தொடர்கள்
பொது
தொடரும் மரணங்கள்... தொலையும் மனோதிடம்... - இந்துமதி கணேஷ்

20220630002400572.jpg

பெண் குழந்தைகள் கருவில் இருந்தே தன் போராட்டங்களை தொடங்க வேண்டி இருக்கிறது. பெண்ணாய் பிறந்ததால் மட்டுமே பல சிக்கல்களை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. தொடர் போராட்டங்களுக்கு பிறகு தான் அவர்களால் வெற்றி அடைய முடிகிறது. இவர்களை பாதுகாக்க எத்தனை சட்டங்கள் வந்தாலும் இவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த மாதம் முழுவதும் தமிழகத்தை ஆட்டி படைத்து வருவது சிறுமிகளின் மரணச் செய்திகள் தான். தொடர்ந்து வரும் மரணச் செய்திகள் பெண் பிள்ளைகளை பெற்றவர்களை மிகுந்த அலைக்கழிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது, நம் நாட்டில் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்தெடுக்கவே முடியாதோ என்று பேரச்சத்தில் நிம்மதியின்றி தவித்து வருகின்றனர் தாய்மார்கள்.

கள்ளக்குறிச்சியில் பிரபல தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி, பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதில் இருந்து தொடங்கியது இந்த துயரம்.

ஒரு மாணவியின் தற்கொலை இவ்வளவு பெரிய கலவரமாக மாறியதற்கு பலர் பல காரணங்களை கூறும் போதும், அடைப்படையில் அந்த மாணவி பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி இருக்கலாம் என்று மக்கள் நம்புவதாலேயே இந்த வழக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. காவல் துறை முதலிலேயே பள்ளி தரப்பினரை கைது செய்திருந்தால் இது இவ்வளவு பெரிய போராட்டமாக மாறி இருக்காது, காவல் துறை தாமதிக்க தாமதிக்க மக்களின் கொந்தளிப்பு அதிகரித்து விட்டது. கொந்தளிப்பில் உச்ச நிலையில் தான் பேருந்துகளை எரித்திருக்கிறார்கள் மக்கள்.

20220630002606850.jpg

ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் விவகாரமாக இது அமைந்தது. இதனையடுத்து, கள்ளிக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இத்தனை பெரிய வன்முறைக்கு பிறகு தான் பள்ளியின் தரப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீமதி படித்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஏற்கனவே பல குற்றங்களை மூடி மறைந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். பள்ளியின் உரிமையாளர் பல அரசியல் தொடர்புகள் உடையவர் என்பதால் பல விஷயங்களை மூடி மறைந்திருக்கலாம் என்றும், இந்த கலவரமே வெளியில் இருந்து வந்து இறங்கிய ஆட்களால் ஏற்பட்டது என்றும் பல தகவல்கள் பரவி வருகிறது. ஸ்ரீமதியின் இறுதி கடிதம் இவை எல்லா விஷயங்களில் இருந்து வேறுபட்டு தான் ஆசிரியர்களால் அதீதமாக மனஅழுத்தத்திற்கு ஆழானதை குறிப்பிடுகிறது. இந்த விஷயத்தில் இருந்து மீளும் முன்பே மேலும் மூன்று இளம் பெண்கள் தற்கொலை செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த மாணவி சரளா 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தவர். தோழிகளிடம் விடுதிக்கு போவதாக சொன்னவர் அங்கு தூக்கில் தொங்கி இருக்கிறார். அவரின் மரணமும் சந்தேக மரணமாய் அறிவிக்கப்பட்டு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சிவகாசி அய்யம்பட்டியில் மற்றொரு சிறுமி பள்ளியில் இருந்து திரும்பி வந்து தற்கொலை செய்திருக்கிறார். அதேபோல கடலூர் விருத்தாசலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இப்படிக் கடந்த இரு வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது இது நான்காவது நிகழ்வாகும். ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரியலூரில் மரணித்த மாணவி மதம் மாற வற்புறுத்தியதால் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. அம்மா திட்டியதால் தற்கொலை, பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை என்று இப்படி இந்த மரணங்களுக்கு தனிப்பட்ட காரணங்கள் பல இருக்க வாய்ப்புண்டு. தொடரும் இந்த மரணங்கள் அரசு பள்ளி மாணவிகள், தனியார் பள்ளி மாணவிகள் என்று எல்லாருக்கும் பொதுவாக நடப்பதால் இது தனியாரை மட்டும் குறிப்பிட்டோ அரசு பள்ளிகளை குற்றம் சாட்டவோ முடியாது.

பதின்மத்தின் இறுதியில் இருக்கும் பள்ளி பருவத்து பெண்களுக்கு போதிய முதிர்ச்சி இருக்காது. பிரச்சனை குறித்து யாரிடம் சொல்லி தீர்வு காணலாம் என்பதற்கான வழிமுறைகள் தெரியாததும் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். பருவ வயதில் இருக்கும் அவர்களுக்கு பல பாலியல் தொல்லைகள் ஏற்பட கூடும். முக்கியமாக விடுதியில் தங்கி படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள். விடுதி அந்த பெண்ணிற்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா, அங்கு அவளுக்கு ஏற்படும் சிக்கலைகள் என்னென்ன என்பது போன்ற பாதுகாப்பு தொடர்பான விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளிடம் கண்டிப்பு காட்டுவதை விட அவர்களுடன் நட்பான முறையில் பழகினால் மட்டுமே அவர்கள் தங்கள் மனதில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை ஒளிவு மறைவின்றி நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி குழந்தைகள் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களை நாம் லேசாக விட்டுவிடாமல் அதன் காரணங்களை ஆராய்ந்து பிரச்சனைகளை களைய ஆவண செய்ய வேண்டும். தற்கொலைக்கு பாலியல் துன்புறுத்தல்கள் மட்டுமே காரணம் என்றும் கூறிவிட முடியாது. பள்ளிப் பருவக் காதல்களை ஆசிரியரோ, குடும்பத்தினரோ கடுமையாக கண்டிப்பதோ அல்லது பள்ளியில் சகமாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களால் கடுமையாக திட்டப்படுவதும் கூட காரணமாக அமைகிறது.

இறந்து போன எல்லா குழந்தைகளும் பதினேழு மற்றும் பதினெட்டு வயதுடையவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்கிற மன அழுத்தமும் அவர்களுக்கு இருக்க வாய்ப்புண்டு, ஸ்ரீமதி தன்னுடைய கடிதத்தில் அதை தான் காரணமாக கூறுகிறார். சாதாரண தேர்வுகளுக்கே இங்கு மதிப்பெண் குறைந்தால் எப்படி அனைவரையும் எதிர்கொள்வது என்று தன்னை கூட்டிற்குள் அடைத்துக் கொள்ளும் சிறுவர்கள் பள்ளி இறுதி தேர்வு என்னும் போது அதற்காக மிக அதிகமாக கவலை படுகிறார்கள். இந்த பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சில ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதும் அதை பற்றி வீட்டில் புகார் கூறினால் உன் மதிப்பெண்களை நீ இழக்க வேண்டி வரும் என்று பயமுறுத்துவதும் நிறைய இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில குழந்தைகளின் பெற்றோர் இதனை புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு உதவுகின்றனர், எனினும் விடுதியில் தங்கி படிக்கும் குழந்தைகளுக்கு இது போன்ற நிலை கூடுதல் மன அழுத்தத்தை தரும். அவர்களால் உடனே தன்னுடைய பெற்றோரை தொடர்பு கொண்டு உண்மை நிலையை வெளிப்படுத்த இயலாமல் போகும் போது அவர்கள் தற்கொலை முடிவுக்கு வருகிறார்கள்.

தொடர்ந்து இப்படி தற்கொலை மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அரசு இதற்காக என்ன செய்ய போகிறது என்ற பெருங்கேள்வி நம்முன் எழுகிறது. பாலியல் தொல்லைகளை இந்த இளம் பெண்கள் எதிர்கொண்டால் அவர்களுக்கு உதவ தனியாக எந்த அமைப்புகளும் இன்னும் உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு மரணத்திற்கும் தனிப்பட்ட காரணங்கள் இருந்த போதும் காவல்துறை ஓட்டுமொத்தமாய் இந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் அளித்து இதை போன்ற மரணங்களுக்கு எப்படி பட்ட நடவடிக்கைகள் எடுக்க பட வேண்டும் என்பதை வரையறுத்து அதற்கான வழியில் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

20220630002502563.jpg

வாழ்க்கை ஒரு சுழற்சி முறையில் தான் நம்மை வழி நடத்திச் செல்கின்றது. நம்முடைய பெற்றோர் மிக கடினமாக உழைத்து தான் முன்னேறினார்கள், அவர்கள் நமது கஷ்டங்களை கொஞ்சம் குறைத்து நம் வாழ்வை சற்றே லகுவாக்கினார்கள். நாம் நம் குழந்தைகளுக்கு கஷ்டம் என்பதே தெரிய கூடாது என்று நினைத்து வளர்க்கிறோம், இதனால் அவர்களால் சிறு தோல்வியையும், சின்ன சின்ன அவமானங்களையும் கூட எதிர்கொள்ள முடியாமல் மனமுடைந்து போகிறார்கள். ஊடங்களில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் மனதளவில் பலமற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி அளிக்க ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பாக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். இதை கட்டாயமான ஒன்றாக பள்ளிக் கல்வித் துறை முன்னெடுக்க வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களின் பிரச்சனைகளில் இருந்து அவர்களை வெளி கொண்டு வர இந்த ஆசிரியரை அல்லது இந்த அமைப்பை அணுகினால் போதும் என்ற நம்பிக்கையை அந்த குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும். முதலில் குழந்தைகள் தன்னுடைய பிரச்சனைகளை பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். எந்த பிரச்சனைக்கும் மரணம் தீர்வாக முடியாது என்பதை ஆழமாக உணரச் செய்தால் மட்டுமே இந்த தற்கொலைகளை தடுத்து நிறுத்த முடியும். இந்த மரணங்களை எல்லாம் நமக்கான படிப்பினைகளாக கொண்டு குழந்தைகளை மனஉறுதியுடன் வளர்ப்போம் அவர்களுக்கு தோல்வி ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள சொல்லி தாருங்கள், இந்த பிரச்சனைக்கு அரசு என்ன செய்யும் பள்ளிகள் என்ன செய்யும் என்று கேள்வி கேட்டு கொண்டிருக்காமல் நாம் என்ன செய்யலாம் நம் குழந்தைகளை எப்படி வளர்க்கலாம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் சிந்தித்து செயல் பட வேண்டும், அதுவே நம் குழந்தைகளுக்கு நாம் உருவாக்கி தரும் மிக சிறந்த எதிர்காலத்திற்கான முதலடி.