தொடர்கள்
ஆன்மீகம்
முனையடுவார் நாயனார்!!- ​​​​​​​ஆரூர் சுந்தரசேகர்.

முனையடுவார் நாயனார்!!


முனையடுவார் நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். சிவபெருமான் மீது தீராத பக்தியை உடைய முனையடுவார் நாயனார் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவர். பகைவர்களைப் போர்முனையில் வென்று அதனால் பெற்ற வருவாயால் சிவன் கோயில் திருப்பணிக்கும், சிவனடியார்களுக்கும் பல்லாண்டு காலம் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்தார்.
முனையடுவார் நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் "அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்" என்று போற்றுகிறார்.

முனையடுவார் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது:
முனையடுவார் நாயனார் பண்டைய சோழவள நாட்டில் உள்ள சிவதலங்களில் ஒன்றான திருநீடுர் ஸ்தலத்தில் வேளாள குலத்தில் அவதரித்தவர். (திருநீடூர் தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது)
பண்டைய காலத்தில் வீரத்தில் சிறந்தவர்கள் தம்மோடு பல வீரர்களையும் சேர்த்துக் கொண்டு சிறு அணி ஒன்று அமைத்து கொண்டு, மன்னர்களுக்கிடையே போர் நடக்கும் சமயத்தில், அவர்களுள் எவரேனும் இவர்களின் உதவியை வேண்டினால், அம்மன்னனுடன் சேர்ந்து போர் புரிந்து உதவியை நாடியவருக்கு வெற்றி கிடைக்கும்படி செய்வர். போரில் வென்ற மன்னனும் தனக்கு உதவிய படையுடைய வீரருக்குப் பல பரிசுகளையும் பொன்னையும் பொருளையும் வழங்கி பெருமை படுத்துவார்கள்.
வீரத்திலும் விவேகத்திலும் சிறந்த முனையடுவார் நாயனாரும் தம்முடன் பல வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வீர அணி ஒன்றை அமைத்து வைத்துக்கொண்டு இருந்தார். தங்களை நாடி வரும் மன்னருக்கு உதவியாகப் போர் புரிந்து அம்மன்னனுக்கு பெரும் வெற்றியை வெற்றியைத் தேடித் தருவார்.
பல போர்முனையில் எதிரிகளை வென்றதனால் இவர் முனையடுவார் எனப் பெயர் பெற்றார். ("முனை அடுதல்" என்றால் போர் முனையில் நின்று எதிர் தரப்பை வெற்றி கொள்வது)
இதனால் இவரின் இயற்பெயர் மறைந்து முனையடுவார் என்று அழைக்கப்பட்டார்.

முனையடுவார் நாயனார்!!

முனையடுவார் நாயனார் செய்த திருத்தொண்டு:
முனையடுவார் நாயனார் பல உயிர்களைக் கொல்லும் கொடிய தொழிலான போர்த்தொழிலைச் செய்தாலும், சிவபெருமானிடத்திலும், சிவனடியார்களிடத்தே மிகுந்த பக்தியுடன் இருந்தார். பகைவர்களைப் போர்முனையில் வென்று தமக்குக் கிட்டிய செல்வங்கள், பொருட்கள் முழுவதையும் சிவன் கோயில் திருப்பணிக்கும், சிவனடியார்களுக்குத் திருத்தொண்டுகள் புரிவதற்கும் பயன்படுத்தினார். திருநீடுர்ப் பெருமான் பேரருளால் பொன்னும் பொருளும் புகழும் சேர்ந்தது. முனையடுவார் நாயனார் சிவனடியார்களை வரவேற்று அறுசுவை உணவளித்து, அவர்கள் வேண்டிய அனைத்தையும் வழங்கி பல்லாண்டு காலம் பூமியில் வாழ்ந்து இறுதியில் சிவபெருமான்
திருவருளால் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார்.

குருபூஜை நாள்:

முனையடுவார் நாயனார்!!


போர்த்தொழிலினால் வந்த வருவாயைக் கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டுகள் செய்த முனையடுவார்
நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம் பூசம் நட்சத்திரத்தில்
அவர் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமும்
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் நீடூர் அ/மி. அருட்சோமநாதேசுவரர் திருக்கோயிலில் (மயிலாடுதுறை - நீடூர் பேருந்து வசதி உள்ளது. வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து வருவோர், திருப்பனந்தாள் சாலையில், பட்டவர்த்தி என்னும் ஊரை வந்து, இடப்புறமாகத் திரும்பி, மயிலாடுதுறை சாலையில் சென்று நீடூரை அடையலாம்) சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இங்கு முனையடுவார் நாயனாரின் கைகூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

"திருச்சிற்றம்பலம்"

அடுத்த பதிவில் மூர்க்க நாயனார்…!!