திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் போட்ட முதல் உத்தரவு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு தான் இதை உண்மையில் எல்லோரும் பாராட்டினார்கள். பெண்கள் ஸ்டாலின் பஸ் என்று சொல்கிறார்கள் என்று முதல்வர் கூட சந்தோஷப்பட்டார். ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொது மேடையில் பேசும்போது "இப்போ பஸ்ல எப்படி போறீங்க எல்லாம் ஓசி தானே" என்று முதல்வரின் அறிவிப்பை முதல்வர் பெருமையாக சொல்லிக் கொண்டதைகொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அமைச்சர் பொன்முடி படிப்பறிவில்லாத பாமரன் அல்ல கல்லூரியில் பேராசிரியராக இருந்து நீண்ட வருடமாக ஆட்சியிலும் அரசியலிலும் இருந்து வருகிறவர். இப்படி அரசின் திட்டத்தை பெண்களை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.
இன்னொரு மூத்த அமைச்சர் துரைமுருகன் இதேபோல் பொதுமேடையில் அம்மாவுக்கு ஆயிரம் பொண்ணுக்கு ஆயிரம் கொடுக்கும் இந்த ஆட்சி என்று முதல்வரின் இன்னொரு திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். அவர் பெண்ணுக்கு ஆயிரம் என்று சுட்டிக் காட்டி இருப்பது அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்லூரியில் சேரும் போது மாதந்தோறும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதைத் தான் இப்படி பொது மேடையில் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். அம்மாவுக்கு ஆயிரம் ரூபாய் என்பது குடும்பத் தலைவிக்கு ஆயிரம் என்பதைத் தான், ஆனால் அந்த திட்டம் இன்னும் செயல்படுத்த இல்லை குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் கொடுக்க சில்லறை மாற்றி கொண்டிருப்பதாக கிண்டலாக வேறு பேசியிருக்கிறார். இவரும் ஒரு மூத்த அமைச்சர் தான்.
ஆம்னி பஸ் கட்டண உயர்வு பற்றி போன மாதம் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிடும்போது அதிக கட்டணம் வசூல் செய்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். இந்த மாதம் ஆம்னி பேருந்து பஸ் கட்டணம் பற்றி நிருபர்கள் கேட்ட போது அவர்கள் சேவை செய்ய வரவில்லை தொழில் செய்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.
வருவாய்த்துறை அமைச்சர் குறவர் சமுதாயத்திற்கு தமிழக அரசிடம் சமூக பிரதிநிதித்துவம் தர கோரிக்கை மனு தர வந்த வன வேங்கை கட்சித் தலைவர் இரணியன் என்பவரை உட்கார இருக்கை கூட தராமல் நிற்க வைத்துப் பேசியது தற்போது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் இலவசம் பற்றிய வழக்கில் திமுக தானாக முன்வந்து தங்களை ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள சொல்லித்தந்த பிரமாண பத்திரத்தில் இலவசங்கள் நலத்திட்டங்கள் அவற்றை இலவசம் என்று சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் சமூக நீதி திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியான அரசு என்று மேடையில் தொடர்ந்து பெருமையாகப் பேசி வருகிறார். உண்மையில் இந்த ஆட்சியின் உண்மை முகம் எது ஓசி என்று பெண்களை கொச்சைப்படுத்திய பிறகு ஒரு வயதான பெண்மணி பேருந்தில் நான் ஓசியில் பயணம் செய்ய விரும்பவில்லை என்று சொல்லி பேருந்து கட்டணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்குப் பிறகும் கூட அமைச்சர் தனது செய்கைக்கு வெட்கப்பட்டு வருத்தம் தெரிவிக்கவில்லை அமைச்சர்களின் செய்கைகள் எல்லாமே இந்த ஆட்சியின் பொய் முகத்துக்கு ஒரு சாட்சி. அந்த அமைச்சர்கள் மீது கண்டித்து எந்த நடவடிக்கை எடுக்காமல்இருக்கும் முதல்வரின் மௌனம்இன்னொரு சாட்சி.
Leave a comment
Upload