தொடர்கள்
கவிதை
மகளதிகாரம்! 8 - கவிஞர் தனபாண்டியன்

20220405200233627.jpg

# மகளதிகாரம் - 8 #

தொடர் கொஞ்சல்கள்
அடிக்கொருமுறை முத்தங்கள்
அவ்வப்போது கெஞ்சல்கள்
எப்போதேனும் அதட்டல்கள்
இப்படியே கழிகின்றன பொழுதுகள்
அப்பாவிற்கும் மகளுக்குமிடையில்

எப்போதெல்லாம் வாக்குவாதம் முற்றுகிறதோ
அப்போதெல்லாம்
நெடுங்காலத்திற்கு முன்
அப்பா தனை அறியாமல் அடித்ததை
நினைவிலிருந்து உருவி
சுழற்கத்தியென சுழற்றுகிறாள்

முன்னேறி வந்த அப்பா
அத்தனையையும் போட்டுவிட்டு
சரணாகதி அடைந்ததை
ரகசியமாக ரசித்தவள்
சமாதானம் செய்து மீட்டெடுக்கிறாள்

இட்சூட்சமங்கள் ஏதுமறியாத அப்பா
எப்போதும்போல
கொஞ்சல்கள்
முத்தங்கள்
கெஞ்சல்கள் என்ற வரையறைக்குள் வந்துவிட
பெரு முயற்சி செய்கிறார்