தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

20220602073715651.jpg

கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன்

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதிலும் குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது ரொம்பவும் பேசியது. ரோடு சரியாக போடப்படுவதில்லை, டெண்டர் ஊழல், அந்த திட்டம் மோசடி, இந்த திட்டம் மோசடி, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு, மொத்தத்தில் அதிமுக அரசு கமிஷன் கரப்ஷன் கலெக்‌ஷன் என்று மேடையில் வர்ணித்தார் ஸ்டாலின்.

திமுக ஆட்சி அமைக்கப்பட்டது சாலைப் பணிகள் மேற்கொள்வது பற்றி சில நெறிமுறைகளை வெளியிட்டது. அதாவது ஏற்கனவே போடப்பட்ட சாலைகளை சுரண்டி எடுத்துவிட்டு புதிய சாலை போட வேண்டும் என்பது. இது ஒரு சுற்றறிக்கையாகவே தலைமைச் செயலாளர் வலியுறுத்தி வெளியிட்டார். அவரே சில இடங்களில் ஆய்வு செய்தார். இப்போதும் தலைமைச் செயலாளர் ஆய்வு தொடர்கிறது.

அதேசமயம் திருவெற்றியூரில் தனக்கு கமிஷன் தராமல் சாலை போடுகிறார்கள் என்று அதிகாரியை தாக்கி சாலை போடாமல் தடுத்து நிறுத்தினார், நள்ளிரவில் ஆளுங்கட்சி எம் எல் ஏ. அவர் மீது புகார் வந்தது. உடனே அவர் மீது கட்சிப் பதவி பறிப்பு என்று நடவடிக்கை எடுத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அதேசமயம் தலைமைச் செயலாளர் எல்லா இடங்களிலும் போய் சாலையை சுரண்டி சரிவர சாலை போடுகிறார்களா என்று கவனிப்பது இயலாத காரியம். காரணம் அவருக்கு இருக்கும் பணிச்சுமை என்பதும் உண்மை.

சரியாக சாலை போடுகிறார்களா என்பதை கவனிக்க வேண்டிய பொறுப்பு எல்லா அதிகாரிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உண்டு. ஆனால் அவர்கள் அந்த பணியை சரிவர செய்கிறார்களா என்ற சந்தேகம் இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

வேலூரில் மாநகராட்சி ஒப்பந்தக்காரர் ஒருவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தார் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார். ஒரு குறிப்பிட்ட சாலையில் சிமெண்ட் சாலை போடப்பட்டது. தெருவோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டர் பைக்கை அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே சிமெண்ட் சாலை போட்டார்கள். அதன் தரமும் சொல்லிக் கொள்கிறாற் போல் இல்லை. அவர்கள் வேலை ஏனோ தானோ என்று இருந்ததற்கு அந்த பைக் ஒரு முக்கிய சாட்சி. இது சமூக வலைத்தளத்தில் வைரலான உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பைக்கை அகற்றிவிட்டு சாலையை சரி செய்தார்கள். அதற்குள் இன்னொரு இடத்தில் அதே வேலூரில் சிமெண்ட் சாலை போடும்போது பயன்படுத்தாமல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பின் டயர்கள் தெரியாத அளவுக்கு சாலை என்ற பெயரில் ஏதோ போட்டு சமாளித்திருக்கிறார்கள். இதுவும் வைரலாகி மீம்ஸ் எல்லாம் வர ஆரம்பித்ததும் வேறு வழியின்றி வேலூர் மாநகராட்சி மேயர் அந்த ஒப்பந்ததாரருக்கு தந்த டெண்டரை ரத்து செய்தார் செய்தார். பொது மக்களை தயவு செய்து வெளியே போகாதீர்கள். உங்கள் மீதும் சாலை போடும் ஆபத்து உள்ளது என்று கிண்டல் அடிக்கும் அளவுக்கு இந்த ஆட்சியில் சாலை போடும் பணி விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன கரப்ஷன் கலெக்‌ஷன் கமிஷன் என்ற வார்த்தை நமக்கு நினைவுக்கு வருகிறது. அதற்கு சாட்சி தான் இந்த பைக் மற்றும் ஜீப்.