தொடர்கள்
அரசியல்
சுதந்திர இந்தியா !! தலித் தலைவர்கள் படும்பாடு - ஜாசன் மூத்த பத்திரிகையாளர்.

2022071307045480.jpg

திராவிட கட்சிகள் அதிலும் குறிப்பாக திமுக தாங்கள் தான் தலித் சமுதாயத்தின் காவலர்கள் போல் பேசுவார்கள்.ஆனால் செயலில் அப்படி இருக்காது. தலித் நீதிபதி திமுக போட்ட பிச்சை இது ஒரு மூத்த திமுக தலைவர் பேசினார். தலைமைச் செயலாளர் எங்களை நாங்கள் எதோ தலித் போல் நடத்தினார் என்றார். திமுக பாராளமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். திமுகவின் தலித் பாசத்துக்கு இதெல்லாம் உதாரணம். தலித் வகுப்பைச் சேர்ந்தவர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருப்பார். இது திராவிட ஆட்சியில் காலங்காலமாக நடக்கிறது தான். வேறு துறை அவர்களுக்கு கிடைக்காது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் தலித் வகுப்பைச் சேர்ந்த பி.கக்கன் உள்துறை அமைச்சராக இருந்தார் அறநிலை துறை அமைச்சராகவும் இருந்தார். அந்த துணிச்சல் திமுகவுக்கு என்றுமே கிடையாது.

இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் ஊராட்சி மன்ற பொறுப்பிலுள்ள தலைவர்கள் எப்படியெல்லாம் உதாசீனப்படுத்தபடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சுதா இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் சென்ற ஆண்டு இவர் சுதந்திர தினத்தன்று கொடியேற்ற அனுமதிக்கப்படவில்லை காரணம் இவர் தலித் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த முறை கொடியேற்ற பாதுகாப்பு கேட்டு கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இவரை சென்றமுறை கொடியேற்ற முடியாமல் தடுத்தது வன்னியர் இன பெருமக்கள். இதேபோல் சென்ற 2020 திருவள்ளூர் மாவட்டம் ஆத்து வாக்கம் ஊராட்சியில் அமிர்தம் தலித் ஊராட்சி தலைவி கொடியேற்ற அனுமதிக்கப்படவில்லை இதை ஒரு ஆங்கில பத்திரிகை வெளியிட்டது அதைத்தொடர்ந்து மறுநாள் மாவட்ட ஆட்சியாளர் காவல்துறை கண்காணிப்பாளர் பாதுகாப்புடன் அமிர்தம் கொடியேற்றினார்.

இதைவிட பல கொடுமைகள் பெரியார் மண் என்று பெருமை பேசும் தமிழ்நாட்டில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நடக்கிறது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு அமைப்பு தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று ஆய்வு நடத்தி பல திடுக்கிடும் தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள்.அந்தப் பட்டியல் இதோ

1. தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசியக்கொடி ஏற்ற அனுமதி இல்லை.

2. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலித் தலைவர்கள் பெயர் பலகை வைக்க அனுமதி கிடையாது.

3. ஊராட்சித் தலைவர்கள் நாற்காலியில் உட்கார அனுமதி கிடையாது.

4. ஊராட்சி அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை.

5. தலித் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடக்கும் கிராமசபை கூட்டங்களை தலித் அல்லாதோர் புறக்கணித்து கலந்து கொள்ள மாட்டார்கள்.

6. ஊராட்சி மன்ற துணை தலைவர் தலித் தலைவர் அமர்ந்திருக்கும் அறையில் அவருடன் சேர்ந்து அமர மாட்டார் அவருக்கென்று தனி அறை ஒதுக்கப் பட வேண்டும்.

7. தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோப்புகள் பார்க்க அனுமதி இல்லை.

8. ஊராட்சி துணைத் தலைவர் தலித் தலைவருக்கு ஒத்துழைப்பு தர மாட்டார்.

9. அதிகாரிகளும் தலித் தலைவர் உத்தரவுகளை செயல்படுத்த மாட்டார்கள்.

10. துணைத்தலைவர் கையெழுத்து போட மாட்டார்.

11. அலுவலக சாவி தலித் தலைவருக்கு தரப்படமாட்டாது.

இப்படி விவரங்களை சேகரித்த இந்த அமைப்பின் தலைவர் கே.சாமுவேல்ராஜ் இந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி அவர்கள் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இதுபோன்ற தன்னார்வ அமைப்புகள் விவரம் சேகரித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது என்பதே மிகவும் வெட்கக்கேடானது. இவையெல்லாம் அரசுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் தெரிந்தும் தெரியாதது போல் அரசியல் காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். இப்போது அந்த கொண்டாட்டமே தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. தலித் ஊராட்சி தலைவர்களின் இந்த நிலைமை தலித்தியம் பேசும் விடுதலை சிறுத்தை கட்சிகள் போன்றவற்றிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும் கூட்டணி தர்மம் அவர்களை சனாதன தர்மம் பற்றி பேச சொல்கிறதே தவிர இந்த தலித் இனத்தை அடக்கி ஒடுக்க இப்போதும் ஒரு சமூகம் முயற்சிப்பதை வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பது இனத் துரோகம் மொத்தத்தில் திராவிட தலைவர்கள் வாய் சொல்லில் வீரர்கள் என்பதுதான் உண்மை.

20220713070618588.jpeg