தொடர்கள்
தொடர்கள்
தேன்தமிழ்  துளிகள் -4 -மரியா சிவானந்தம்

20220704201713964.jpg

தமிழின் இலக்கியச் செறிவும், வளமையும் நாம் அறிவோம்.

தமிழன்னையின் அழகுக்கு அழகூட்டும் இலக்கியங்களை அவளது அணிகலன்களாக சுத்தானந்த பாரதி தன் பாடலில் வரிசைப்படுத்துவார் .

தமிழன்னையின் காதில் துலங்கும் குண்டலமாக குண்டலகேசி, கையில் வளையாபதி, கருணை பொங்கும் மார்பில் ஒளிர்ந்திடும் சீவக சிந்தாமணி, இடையில் ஆபரணமாக மணிமேகலை அலங்கரிக்க, திருவடியில் சிலப்பதிகாரமும், மணிமுடியாக சூளாமணியும் அணிந்துள்ளாள். அவள் கரங்களில் நீதி செலுத்தும் செங்கோல் என திகழ்வது திருக்குறள் என்னும் பொருள் படும் இந்த அழகிய பாடல் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இலக்கியங்களை வகைப்படுத்துகிறது.

காதொளிரும் குண்டலமும் கைக்கு

வளையாபதியும் கருணைமார்பின்

மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்

மேகலையும் சிலம்பார் இன்பப்

போதொளிர் பூந்தாளிணையும் பொன்முடிச்

சூளாமணியும் பொலியச்சூடி

நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்

தாங்குதமிழ் நீடுவாழ்க! – (சுத்தானந்த பாரதி)

20220704201550724.jpg

இந்த இலக்கியங்களுடன் நாம் இன்னும் ஒரு இலக்கியத்தை தமிழன்னைக்கு அணிவித்து மகிழலாம். அது நான்மணிக்கடிகை என்னும் அணிகலனே! நான்மணிக்கடிகை என்ற "நான்கு மணிகளால் கோர்த்த தோளணி" என்பது பொருள். மிக அழகிய ஆபரணமாக அன்னைக்குப் பொருந்திப் போகும் தகுதி இந்நூலுக்கு உண்டு.

பதினெண் கீழ்க்கணக்கில் இரண்டாவது நூலாகிய இந்நூலும் அறக்கருத்துக்களைக் கூறும் உயர்வான நூல். நான்மணிக்கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் புலவர். கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூல் இது. பண்டைய தமிழனின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இந்த நீதி நூல் விளங்குகிறது. அறக்கருத்துக்களை அழகான உவமைகள் உதவியுடன் விளக்குகிறார் நூலாசிரியர் .

இந்நூலுக்கு இரண்டு கடவுள் வாழ்த்து பாடல்கள் உண்டு. இரண்டு பாடல்களும் திருமாலின் பெருமைகளைக் கூறும் பாடல்களாகும். எனவே இது வைணவ நூல் என கருதினாலும், ஏனைய பாடல்கள் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளைக் கூறுகையில் மதக்கருத்துகள் என்று சொல்ல இயலாது. இரண்டு கடவுள் வாழ்த்துப் பாடல்களுடன் 106 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலிலும் மணி, மணியென நான்கு கருத்துக்களைத் தாங்கி, நான்மணிக்கடிகை என்னும் பெயருக்கு பொருளாக இருக்கின்றன.

மண்ணி அறிப மணி நலம்; பண் அமைத்து

ஏறியபின் அறிப, மா நலம் - மாசு அறச்

சுட்டு அறிப பொன்னின் நலம் காண்பார்;

கெட்டு அறிப கேளிரான் ஆய பயன்.

-நான்மணிக்கடிகை -5

இப்பாடல் உணர்த்தும் பொருள் இதோ :

மாணிக்கம் போன்ற மணிகளின் தரத்தை அறிய அவற்றை கழுவிய பின்பு அறிவார்கள்

குதிரையின் நல்லியல்பை அறிய விரும்புகிறவர்கள் அதன் மேல் சேணம் அமைத்து , ஏறி அமர்ந்து அக்குதிரையின் மேல் பயணம் செய்து பின் உணர்வார்கள்.

தங்கத்தின் சிறப்பை அறிய வேண்டுமாயின், அதை நெருப்பில் இட்டு, புடமிட்டு, உருக்கி தெரிந்துக் கொள்வார்கள் .

ஆனால், நம் உறவினரின் குணநலன்களை அறிய விரும்பும் ஒரு மனிதன் அவனது செல்வம் அழிந்து, துனபப்படும் போது உணர்ந்துக் கொள்வான் .

அழகான உவமைகள் வழியாக வாழ்வின் உண்மைகளை உணர்த்தும் உன்னதமான நூல் நாண்மணிக்கடிகை . ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல அந்த இலக்கியத்தின் சிறப்பைக் காட்ட ஒரு பாடல் மட்டும் தந்துள்ளேன்.

வேறொரு நீதி இலக்கியத்தின் பாடலுடன் அடுத்த வாரம் ..

-சந்திப்போம்