தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

20220021214033429.jpeg

டெல்லியில் வரும் இருபத்தாறாம் தேதி நடக்கவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் குறியீடு அனுமதி கிடைக்காதது, பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மேற்குவங்க முதல்வர் அவர்களது அலங்கார ஊர்தி அனுமதி மறுக்கப்பட்டதால் அவரும் அதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து முதன் முதலாக போரிட்டவர்களாக கருதப்படும் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் வஉசி, பாரதியார் பற்றிய புகைப்படத் தகவல் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் அலங்கார ஊர்தி முடிவு செய்யப்பட்டது. இது நான்காவது கூட்டத்திலேயே தேர்வுக் குழுவால் மறுப்பு தெரிவிக்கப்பட்டு, அனுமதி மறுக்கப்பட்டது.

பாரதிய ஜனதா 2014-இல் பதவியேற்ற பிறகு, ஒடிசாவில் 1817 ஆம் ஆண்டு நடந்த பைக்கா கலவரத்தை முதல் சுதந்திர போராட்டம் என்றும் முன்னிறுத்த முயற்சி. 1887 இல் நடந்த முதல் சிப்பாய் கலகம் தான் முதல் சுதந்திரப் போராக இந்திய வரலாற்றில் பல ஆண்டுகளாக இடம்பெற்றுள்ளது. கேரளா திருவாங்கூரில் 1708 ஆம் ஆண்டில் நடந்த கலவரத்தை முதல் சுதந்திரப் போராட்டமாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக சுதந்திர போராட்ட வரலாற்றை மறைக்கும் எந்த முயற்சியும் பலிக்காது என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

முதல்வர் இதை வெறும் அரசியல் அறிக்கை என்று இத்தோடு இதை விட்டு விடக்கூடாது. தமிழ்நாட்டில் அண்ணா, பெரியார், எம்ஜிஆர் சிலைகளை தவிர சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் எத்தனை செய்திருக்கிறோம் என்ற கேள்விகளை அவரே அவர் மனதில் கேட்டுப் பார்க்கட்டும். பகுத்தறிவுவாதி என்று தன்னை பெருமையாக சொல்லிக் கொள்ளும் கலைஞர் கருணாநிதி, ராமானுஜர் வரலாற்றை கொஞ்சமும் யோசிக்காமல் எழுதினார். மதத்தில் புரட்சி செய்த மகான் என்று ராமானுஜரை வர்ணித்தார் கலைஞர்.

அதேபோல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தீரன் சின்னமலை, வஉசி, வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், சுப்பிரமணிய சிவா, ஜீவானந்தம், ராணி மங்கம்மாள் என்று நீளும் தமிழக சுதந்திர போராட்ட தலைவர்கள் பட்டியலை தேடி எடுத்து, அவர்களின் தியாக வரலாறுகளை பாடப் புத்தகங்களில் முதலில் சேருங்கள். இந்த சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளெல்லாம், எல்லா மாவட்டங்களிலும் நிறுவுங்கள். இவர்கள் பிறந்த நாளை அரசு விழாவாக மாவட்டம் தோறும் கொண்டாட செய்யுங்கள். முதலில் தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாற்றை, தமிழ்நாடு முழுமையாக தெரிந்து கொள்ளட்டும். அதன் பிறகு அவர்கள் வரலாறு டெல்லிக்கு தானாக போய் சேரும், வெறும் அறிக்கை எதையும் சாதிக்காது.