரதமர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டார். தமிழக அரசு மருத்துவமனைகள் பற்றிய அவரது அச்சத்தை அவர் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயம். முதல்வர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா.