தொடர்கள்
பொது
வேலூர் கோட்டையில் 75ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம்!! ​​​​​​​-சுந்தரமைந்தன்

2022071216222153.jpg

நமது நாடு சுதந்திரம் அடைந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியோடு 75 ஆண்டு நிறைவடைகிறது. இந்த சுதந்திர நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்துள்ளன. இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், வேலூர் மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வேலூர் கோட்டை


அந்த வகையில் இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்ட 1806 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலூர் கோட்டையின் ஒரு பகுதியான அகழியின் எதிரே உள்ள மதில் சுவரில் மூவர்ணக் கொடி வண்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். இரவு நேரங்களில் இந்த வண்ண விளக்குகள் தேசியக் கொடியின் வண்ணத்தில் ஜொலிப்பதை கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வாகன ஓட்டுபவர்களையும், பொதுமக்களையும் ஈர்த்து வருகிறது.

வேலூர் கோட்டை

பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல் கூட்டம் கூட்டமாக வந்து. மூவர்ணத்தில் ஜொலிக்கும் வேலூர் கோட்டையை ரசிக்கின்றனர். இதன் முன்பு பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைகின்றனர். இத்தகைய ஒளி அமைப்பு பார்ப்பவர்களின் கண்களைக் கவர்ந்து சுதந்திரப் போராட்ட நினைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. வரும் 15-ஆம் தேதி வரை வேலூர் கோட்டை மூவர்ணக் கொடியின் வண்ணத்தில் ஜொலிக்கும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை:
இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே. வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இதில் கிழக்குப் பக்கத்தில் மட்டுமே நுழைவாயில் உள்ளது. தற்போது கோட்டை அகழியின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. தெற்குப் பக்கத்தில் தண்ணீர் இல்லை. கோட்டையின் உள்ளே ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி, திப்புமஹால், ஹைதர்மஹால், கண்டிமஹால், அரசு அருங்காட்சியகம்,மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான அலுவலகங்கள் அமைந்துள்ளது.

வேலூர் கோட்டை


இது 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது கட்டப்பட்டது. இதைக் கட்டியவர் சின்ன பொம்மி நாயக்கர் என்று அழைக்கப்படும் மன்னர் . அவரது ஆட்சிக் காலத்தில் இந்த கோட்டை மிக முக்கிய தலமாகவும், போர்களின் போதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

20220712162350863.jpg

வேலூர் கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும் பின்னர் மராட்டியருக்கும் தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரிட்டிஷாருக்கும் இக்கோட்டைக் கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும் வரை இக்கோட்டை பிரிட்டிஷார்களிடமே இருந்தது. பிரிட்டிஷார் காலத்தில் இக்கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் கண்டியரசின் கடைசி தமிழ் மன்னனான ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனும் சிறை வைக்கப்பட்டனர்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வான சிப்பாய் கலகம் இங்குதான் நடைபெற்றது.

20220713064802132.jpeg