தொடர்கள்
பொது
இந்த வாரம் கவனிக்க வைத்தவை - மாலா ஶ்ரீ

20220630004715791.jpg

வீடு விற்பனைக்கு முன் லாட்டரியில் ₹1 கோடி!

அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அடிக்கணும்.

கேரள மாநிலம், மஞ்சேஸ்வரா பகுதியை சேர்ந்தவர் முகமது பாவா. வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில், சில மாதங்களுக்கு முன் 2000 சதுர அடியில் கனவு வீட்டை கட்டி, தனது குடும்பத்துடன் முகமது செட்டிலானார்.

இதற்கிடையே தனது 2வது மகள் திருமணம், வீடு கட்டுமானப் பணிகளுக்காக லட்சக்கணக்கில் முகமது கடன் வாங்கியிருந்தார். பின்னர் வாங்கிய கடனுக்கு முகமது வட்டி கட்ட முடியாததால் கடன்காரர்கள் தொல்லை அதிகரித்தது. இதனால் முகமதுவுக்கு நிம்மதி பறிபோய், கடன் தொல்லை கழுத்தை தெரிந்தது. கடனுக்காக ஆசையாய் கட்டிய வீட்டை விற்பனை செய்ய முகமது முடிவு செய்துள்ளார்.

தரகர் மூலம் ஒருவர் முகமதுவின் வீட்டை விலைபேசி முடித்தார். கடந்த 27-ம் தேதி மாலை 5 மணியளவில் வீட்டுக்கு முன்பணம் அளிப்பதாக அந்நபர் கூறியுள்ளார். அன்று மதியம் ஒரு மணிக்கு சோகத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார் முகமது. திரும்பி வரும்போது, கேரள அரசின் 4 லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி வந்துள்ளார்.

அடுத்த 2 மணி நேரத்தில் வெளியான லாட்டரி முடிவுகளில், முகமது வாங்கிய ஒரு டிக்கெட்டுக்கு ₹1 கோடி பரிசு விழுந்திருப்பது தெரியவந்தது.

அப்புறம் ஏன் விக்கப் போறார். அது தான் கடைசி நேர லக். அதிர்ஷ்டம்.

பாலசந்தர் படம் பாணியில் ஒரு காதல் பழி வாங்கல்.....

20220630005039341.jpg

அமெரிக்காவை சேர்ந்தவர் அகஸ்டா ஹப்பிள்.

‘‘எனக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. எனது 16 வயதில், 30 வயதான ஜேம்ஸ் என்ற வாலிபரை காதலித்தேன். இருவரின் உறவும் கடந்த 2 ஆண்டுகள் நன்றாக இருந்தது. பின்னர் என்னை காதலர் தொடர்பு கொள்வதை தவிர்த்தார்.

எனது போனையும் எடுக்கவில்லை. இதனால் அவர் என்னை ஏமாற்றுவது தெரியவந்தது. இதையடுத்து எங்களின் காதலில் கசப்பு நிலவியது. பின்னர் சில நாட்கள் கழித்து ஜேம்ஸை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் தன்னை மன்னிக்கும்படியும், மீண்டும் 2வது முறை காதலிப்பதாக கூறினார். நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால், சிறிது நாட்களிலேயே என்னை விட்டு ஜேம்ஸ் பிரிந்து சென்றுவிட்டார்.

அப்போது அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணினேன். அதற்காக ஜேம்ஸின் தந்தையிடம் நட்பு ஏற்படுத்தி, காதலிக்க துவங்கினேன். பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டேன். தற்போது இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தற்போது நாங்கள் இருவரும் 5-ம் ஆண்டு திருமண நாளை மிகச் சிறப்பாக கொண்டாடினோம். இதன்மூலம் எனது காதலை புறக்கணித்த காதலர் ஜேம்ஸை பழிவாங்கியதாக எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்!’ என அகஸ்டா ஹப்பிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அகஸ்டா ஒரு வேளை கே.பியின் மன்மத லீலை படம் பார்த்திருப்பாரோ ???

அழிவதும் பெண்ணாலே...அட மீண்டும் அழிவதும் பெண்ணாலே.....

20220630005521410.jpg

உத்தரப் பிரதேசம்

சிலாவன் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு திவாரி. இவர்மீது கடந்த 2000-ம் ஆண்டு உறவுக்கார பெண்ணின் உறவினர்கள் பாலியல் புகார் அளித்தனர். அதனால், இப்புகாரின்பேரில் விஷ்ணு திவாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இவ்வழக்கில் 2 ஆண்டு விசாரணை கைதியாக இருந்த விஷ்ணு திவாரிக்கு, லலித்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் விஷ்ணு திவாரி மேல்முறையீடு செய்துள்ளார். எனினும், அதற்கு தேவையான ஆவணங்களை இணைக்காததால், 16 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விஷ்ணு திவாரி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அத்தீர்ப்பில், மருத்துவ பரிசோதனை அறிக்கை பாலியல் வன்கொடுமையை நிரூபிப்பதாக இல்லை. பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவில்லை என நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து 20 ஆண்டு கால சிறைவாசம் முடிந்து, விஷ்ணு திவாரி வெளியே வந்திருக்கிறார். பின்னர் தனது 43-வது வயதில், புதிய வாழ்க்கை துவங்கும் எண்ணத்தில் விஷ்ணு திவாரி பெண் பார்த்திருக்கிறார். அவருக்கு பக்கத்து ஊரிலேயே திருமணத்துக்கு பெண் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் தனது திருமணத்தை விஷ்ணு திவாரி எளிமையான முறையில் நடத்தினார். ஆனால், திருமணமான மறுநாளே அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் புதிதாக திருமணம் செய்த பெண், வீட்டிலிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்துடன் ‘எஸ்கேப்’ ஆகியிருந்தார்!

இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் விஷ்ணு திவாரி புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுகுறித்து அப்பகுதி போலீசார் கூறுகையில், ‘‘தனது கையில் இருந்த சிறிய பணத்துடன் புதிதாக இல்வாழ்க்கை துவங்கலாம் என விஷ்ணு திவாரி நினைத்திருந்தார். அதுவும் தற்போது கைகூடாமல் போய்விட்டது. இவர் திருமணம் செய்து பணத்துடன் தலைமறைவான பெண், ஏற்கெனவே சில மோசடி வழக்குகளில் தொடர்பு உடையவர்.

ஆக மீண்டும் இந்த துணுக்கின் தலைப்பை பார்க்கவும்.

அணில் ஓடாத மத்திய பிரதேசம்.....

20220630005925699.jpg

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள ஷிவா விஹார் காலனியில் வசிப்பவர் பிரியங்கா குப்தா. இவரது மாமனாருக்கு சொந்தமான வீட்டில் 10க்கும் மேற்பட்டோர் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு வந்த கரண்ட் பில்லை பார்த்து பிரியங்கா குப்தா குடும்பத்தினர் அதிர்ச்சியாகினர். அதில் ₹3,419 கோடி மின் கட்டணம் கட்டும்படி இருப்பதை பார்த்து பிரியங்காவின் மாமனாருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதனால் பிரியங்கா குப்தாவின் குடும்பமே குழப்பத்தில் ஆழ்ந்தது.

பின்னர் பிரியங்கா உறவினர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘அவரது மின் கட்டண பதிவு தவறுதலாக அச்சாகியுள்ளது. அவர்கள் உண்மை தொகையான ₹1,300ஐ செலுத்தினால் போதும்!’’ என சாவகாசமாக பதிலளித்தனர். இதைத் தொடர்ந்து, தவறுதலாக மின்கட்டணத்தை பதிவு செய்த மின்வாரிய ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில மின்துறை அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர் அறிவித்துள்ளார்.

ஹூம்... அங்கெல்லாம் அணில் ஓடுவதில்லை. அதனால் மீட்டரும் ஓடுது போல....

வெற்றிக்கு வயதும் தடையல்ல......

20220630010325560.jpg

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் நானஞ்சி எனும் செளத்ரி. பணி ஓய்வுக்கு பிறகும் அவரது உடலும் மனமும் சோர்வடைய வில்லை.. ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று சௌத்ரி விரும்பினார். இதற்கு அவரது மகளும் ஒரு காரணமாக இருந்தார்.

ஏனெனில், அவரது மகள் தலைமுடி கொட்டுவதால் மிகுந்த கவலையுடன் இருந்தார். அவரது தலைமுடி கொட்டுதல் பிரச்னையை தீர்க்க, மூலிகை எண்ணெய் தயாரிக்க சௌத்ரி தீர்மானித்தார். அதன்படி, 50க்கும் மேற்பட்ட மூலிகைகளை ஆராய்ச்சி செய்து எண்ணெய்யை உருவாக்கினார். அந்த மூலிகை எண்ணெயை தனது மகளுக்கு கொடுத்து பரிசோதித்தார் சௌத்ரி. இதில் அவருக்கு 'தலை'மேல் பலன் கிடைத்தது.

இது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 'அவிமீ ஹெர்பலின்' என்ற நிறுவனத்தை சௌத்ரி ஆரம்பித்து,

அதன்மூலம் மூலிகை எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வந்தார்.

இதுகுறித்து சௌத்ரி கூறுகையில், "ஆயுர்வேத மூலிகையை பயன்படுத்தி தயாரிக்கும் எண்ணெய் மூலம் தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன். அதன் பலன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இந்நிறுவனத்தை துவங்கினேன். இந்நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு 4 காரணங்கள் உள்ளன. முதல் இரண்டு காரணங்கள் - ஆயுர்வேதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் தலைமுடியை மக்களிடம் மீண்டும் வளர உதவுவதற்கு, நாங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்ட பணியை கொண்டிருந்தோம்.

அடுத்த இரண்டு காரணங்கள் - நம்பிக்கை மற்றும் குழுப்பணி. எங்களை 'மோசடி' என்று ஒருசிலர் பகிரங்கமாக கூறியபோது, எங்கள் தயாரிப்பின்மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கைதான் காப்பாற்றியது. அதேபோல் - குழுப்பணி. இதில் எனது பங்கு மட்டுமின்றி, எனது மனைவி, மகள் ஆகியோரின் குழுப்பணியும் என்னை ஊக்கப்படுத்தியது!" என்று செளத்ரி தெரிவித்தார்.

தனது 85வது வயதில் முதல் காரை வாங்கியது எப்படி என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் சௌத்ரி மனம் திறந்து விவரித்துள்ளார்.