தொடர்கள்
கதை
மேகமலை - சத்யபாமா ஒப்பிலி

2022060119484672.jpg

வேக வேகமாக பேருந்து நிலையத்தை அடையும்போது இரவு மணி பத்தாகிவிட்டது. தேனிக்கு கடைசி பேருந்து பத்து பத்திற்கு. பட பட வென்றிருந்தது செல்வத்திற்கு. வேலை மதுரை மேலமாசி வீதியில், குடும்பம் தேனியில். வெள்ளிக்கிழமை இரவு கடைசி பஸ் பிடித்தால் பாதி ராத்திரி போய் சேர்ந்து விடலாம். இது அவன் வாராவாரம் செய்வது தான். திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது. அவன் மனைவி அவனுடன் மதுரையில் வந்து தங்க மறுக்கிறாள். செல்வி மட்டும் தன்னுடன் வர சம்மதித்துவிட்டால் இந்த அலைச்சல் பிரச்சனை கிடையாது. இந்த முறை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும். யோசித்துக்கொண்டே தேனி செல்லும் பேருந்தை தேடினான் செல்வம்.

முத்து மீனாள் டிராவல்ஸ். பாட்டு கேட்டுக்கொண்டே பயணிக்கலாம். வாராவாரம் வருவதால் ஓட்டுநரும், நடத்துநரும் தெரிந்தவர்கள். அவனுக்காக ஒரு சில நிமிடங்கள் காத்திருக்கவும் செய்வார்கள். இன்றும் கிளம்பியிருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் தேடினான். சற்று தொலைவில் புறப்படும் தருவாயில் பஸ் நின்று கொண்டிருந்தது. நடத்துநர் ஒரு கையால் பேருந்தின் கம்பியை பிடித்துக்கொண்டு, விசிலடித்துக்கொண்டே மற்றொரு கையால் அவனை சீக்கிரம் வரச்சொல்லி சைகை காட்டினார். பையையும், தண்ணீர் பாட்டிலையும் பிடித்துக்கொண்டு வேகமாய் ஓடிச்சென்று பேருந்தில் ஏறி, இருக்கையில் அமர்ந்து, தண்ணீர் குடித்தவுடன் தான் உயிர் வந்தது.

"என்ன இன்னிக்கு ரொம்ப லேட்டா ஆயிட்டுது? விசிலுக்கு நடுவே கேட்டார் நடத்துநர்.

"அமாம். கடைல கொஞ்ச வேலை அதிகம் இன்னிக்கு. கிளம்பி இருப்பீங்களோன்னு நெனைச்சேன். "

"இன்னும் அஞ்சு நிமிஷம் லேட்டா ஆயிருந்துச்சின்னா கிளம்பியிருப்போம்."

“நல்ல வேளை.இல்லைன்னா இந்த வாரம் வீட்டுக்கு போக தோனிருக்காது.” தனக்குள்ளேயேசொல்லிக்கொண்டான். வாராவாரம் போகவேண்டும். அது வெறும் கடமை தான். மனைவியிடம் அன்பு காதல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய் கொண்டிருக்கிறது. சூழ்நிலைஅப்படி, அவன் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. தொழிலோ, பணமோ வெளியில் செல்ல அவர்கள் பொதுவாக விரும்புவதில்லை. கஞ்சா வளர்க்கும் தொழில். சிறு வயதிலிருந்து அவனுக்கு அதில் வெறுப்பு. தோழன் போல இருந்த அண்ணனை போலீஸ் அடித்து இழுத்துசென்றது கண்ணை விட்டு அகல மறுக்கிறது. அதைப்போல் இன்னும் எத்தனையோ உறவுகள், தோழர்கள்! ஏன் இந்த தொழில்? இதை விட்டுவிடலாமென்று எத்தனையோ முறை கேட்டாகிவிட்டது. அப்பா மறுத்தது மட்டுமல்ல, அம்மாவும் மறுத்தது தான் ஆச்சரியமாக இருக்கிறது. பணம் விளையும் தொழில். தர்மமோ, ஞாயமோ மரத்தே போய் விட்டது.

அவனும் அவன் நண்பன் சேதுவும் நியாயமாக வாழ விரும்பினார்கள். சேது வனத்துறையில் ஒரு கார்டு ஆக வேலைக்குச் சேர்ந்தான். ஒரு முறை கஞ்சா பயிரிட்டிருப்பதைப் பற்றி போலீஸிடம் துப்பு குடுக்க, செல்வத்தின் கண் முன்னாடி அவன் சுற்றத்தாராலேயே சேதுவின் கை துண்டிக்கப்பட்டது. இதெல்லாம் வேண்டாமென்று மதுரை சென்று ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான். குறைவான வருமானம் தான் ஆனால் நிம்மதியான வாழ்கை. இந்தமுறை எப்படியாவது மனைவியை கூட்டிக்கொண்டு வந்து விடவெண்டுமென்று முடிவு செய்தான்.
பஸ் வேகம் பிடித்தது. இந்த ஓட்டுநர் கண்ணதாசன் பிரியர். பழைய பாடல், வேகமான காற்று, உடம்பெல்லாம் அயர்ச்சி. தூக்கம் கண்ணை இழுத்தது.
இரண்டு மணி நேர பஸ் பயணம். பின் தேனியில் இறங்கி அவன் கிராமத்திற்கு ஒரு மூன்றுகீ.மீ உள்ளே செல்ல வேண்டும். பஸ் வசதி கிடையாது. அவன் சைக்கிளை தேனி பஸ் நிலையத்தருகில் இருக்கும் ஒரு கடையில் நிறுத்தி இருப்பான். அதை எடுத்துக்கொண்டு அவன் வீடு போய் சேர ஒரு மணி ஆகிவிடும்.
“எதற்கு இப்படி அல்லாடுகிறேன்!”. தூக்கத்தை மீறி மனம் நிற்காமல் ஒடியது. மண வாழ்கையோ பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி.இல்லை. உறவினர்கள் யாரும் மதிப்பதில்லை. இருந்தாலும் இந்த ஊரை விட்டு விலகி இருக்க முடியவில்லை. அழகான கிராமம். மேற்கு தொடர்ச்சி மலையும், உயரே செல்லச்செல்ல கற்றில் மிதந்து வரும் தேயிலை, ஏலக்காய், மூலிகைகள் வாசமும் அவனுடன் கலந்தது. மேகமலையை பார்க்காமல் இருக்கவே முடியாது.
ஆனாலும் நிம்மதியான வாழ்கை என்று யோசிக்கும் பொழுது விலகியிருப்பதே மேல் என்று தோன்றியது. தனக்கு குழந்தை பிறந்தால் இந்த கிராமத்து வாடையே இல்லாமல் தான் வளரப் போகிறது. பரவாயில்லை. எல்லாம் ஒரு நாள் மாறும். அப்பொழுது வந்து காண்பிக்கலாம் அத்தனையும்.

"ஆறு மனமே ஆறு" என்ற பாட்டு கேட்டுக்கொண்டிருந்தது. லேசாக புன்னகை செய்து கொண்டான். எப்பொழுது கண் அசந்தானோ தெரியவில்லை.
" அண்ணே, தேனி வந்துடுச்சு. எல்லாரும் இறங்கிடாங்க. நல்ல தூக்கமோ?"
நடத்துநர் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான்.
அவசர அவசரமாய் பையை எடுத்துக்கொண்டு,
"சாரி அண்ணே"
என்று சொல்லி விட்டு இறங்கினான்.
பஸ் ஸ்டாண்டு கொஞ்சம் கல கலவென்று தான் இருக்கும். ஊருக்குள் போகும் போது தான் இருட்டாகவும், ஆள் அரவமற்றும் இருக்கும்.
“ஏம்பூ இன்னிக்கு லேட்டு? கடைக்காரர் கதவை மூடிக்கொண்டே கேட்டார்.

“ஜவுளி கடைல நேரமாச்சு அண்ணே. தீவாளி வருதுல்ல.”
"அமாமாம். நீ வருவல்ல அடுத்த வாரம் தீவாளிக்கு? "
தெரியல அண்ணே. பாக்கலாம்." சைக்கிளை எடுத்துக்கொண்டான்.
போன வருடம் தலை தீபாவளி. முதலாளியிடம் கடன் கேட்டு செல்விக்கு ஐந்தாயிரம் ரூபாய்க்கு புடவை வாங்கிச் சென்றான். அவன் மாமியாரும் இருந்தாள் அங்கே. இருவரும் அந்த புடவையைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் ஓரமாக வைத்து விட்டார்கள்.
ஏன் பிடிக்கலயான்னு கேட்டதுக்கு, “இதுல பிடிக்க என்ன இருக்கு! எல்லாம் என் தலை விதி”என்று அழுது கொண்டே உள்ளே சென்று விட்டாள். அவன் மாமியார் அவனை ஒரு முறை முறைத்துவிட்டு பெண் பின்னாலேயே உள்ளே சென்றாள்.
" பிச்சை காசு ஐயாயிரம் ரூபாய்க்கு புடவை வாங்கிட்டு வந்திருக்கானே இவனை என்ன செய்ய?"
நல்ல பையனா இருக்கானே நம்ம சொல்றபடி கேப்பான்னு நினைச்சு தானே கல்யாணம் பண்ணி வைச்சேன்." மாமியார் புலம்ப ஆரம்பிக்க அவன் பதில் சொல்லாமல் வெளியே சென்று விட்டான். அப்படி கழிந்தது தலை தீபாவளி. இந்த வருஷமும் பெரிய வித்தியாசம் இருக்காது. அதே ஐயாயிரம் புடவை தான் வாங்க முடியும். சிறுக சிறுக சீட்டு சேத்து செல்விக்கு ஒரு பவுனுக்கு ஒரு தோடு வாங்கியிருந்தான். அதையும் அவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று தெரியும். இருப்பினும் கடமையாக செய்தான். தோடு பத்திரமாக இருக்கிறதா என்று சட்டை பையை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
செல்வியை பற்றி யோசித்தான். நல்ல பெண் தான், ஆனால் அம்மாவின் பேச்சுக்கு வேறு பேச்சு பேசமாட்டாள். கொஞ்ச நாள் ஆனால் சரியாகிவிடலாம்.
தனிச்சையாகவே சைக்கிள் அவன் வீட்டை நெருங்கியது. அவனுக்காக யாரும் காத்திருக்க மாட்டார்கள். வாசல் திண்ணையிலேயே படுத்து விடுவான். காலையில் எழுந்து செல்வி கதவை திறந்ததும் வீட்டுக்குள் செல்வான். இன்றும் அப்படித்தான். ஆனால் வீட்டின் வாசலில் நிறைய செருப்பு இருந்தது.
என்ன விஷயமாக இருக்கும். கதவை திறந்து பார்க்கலாமா என்று யோசித்தான். பிறகு எதுவானாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, திண்ணையில் துண்டை விரித்து படுத்துக்கொண்டான்
அசதியானதால் படுத்தவுடன் உறங்கிவிட்டான். காலையில் சூரியன் முகத்தில் அடித்தவுடன் தான் கண்விழித்தது. திண்ணையில் அமர்ந்து உள்ளே எட்டிப்பார்த்தான். கதவு திறந்திருந்தது. உள்ளே யாரும் இருப்பது போல் தெரியவில்லை. இரவு பார்த்த அத்தனை செருப்புகளும் காணாமல் போயிருந்தன. ஒன்றும் புரியவில்லை. பின் பக்கம் சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்து உட்கார்ந்தான். செல்வியையும் காணவில்லை. ஏதோ தவறாகப்பட்டது அவனுக்கு. இங்கே இந்த வீட்டைத் தவிர செல்வதற்கு வேறு வீடு கிடையாது. அவன் திருமணம் ஆகி ஒரு ஆறு மாதத்தில் ஒருவர் பின் ஒருவராய் தந்தை தாய் இருவருமே இயற்கை எய்தினா்.இருந்த ஒரு வீடும் கடனில் அழிந்து போனது. இவன் வழியை மாற்றி இருந்தால் ஒரு வேளை இதெல்லாம் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த நொடி வரை அவனுக்கு குற்ற உணர்ச்சி இல்லை. தன்னால் இயன்ற நியாயமான வாழ்கை அவனுக்கு கம்பீரத்தை தான் குடுத்திருக்கிறது.


இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஒருவன்மூச்சிறைக்க ஓடி வந்தான். வயது முப்பது இருக்கும்.
" செல்வம் ஒண்ணய பஞ்சாயத்துல கூப்பிடறானுவ”
முதலில் இவன் யார் எங்கே பார்த்திருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டே
" பஞ்சாயத்தா? எதுக்கு? என்றான்.
" நல்ல கேட்ட! உன் மாமியா தான் பிராது குடுத்திருக்கு. நீ உடனே வா"
செல்வத்திற்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது. அவன் பயந்தது தான்.
உள்ளே போய் கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு மலையம்மன் கோவிலை நோக்கிச்சென்றான். கோவில் வெளியில் ஒரு திண்ணையில் தான் எப்பொழுதும் பஞ்சாயத்து நடக்கும்..
கோவிலை நெருங்கியதும் அங்கு அமர்திருந்த அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, செருப்பை கழட்டிவிட்டு கோவிலுக்குள் சென்றான். அவன் திருமணம் அம்மனின் சாட்சியுடன்அங்கு தான் நடந்தது. கையை கூப்பி ஒரு கும்பிடு போட்டான். நெற்றியில் திருநீரு இட்டுக்கொண்டு நேரே வெளியே வந்தான். அனைவருக்கும் நடுவில் அமைதியாக கை கட்டி நின்றான்.
" என்ன பிராது ஆத்தா?" ஊர் பெரியவர் கேட்டார்.
" அய்யா நான் நேர விசயத்துக்கு வரேன். இவன் என் பொண்ணுக்கு சரிப்படமாட்டன். கல்யாணமாயி ரெண்டு வருசம் ஆயுடுச்சு. இன்னும் ஒரு வாட்டி கூட செய்யிலுக்கு போவல. நம்ம தொளிலு செய்யமாட்டாறாம். அய்யா, என் புருசன், கொளுந்தன், அங்காளி, பங்காளி எல்லாம் செய்யாதத ஒன்னும் நான் செய்யச் சொல்லல. உள்காட்டுக்கு போய் குழி போடலின்னா காசு எப்படி வரும். என் மவ எப்படி சந்தோஷமா இருப்பா?"
" அடியே இப்படி சொல்றியே. செல்வி முளுகாம வேற இருக்கே!" யாரோ ஒரு பாட்டி சொல்ல, நிமிர்ந்து தன் மனைவியைப் பார்த்தான் செல்வம். ஒரு வினாடி அவனைப் பார்த்துவிட்டு தலை கவிழ்ந்து கொண்டாள் செல்வி.
" ஏம்ப்பா, இம்புட்டு சொல்றாங்களே, பேசாம தொழிலு செஞ்சுட்டு போயேன். இதோ இவன் கிட்ட ஒரு ரெண்டாயிரம் குழி இருக்கும். இவனோட சேந்துக்கோ. நான் சொல்லி விடறேன். என்ன ராசு நான் சொன்னா கேக்க மாட்ட?"
சரி என்று தலை ஆட்டினான் ராசு.
செல்வம் அமைதியாக நின்றான்.
" இப்படி பேசாம இருந்தா என்ன செய்ய? வெட்டி விட்ருலாமா?"


நிதானமாக பேச ஆரம்பித்தான் செல்வம்,

" அய்யா, என் பொன்சாதி மாசமா இல்லாட்டா கூட நான் யோசிச்சிருப்பேன். இப்போ என்னால அவங்க சொல்றத கேக்க சத்தியமா முடியாது அய்யா. என் மகனோ, மகளோ நியாயமான சூழ்நிலைல வளரணம்னு இன்னும் தீவிரமா தோணுது.”

பின் ஓரு அடி முன் நகர்ந்து செல்வியைப் பார்த்து,


“செல்வி, உனக்கு இப்போ புரியாது, அதிகாரிங்கள எப்போவுமே ஏமாத்திகிட்டே இருக்க முடியாது. நாளைக்கு ஒருத்தன் வந்து உன் பையன தரதரன்னு இளுத்துட்டு போவான். ஒன்னும் செய்ய முடியாது. ஞாபகம் இருக்கா நம்ம செந்தில். பத்து வருசம் முன்னாடி உள்ள போனான். இன்னும் வரல. உன்னோட நகையோ, ஏன் உன் ஆத்தா கூட ஒன்னும் செய்ய முடியாது. இதெல்லாம் பரவா இல்லைன்னா இப்படியே இரு.
அய்யா அத்து விட்ருங்கய்யா"
கை கூப்பி பஞ்சாயத்தை கும்பிட்டான்.
சற்று விலகி வந்து மலையம்மனை நெடுஞ்சாண்டையாய் கீழே விழுந்து வணங்கினான். எழுந்து வீட்டுக்கு நடந்தான். வெளியே நிறுத்தி இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு நேரே தேனி நோக்கி செல்ல ஆரம்பித்தான். அவன் மனம் ஏதோ லேசாக இருந்தது. அவன் கூடவே வந்த மேற்கு தொடர்ச்சி மலை சந்தோஷமாக வழி அனுப்பி வைப்பது போல் தோன்றியது. பஸ் நிலையம் வந்தான், டீ கடையில் சைக்கிளை நிறுத்தி விட்டு, "அண்ணே அடுத்த வாரம் வர மாட்டேன். இத பத்திரமா பாத்துக்கோங்க" என்றான்.
"ஏன் தம்பி தீவாளிக்கு வரல?"
"இல்ல அண்ணே. இந்த வருசம் தான் நிசம்மான தல தீவாளி எனக்கு. என் சம்சாரம் ஊருக்கு வரப்போகுது."
புரியாமல் பார்த்த டீ கடைக்காரரைப் பார்த்து சிரித்துக்கொண்டே” ரொம்ப யோசிக்காதீங்கஅண்ணே! நல்ல ஸ்ட்ராங்க்அ ஒரு டீ குடுங்க பாக்கலாம்”.

கடை பெஞ்சில் அமர்ந்து மதுரை செல்லும் பேருந்துக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.