தொடர்கள்
நேயம்
திருநங்கைகள் -பால்கி

மஹாபாரதத்தில் பாண்டவரில் வில்லாளி வீரனான அர்ஜுனன் பாணடவர்களுக்கு விதிக்கப்பட்ட பன்னிரண்டு வருட வனவாஸம் கழிந்து எவருக்கும் அறிந்திடாத வகையில் ஒரு வருட அஞ்ஞாத வாழ்வு எடுத்துக்கொண்ட வேடம் ப்ரஹனள்ளை என்னும் திருநங்கையாகும். அதே மஹாபாரதத்தில் தன்னிஷ்டப்படி மரணம் சம்பவித்திக்கொள்ளும் வரம் பெற்ற பீஷ்மரை வீழ்த்த உருவாகிய சிகண்டியும் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர். இவ்வாறு சற்றேறக்குறைய ஐய்யாயிரத்து இருணூறு வருடங்களுக்கு முன் தோன்றிய குறிப்பிடத்தக்க திருநங்கைகளாவர்.

சாலைகளின் சந்திப்புக்களில், ஓடும் ரயில்களில், பிஸியான மார்கெட் பகுதிகளில் பொதுவாக எல்லா மாநகரங்களிலும் திருநங்கைகளை அதிகமாக காணலாம். பார்ப்பதற்கு சற்றே ஒரு 1960 களில் இருந்த சினிமா டான்ஸ் நடிகைகளைப் போலே முகம் முழுதும் பளிச்சென பூசிய பவுடர் முகம், கொண்டை சிகையலங்காரம், தாறு மாறாக சுற்றப்பட்டிருக்கும் புடவை சகிதம் நிற்கும் வாகனங்களில் உள்ளவரிடம், ரயிலில் பிரயாணம் செய்பவரிடம், மார்கெட் பகுதியில் இருப்பவரிடம் கைகளை தட்டிக்கொண்டு உரத்த குரலில் பணம் கேட்பதை பார்த்திருக்கின்றோம். சில சமயங்களில் அவர்கள் அருவருக்கத்தக்க முறையில் நடந்துகொள்கிறார்கள் எனவும் செய்தியில் படித்ததுண்டு. பொதுவாகவே, அவர்களை சீண்டுபவர்களிடமே அவ்விதம் நடந்துகொள்வார்கள் எனவும் பார்த்ததுண்டு.

இதோ சென்ற வாரம் இவர்களுக்கு ஒரு இனிய செய்தி நம்ம மஹாராஷ்ட்ராவில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் முனிசிபல் கார்பரேஷன் மூலமாக கிடைத்துள்ளது. ஆம், மகாராஷ்டிராவின் புனே அருகே அமைந்துள்ள பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன், அவர்களை சுயசார்பு(ஆத்ம நிர்பர்)டன் இருக்கச்செய்யும் விதமாக ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. முனிசிபல் கார்ப்பரேஷன் செக்யூரிட்டி மற்றும் க்ரீன் மார்ஷல் பணியில் இவர்களை அமர்த்த முடிவு செய்து அவர்களை நியமிக்கவும் செய்துள்ளது. சம உரிமைகள் மறுக்கப்படும் இந்த சமூகத்தின் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் இந்த பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் (பிசிஎம்சி)மாநிலத்தின் முதல் குடிமை அமைப்பாக (civic corporation) இது அமைகிறது.

20220703065719387.jpg

பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கமிஷனர் ராஜேஷ் பாட்டீல் சமீபத்தில் திருநங்கைகளை பிரதான நீரோட்டத்திற்கு (main stream) கொண்டு வந்து அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உதவ முடிவு செய்தார். பாட்டீல் கூறுகையில், “திருநங்கைகள் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதும், துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு ஆளாகுவதும் அனைவருக்கும் தெரியும்”.

“அவர்களை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வந்து அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்க சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதன்படி எங்கள் முனிசிபல் கார்ப்பரேஷனில் 30 முதல் 35 திருநங்கை(கின்னரர்கள்)களை நியமித்துள்ளோம். இவர்களில் சிலர் கிரீன் மார்ஷல்களாக (சுகாதார கண்காளிப்பளர்களாக) ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தூய்மைப் பிரச்சாரத்திற்கு ஒத்துழைப்பார்கள். அதே நேரத்தில், மற்றவர்களுக்கு நகர்ப்புற அமைப்பில் பாதுகாவலர்களாகவும், மேலும் சிலருக்கு நகரத்தின் தோட்டங்களைப் பராமரிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 ஆம் தேதி பணியமர்த்தம் செய்யப்பட்டதாகவும், இப்போது வரை அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் பாட்டீல் கூறினார்.

“இந்த வாய்ப்பு அவர்கள் தங்கள் முத்திரையைப் பதித்து, கண்ணியத்துடன் வாழ நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன். சிலர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஆக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் (min assured salary) கிடைக்க வழி செய்ய, இது மற்ற பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் பச்சை மார்ஷல்களைப் போல வாழ உதவும். குடிமைத் தலைவர் கூறினார், "திருநங்கைகள் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழுக்களை (Self Help Group) உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு நிதியுதவி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

அவர்களின் நல்வாழ்வு மற்றும் மறுவாழ்வுக்காக செயல்படும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த திருநங்கைகள் பற்றிய தகவலை மாநகராட்சிக்கு கிடைத்தது.

"இப்போது அதிகமான சமூக உறுப்பினர்கள் இவர்களைப் போன்றவர்களுக்கு பணியில் அமர்த்திடும் முயற்சியில் அதற்கான கோரிக்கையுடன் எங்களை அணுகுகிறார்கள். நாங்களும் சில தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடனும் பேசி வருகிறோம், அங்கும் அவர்கள் இதேபோன்ற முயற்சியை மேற்கொள்ள முடியும்," என்று அவர் கூறினார்.

இவரது அலுவலக கேபினுக்கு வெளியே ஒரு திருநங்கையே பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

20220703065938531.jpg

பாதுகாவலராக அமர்த்தப்பட்டிருக்கும் முப்பத்தியொரு வயதாகும் கின்னரர் திருமதி. ரூபா தக்ஸல் கூறுகையில், 'நான் தெருக்களில் பிச்சை எடுத்ததில்லை. இங்கு சேருவதற்கு முன், நான் ஒரு NGO வில் திட்ட உதவியாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளேன். இந்தியாவின் முதல் திருநங்கை கிளினிக்கான மித்ரா கிளினிக்கில் லாஜிஸ்டிக்ஸ் அசிஸ்டெண்ட்டாகவும் பணியாற்றினேன். திருநங்கைகளுக்கு PCMC இல் பணி நிறப்பல் என்று அறிவிக்கப்பட்டபோது நான் சேர முடிவு செய்தேன். என் போன்ற சக உறுப்பினர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருந்தது," என்று அவர் கூறினார்.

20220703070033419.jpg

"நான் 20 திருநங்கைகளுக்கு அவர்களின் ஆவணங்களை முடிக்கவும், தேவையான சான்றிதழ்களைப் பெறவும், குடிமை அமைப்பில் வேலை பெறவும் உதவினேன்," என்று அவர் மேலும் கூறினார்.

திருநங்கைகள் (ஆணிலிருந்து பெண்ணாக மாறுபவர்கள்) வாழ்வாதாரத்திற்காகப் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் அவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்று ரூபா வலியுறுத்தியிருக்கிறார்.

"PCMC யும் கமிஷனரரின் இந்த செயல் எங்கள் சமூகத்தை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. கமிஷனரின் அறைக்கு வெளியே கண்ணியமான வேலை கிடைத்ததில் எனக்கும் பலருக்கும் இது மகிழ்ச்சியான தருணம்," என்று அவர் கூறினார்.

ரூபா தக்ஸல் சமீபத்தில் பிரேம் லோட்லிகர் என்ற திருநங்கையை (பெண்ணிலிருந்து ஆணாக மாறியவர்) மணந்தார், இவரும் அதே குடிமை அமைப்பால் பச்சை மார்ஷலாக பணியமர்த்தப்பட்டார்.

20220703070139290.jpg

“ட்ரான்ஸ் மேன் மற்றும் ட்ரான்ஸ் வுமேன் பாலரை பணியமர்த்துவதற்கான முடிவு மிகவும் சிறந்தது. ஏனெனில் இது தற்போது சாலைகளில் பிச்சை தேடும் இந்த பாலருக்கு நம்பிக்கையையும் வாய்ப்பையும் தரும்” என்று கூறுகிறார் லோட்லிகர்.

பிசிஎம்சி நடத்தும் யஷ்வந்த்ராவ் சவான் நினைவு மருத்துவமனையில் (YCMH) பாதுகாவலராகப் பணிபுரியும் திருநங்கையான ஷைனா ராய், தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக தக்ஸலைப் பாராட்டினார்.

"நான் சிக்னல்கள் மற்றும் கடைகளில் பிச்சை சேகரிப்பேன், ஆனால் ஒரு நாள் நான் தக்ஸல் மேடத்தை சந்தித்தேன். அவளுடைய ஆளுமை, நடத்தை, தொழில்முறை மற்றும் அவர் வாழ்க்கையை நடத்தும் விதம் என்னைக் கவர்ந்தது. அவர் என்னை ஊக்குவித்து இந்த வேலைக்குத் தயார்படுத்தி, எனக்கு இந்த வேலை கிடைக்கவும் உதவினார்.," என்று அவர் மேலும் கூறினார்.

20220703070233501.jpg

வேலை வாய்ப்பு கிடைத்ததற்கும், அத்தகைய அரசு நிறுவனத்தில் பணிபுரிய முடிந்ததற்கும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ராய் கூறினார்.

அனைத்து கழிப்பிற்கும் பிறகு மாதம் ரூ.16,000 பெறுவதாக அவர் கூறினார். சிக்னல்களில் பிச்சை கேட்டு சம்பாதித்த பணத்தை விட இந்த தொகை கொஞ்சம் குறைவாக இருந்தாலும், தற்போது வேலையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

23 வயதான கின்னர் ஷைனா ராய், சில மாதங்களுக்கு முன்பு வரை கடைகளிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் மக்கள் முன் கைகளை விரித்து பிச்சை கேட்டு வழக்கமாகிப்போனவர். ஆனால் இன்றோ, புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். தினமும் தன் சீருடையை அணிந்து கொண்டு இன்று அதே இடங்களைக் கடந்து தனது பணியிடத்திற்குச் செல்வதால் வாழ்க்கை அவளுக்கு சாதகமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

“நான் சீருடை அணிந்து அதே கடைகளைக் கடந்து செல்லும் போது, ​​அதே கடை உரிமையாளர் இப்போது என்னை மரியாதையுடன் பார்க்கிறார். ஒரு கடை உரிமையாளர்,”மேடம், நீங்கள் இப்போது போலீஸ் அதிகாரியாகிவிட்டீர்கள்," என்று கூறுவதாய் கண்ணீர் மல்கினார் ராய்.

பாதுகாப்பு உதவியாளராக வேலை பெறுவதற்கு முன்பு அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த நிகிதா முக்யாடல் (34), அவர்கள் மீதான மக்களின் கண்ணோட்டத்தை மாற்றவும், சமூக உறுப்பினர்களை முன்னோக்கி வந்து சாதாரண கண்ணியமான வாழ்க்கையை நடத்த ஊக்குவிக்கவும் இந்த முயற்சி உதவும் என்று கூறினார்.

இனி இந்த பாலருக்கு கண்ணியத்தோடு வாழ ஒரு விடிவு காலம் நிச்சயம் உண்டு தான். ராஜேஷ் பாட்டீல் போன்றே அனைத்து அரசு அதிகாரிகளும் மக்களின் பிரச்சனைகளை மனிதாபிமான அடிப்படையில் நோக்கினால் நிச்சயம் தொலை நோக்குடனான தீர்வு அமைவதும் நிச்சயம்.