தொடர்கள்
தொடர்கள்
காதல் பொதுமறை -101 காவிரி மைந்தன்

2022061321311891.jpg

20220613213201114.jpg

அந்த ராஜ்ஜியங்கள் சரிகின்றன!

20220709224412122.jpg

அன்பே!

உள்ளத்தில் கரைபுரளும் உணர்வின் பெருவெள்ளம் உறங்கவும் விடுவதில்லை!

உயிரே.. என்று உனையழைத்து ஒவ்வொரு நாளும் திருநாளாய் மலரச் செய்வேன் கண்மணியே!

முல்லை மலரே! முத்துச் சிரிப்பே!

என் முழுநெஞ்சில் குடியிருக்கும் பெண்மயிலே!

அன்பெனும் தொட்டில்கட்டி என்னை ஆராதிக்கும் காதலியே!

உன் வண்ணமுகத்தின் வதனம் சொல்ல நான் வரைந்தளித்தக் கவிதைகள் போதுமா?

இன்னுமின்னும் என உன் கண்கள் மின்னுவதென்ன அழகின் கோலமா?

கண்ணுக்கு மையெழுதி நீ காட்டும்போது அந்தக் கருமைக்குப் பெருமை சேர்க்கிறதென்பேன்!

கவிதைக்குப் பொருள்கூட்டிப் பார்க்கும்பொழுது – இரவு பகல் உனக்காக மடல் வரைவேன்!

சரிவிகிதக் கலவைதானே அச்சம் நாணம் – அதில் ஏதும் மிச்சமிருக்கிறதா என்று நானும் கேட்பேன்!

ஆசையின் படையெடுப்பில் அம்மம்மா.. அந்த ராஜ்ஜியங்கள் சரிகின்றன என்று சொன்னாய்!

ஒய்யார அழகையெல்லாம் ஒன்றுகூட்டி நீ ஒருத்தி நடத்தும் நாடகம் ஓராயிரம்!

அதைக் காண்கையில் பருத்தி வெடித்த பஞ்சுபோல பறக்கிறேன் நானும்!

தொடரோட்டம் காண்கின்ற இம் மடல்களிலெல்லாம் உயிரோட்டம் தருகின்றாய் நீயும்! காதல் என்னும் ஒன்றைச் சொல்லுக்குள் உள்ள உலகம் என்னவென்று காட்டுதற்கே காதல் பொதுமறை?

அதுவும் நீயொருத்தி என நெஞ்சில் நிலைநிறுத்தி நானெழுதிய படைப்பிலக்கியம் இதுவன்றோ?

உற்சாக கங்கை உள்ளத்தில் ஓடிவர.. நாளும் உனைத்தொட்டு வரைகின்ற மடல் யாவும் இன்பம்!!

கரைகாணா கடல்போல விரிகின்ற காதலில் தினம்தோறும் இன்ப உலா காணலாம்!

கற்பனைகள் கைகொடுக்க காதலியே உன்னெழிலைக் கவிதையாக்கி மகிழ்கிறேன்!

நற்றமிழில் வார்த்தைகள் நடமாடக் காத்திருக்கும் எழில்ராணி வாழ்கவே!

பொற்காலம் இதுவென்று நம் இதயங்கள் அறிவதனால் பூரணமாய் பேரின்பம் நாம் கொள்ளலாம்!

உன் சித்திரவிழிபேசும் சிருங்காரக் கதைகளயே நித்தமும் நான் நேசிக்கிறேன்!

நேற்று நடந்தவை நெஞ்சினில் நிழலாட, இன்று நடப்பவை என் முன்னே நின்றாட.. நாளை என்பதும் நம்பிக்கை கனவாக.. இப்படி முக்காலமும் நின்று எக்காளமிடுவதென்ன சொல் நீயே!

நேசிப்பு என்பதற்கு எத்தனை அர்த்தம்.. எத்தனை ஆழம்?

என்று எண்ணியெண்ணிப் பார்த்தேன்! படபடக்கும் நெஞ்சம்.. பரிதவிப்பில் கெஞ்சும்.. இந்த விடுகதைக்கு மட்டும் எடுத்துரைக்கும் விடைக்குத்தானே பஞ்சம்?

மிதமான உன் பார்வையிலே மின்னலடிக்க.. மேகம் வரை நான் பறந்த நாட்கள் உண்டு!

காதலி உன் வரவிற்காக கடுந்தவம் புரிவதுகூட எளிதாகப்படுகிறது எனக்கு! என்றாலும் காதலிலே இனியென்ன கணக்கு?

துளைகளிட்டபோதும் விரல்களால் மூடித்திறக்க புல்லாங்குழல் தந்திடுமே நாதம்!

அதுபோல உன்னை எண்ணி நான் துடிக்கின்ற துடிப்பெல்லாம் கவித்துவ வரிகளாய் மாறுவதைப் பாரும்!

மறக்கத் தெரியாத மனது கிடையாது என்பார்கள்..

எனினும் நினைக்கத் தெரிந்த மனம் எனக்கிருப்பதால்

உன் நினைவோடுதான் நிதம் வாழ்கிறேன்!