ஜூலை29, 2019 அன்று கர்நாடகா, மங்களூர் அருகே கரைப்புரண்டு ஓடும் நேத்ராவதி ஆற்றின் பாலச்சுவற்றில் ஒருவர் ஏறி நின்றதை தொலைதூரத்திலிருந்து பார்த்ததாக, ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் காவல்துறையிடம் கூறினார். காணாமல் போன காஃபிடே நிறுவனர் சித்தார்த் பற்றி கர்நாடக காவல்துறை விசாரித்த போது... அவர்களுக்கு இந்த பதில் தான் கிடைத்தது என்றாலும்.... கண்டிப்பாக அது சித்தார்த்தாக இருக்காது என்றே அன்று அனைவரும் நம்பினர். ஆனால், அனைவரது நம்பிக்கையிலும் மண் அள்ளி போட்டது, இரு நாட்களுக்கு பிறகு ஜூலை 31, 2019 அன்று ஆற்றிலிருந்து கிடைத்த சித்தார்த்தின் உடல்.
“கஃபே காபி டே”யின் நிறுவனர் வீரப்பா கங்கையா சித்தார்த்தா ஹெக்டே. கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்த சித்தார்த், கர்நாடக அரசியல்வாதியான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் மாளவிகாவை மணம் முடித்தவர்.
கடந்த 2019-ல் சித்தார்த்தா கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட போது, காஃபி டே நிறுவனத்துக்கு ரூ 7200 கோடி ரூபாய் கடன் இருந்தது. அவரது மரணச் செய்தி, செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளியான நாளில், நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இறுதியில் பிப்ரவரி 3, 2020 அன்று அவரது நிறுவனம் வர்த்தக பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் 2020இல் சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே, அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். மாளவிகா தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநராக இருந்தார்.
பெருங்கடன் கழுத்தை நெருக்க, அன்பு கணவரை அகாலமாக இழந்து இரு குழந்தைகளுடன் நின்ற மாளவிகா, எப்படி இந்த சிக்கல்களை சரி செய்து நிறுவனத்தை மீட்பார் என்ற கேள்வி அனைவருக்குமே எழுந்தது. காஃபி டே என்பது ஏதோ சாதாரண நிறுவனம் அல்ல... சித்தார்த்தின் 37 வருட உழைப்பு... 209 நகரங்களில், 1,843 காஃபி டே கிளைகள், சர்வதேச அளவில் பல நாடுகளில் கிளைகள், 30,000 நேரடி ஊழியர்கள் என பரந்து விரிந்தது. சித்தார்த்தின் குடும்பத்திற்கு கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக காஃபி உற்பத்தி பாரம்பரிய தொழில். நாட்டின் மிகப்பெரிய காஃபி கொட்டைகள் ஏற்றுமதியாளர்களில் சித்தார்த் முன்ணணியில் இருந்தார். தேயிலை குடிக்கும் தேசத்தை காஃபி தேசமாக ஏன் மாற்றக்கூடாது என்று யோசித்து, தேசத்து இளைஞர்கள் கூட்டத்தையே காஃபிக்கு மாற்றியவர்.
ஆண்டுக்கு 20,000 டன் காஃபிக் கொட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, உள்நாட்டில் 2000 டன் காஃபிக் கொட்டைகளை விற்பனை செய்யும் நிறுவனமாக கொடிக்கட்டி பறந்து, இந்தியாவின் முதல் 20 கோடீஸ்வரர்களில் ஒருவராக சித்தார்த் வலம் வந்தார். ஆனால் 1999-ம் ஆண்டு “மைன்ட்ட்ரீ” (Mindtree) எனும் மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கியதிலிருந்து, விதி விளையாட ஆரம்பித்தது. மைண்ட்ட்ரீயின் கிளைகள் வியன்னா, செக் குடியரசு என வெளிநாட்டிலும் கால் பதிக்க, கடன் சுமை ஏறத் தொடங்கியது. இதனால் சுமார் 5000 கோடி அளவுக்கு கடன் ஏற்பட, ஏற்கனவே காஃபி தோட்டத்தை வாங்க ஏராளமாக கடன் வாங்கி இருந்த சித்தார்த்தாவுக்கு மேலும் சிக்கல் உண்டானது.
அதே நேரத்தில் பங்குச்சந்தையில் காஃபி டே நிறுவனத்தின் பங்குகளின் இழப்பு ஏற்பட, அதிகரித்த கடன் சுமையில் சித்தார்த்தா சிக்கினார். தனது சொத்து மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரது சொத்துக்களையும் காஃபி டே கம்பெனியின் கடனுக்காக அடகு வைத்தார். “மைண்ட்ட்ரீ” மென்பொருள் நிறுவனத்தின் சில பங்குகளை எல்&டிக்கு விற்று, அதில் பெற்ற 3000 கோடியில் சில கடன்களை அடைத்தார்.
ஒரே நேரத்தில் பல தொழில்களை பார்த்து வந்த சித்தார்த், ஆயிரம் ஏக்கரில் வாழைத்தோட்டம் அமைத்து வெளிநாடுகளுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி, டார்க் ஃபாரஸ்ட் பர்னிச்சர் கம்பெனி என பல வியாபாரங்களை குறைவில்லாமல் செய்து வந்தார். சித்தார்த் செய்த ஒரே தவறு, தனது நிறுவனங்களின் பங்குகள் விற்பனை குறித்து முறையான கணக்கு வழக்கை வைக்காமல் விட்டது தான். அந்நேரத்தில் வருமானவரித்துறையின் குறிக்கு ஆளானார். தொடர்ந்து வந்த நெருக்கடிகள், சொத்துக்கள் முடக்கம் ஒரு புறம்.., கோடிக்கணக்கில் வாங்கிய கடன் மறுபுறம் என்று கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சித்தார்த் ஆற்றில் குதித்து தன் முடிவை தேடி கொண்டார்.
கணவரின் இறப்பிற்கு பின் 2020-இல் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றார் அவரது மனைவி மாளவிகா. பெங்களூரில் பிறந்து வளர்ந்த மாளவிகா, ஒரு பொறியியல் பட்டதாரி. 1969-இல் பிறந்த இவர் 1991-இல் சித்தார்த்தை மணம் முடித்தார். இஷான், அமர்த்தியா என்று இரு மகன்கள் உண்டு.
ஒருபுறம் கணவரின் இறப்பு. மறுபுறம் 7,000 கோடி ரூபாய் கடன், நிறுவனத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை. தவிர... தனது இரண்டு குழந்தைகளை கரை சேர்க்க வேண்டும் என்ற நிலையில் பொறுப்பேற்ற மாளவிகா ஹெக்டே, “கடன்களை காஃபி டே நிறுவனம் நிச்சயம் திரும்பச் செலுத்தும்” என்று அன்று உறுதி அளித்தபடி... ரூ 7000 கோடி கடனை இன்று (2021-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி) ரூ.1731 கோடியாகக் குறைந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தையும் சமாளித்து, மார்ச் 2019-இல் ரூ.7200 கோடியாக இருந்த கடனை, 31 மார்ச், 2020 நிலவரப்படி ரூ.3100 கோடியாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
சிறுகடன்களை முதலில் அடைத்த மாளவிகா, பெரிய கடன்களை அடைக்க வங்கிகளிடம் பேசி கால அவகாசம் வாங்கினார். சில சொத்துக்களை விற்று, கடன் சுமையை சமாளிக்கக்கூடிய அளவிற்கு குறைத்தார். அமெரிக்க பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோனிடம் இருந்து ஒரு தொகையை பெற்றது மற்றும் மைண்ட்ட்ரீயின் சில பங்குகளை விற்றது போன்ற நடவடிக்கைகள், நிறுவனத்தின் கடன் சுமையை குறைக்க உதவியது. அதுமட்டுமல்லாமல்... மாளவிகா, மிகப் பெரிய நிறுவனங்களுடன் பங்கு கொள்முதல் ஒப்பந்தம் செய்தார். அத்தோடு நாடு முழுவதிலும் இருந்த காஃபி டே கிளைகளில் அதிகம் வருமானம் வராத, லாபம் தராத கிளைகளை பாராபட்சம் பார்க்காமல் இழுத்து மூடினார். மாறாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கியமான மால்கள், தியேட்டர்கள், ஐடி பார்க்குகள், பிரபல கல்லூரிகள் என புதிய கிளைகளை திறந்தார்.
தனது நிறுவனத்திற்கு புதிய முதலீட்டாளர்களை கொண்டு வந்தார். இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்தது. தற்போது நாடு முழுதும் 572க்கும் மேற்பட்ட காபிடே கடைகள் லாபத்தில் இயங்கி வருகின்றன. 20,000 ஏக்கர் காபி தோட்டத்தில் விளையும் காபி கொட்டைகள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மாளவிகா தற்போது குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் இந்தப் பொறுப்பில் இருப்பார்.
ஜூலை 2020 இல், அவர் தனது முதல் பொது அறிக்கையை வெளியிட்ட பிறகு, தங்களின் மாபெரும் நிறுவனத்தின் 30,000 ஊழியர்களிடம் உரையாற்றினார். அதில் “இந்த நிறுவனம் மதிப்பு மிக்க ஒன்று. எந்தக் காலத்திலும் இதை கைவிட முடியாது. சித்தார்த்தின் கனவு நிறுவனமாகிய இதை முன்னெடுத்து சிறப்பாக நடத்துவதே என் கணவருக்கு நான் செய்யும் மரியாதை. சித்தார்த்தின் பெருமைமிக்க பாரம்பரியத்தை நிலைநாட்டுவதே எனது நோக்கம். கடன் வழங்கிய ஒவ்வொருவருக்கும் என்னால் இயன்றவரை தீர்வு காணவும், வணிகத்தை பெருக்குவதற்கும், எங்கள் ஊழியர்களை உற்சாகப்படுத்தி, இந்த நிறுவனத்தை வளர்ப்பது போன்ற பணிகளை எனக்காக அவர் விட்டு சென்றிருக்கிறார். அவரது கனவை நினைவாக்க இறுதி வரை போராடுவேன்” என்று கூறியிருந்தார். சொன்னபடியே செய்தும் காட்டியுள்ளார் மாளவிகா.
கடனை குறைப்பது என்பது மாயாஜாலத்தினால் நடக்கவில்லை. மாளவிகாவின் அசாத்திய உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தெளிவான திட்டமிடல் போன்றவற்றால் தங்களது நிறுவனத்தை நிமிர வைத்திருக்கிறார் மாளவிகா. தப்பு செய்து விட்டீர்கள் சித்தார்த் சார்..! எதை கண்டு நீங்கள் பயந்து ஓடினீர்களோ, அதை இன்று வென்று உங்கள் மனைவி சாதித்திருக்கிறார்.
இளவரசர் சித்தார்த்தன், உலக வாழ்வை வெறுத்து ஞானம் தேட, தன்னுடைய குழந்தை ராகுலன் பிறந்த 7 நாட்களில் மனைவியான யசோதரையை நீங்கி சம்சார பந்தத்திலிருந்து விடுப்பட்டு புத்தர் ஆனாராம். ஆனால் யசோதரையால் அப்படி செய்ய முடியுமா? மகன் ராகுலன் இருக்கிறானே?! அரண்மனையிலேயே குடில் அமைத்து ஒரு புத்த பிக்குனியாக, சந்நியாசி போல் வாழ்ந்து மகனையும் நல்ல முறையில் வளர்த்து வந்தாள்.
பல ஆண்டுகள் கழித்து புத்தர் ஒரு முறை அரண்மனைக்கு வந்தபோது, அவரை நோக்கி யசோதரை கேட்டாள் “ ‘புத்தர்’ என்றால் என்ன அர்த்தம்..?”
அதற்கு புத்தர்... “அறிவாளி, உன்னதமானவன், ஞானம் பெற்றவன்..” என்றாராம்.
அதற்கு.... “நானும் பாடம் கற்றிருக்கிறேன்..!” என்றாள் யசோதரை.
“அப்படி என்ன பாடம் நீ அறிந்திருக்கிறாய்..?” என புத்தர் கேட்டதற்கு...
“தன்னம்பிக்கை உள்ள தைரியமான பெண், தன்னளவில் முழுமை அடைய யாருடைய துணையும் தேவையில்லை... ஏனெனில் அவளே முழுமையானவள்.!” என்றாளாம்.
புத்தர் இதை கேட்டு நிச்சயமாக தலையை தொங்கவிட்டு தான் திரும்பி போயிருக்க வேண்டும்..
காஃபி டே சித்தார்த்தும், மனைவி, மக்களை கைவிட்டு கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டாலும், அவர் மனைவி மாளவிகா தங்களின் நிறுவனத்திற்கு பொறுப்பேற்று இன்று நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார். பெண்கள் இயல்பிலேயே மன உறுதி வாய்ந்தவர்கள். போராட்ட குணம் மிக்கவர்கள். நம் நாட்டில் படிக்காத ஒரு பெண்மணி கூட கணவன் பிரிந்து போனாலோ அல்லது இறந்து போனாலோ, முதலில் நிலைகுலைந்து நின்றாலும், பின் சுதாரித்து நேர்மையான வழியில் இட்லி சுட்டு விற்றாவது, குழந்தைகளை படிக்க வைத்து, ஆளாக்கி குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.
கடன் வாங்கி விட்டு, திருப்பி செலுத்த மனமில்லாமல், பொய்யான மஞ்சகடுதாசி கொடுத்து, மக்களையும், நாட்டையும் ஏமாற்றி, நாட்டை விட்டே தப்பிப்போகும் மானங்கெட்டவர்களுக்கு மத்தியில்... நேர்மையுள்ள சித்தார்த், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டாலும், அவரது மனைவி மாளவிகா, தனது கணவனின் மீதிருந்த களங்கத்தை போக்கும் விதமாக, அவர் வைத்துவிட்டு சென்ற கடன்களை பெருமளவு திருப்பி செலுத்தி, அவர் சார்ந்த நிறுவனத்தையும், அதன் ஊழியர்களையும் பேணி காத்து நல்ல விதமாக நடத்தி வருகிறார் என்பது பெருமைக்குரிய விஷயம்.
பெண் இனத்திற்கே உதாரணமாக திகழும் இந்த இரும்பு பெண்மணி, வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் எப்படி தன்னை சுழற்றி அடித்தாலும்... அன்பு கணவர் இல்லாத சூழ்நிலையிலும், நெஞ்சுரம் கொண்டு, தனது செயல்களால், தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதை நிரூபித்துள்ளார் மாளவிகா சித்தார்த்.
பெண்கள் பலகீனமான வர்க்கம் (weaker sex) இல்லை. ஃபீனிக்ஸ் பறவை போல் சாம்பலிலிருந்து எழ கூடியவர்கள் என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகி இருக்கிறது.
Leave a comment
Upload