தொடர்கள்
ஆன்மீகம்
பாரதத்தின் மலைக் கோவில்கள் ! - 7 சோளிங்கர் மலை, தமிழ்நாடு!! யோகங்களைத் தரும் யோக நரசிம்மர், யோக அஞ்சநேயர்!! ஆரூர் சுந்தரசேகர்.

யோகங்களைத் தரும் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர்!!

108 வைணவ திவ்ய தேசங்களில், தமிழ்நாடு, இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம பெருமாள் கோயில் (திருக்கடிகை), 64-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. (சோழ சிம்மபுரம் என்பது மருவிச் சோளிங்கபுரம் என ஆயிற்று. நாளடைவில் சோளிங்கபுரம் என்பது பேச்சுவழக்கில் மருவி சோளிங்கர் என்றாகிவிட்டது)


இந்த திருத்தலத்தில் கீழே உள்ள திருக்கோவிலில் உற்சவரும், பெரிய மலை மீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரங்களுடன் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர். நரசிம்மர் ஆஞ்சநேயர் இருவரும் யோகநிலையில் அமர்ந்திருப்பது சிறப்பு. காசி, கங்கை, கயா போன்ற புண்ணிய தலங்களுக்குச் சமமாக இத்தலம் போற்றப்படுகிறது. இந்தக் கோயில் 3 ம் நூற்றாண்டில் பராங்குச சோழனால் கட்டப்பட்டது.


சோளிங்கரின் புராணப்பெயர் கடிகாசலம், சுமார் ஒரு கடிகை (நாழிகை – 24 நிமிடம்) இங்குத் தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீகமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர் வந்தது. கடிகை என்றால் நாழிகை, அசலம் என்றால் மலை, இரண்டும் சேர்ந்து கடிகாசலமானது. நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய வசிஷ்டர், விஸ்வாமித்திரர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகள் தவம் செய்ய, ஒரு கடிகை (ஒரு நாழிகை) நேரத்தில் பகவான் காட்சி தந்தமையால் இந்த ஸ்தலம் 'திருக்கடிகை' என்ற பெயர் பெற்றது.
பெரிய மலையில் உள்ள நரசிம்மரை 1305 படிகள் ஏறித் தரிசிக்க வேண்டும். பின்னர் கீழே இறங்கி ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் சிறிய மலையில் 406 படிகள் ஏறி அங்கு இருக்கும் ஆஞ்சநேயரைத் தரிசிக்க வேண்டும். சமீபத்தில் கட்டப்பட்ட ரோப் கார் மூலமாகவும் வந்து தரிசிக்கலாம்.
சோளிங்கர் மலை மீது வருடத்தில் 11 மாதம் யோகநிலையில் இருக்கும் யோக நரசிம்மர் கார்த்திகை ஒரு மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதனைத் தரிசிக்கத் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து பெரிய மலையில் எழுந்தருளியிருக்கும் யோக நரசிம்மரைத் தரிசனம் செய்கின்றனர்.

யோகங்களைத் தரும் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர்!!

ஸ்தல வரலாறு:
பக்த பிரகலாதனுக்காகத் தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக வெளிப்பட்டு, காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படும் வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர் ஆகியோருக்கு, நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காண வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை நிறைவேற்றும் பொருட்டு, இத்தலத்துக்கு வந்து தவமிருந்தனர். விசுவாமித்திரர், ஒரு கடிகை நேரம் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மரை வழிபட்டு, பிரம்மரிஷி பட்டம் பெற்றதால், அவரைப் போல் உடனே மகாவிஷ்ணு தரிசனம் கிடைக்க வேண்டும் என்று சப்தரிஷிகள் தவம் செய்ய இத்தலத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
காலன், கேயன் என்ற அரக்கர்கள், இத்தலத்தில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு இன்னல்கள் அளித்து வந்தனர். இராமாவதாரம் முடிந்த சமயம், இராமபிரான் ஆஞ்சநேயரை அழைத்து, அரக்கர்களிடம் இருந்து ரிஷிகளைக் காக்குமாறு பணித்தார். அதையேற்ற ஆஞ்சநேயர், இராமபிரானிடம் இருந்து சங்கு, சக்கரங்களைப் பெற்று, அரக்கர்களை அழித்து ரிஷிகளைக் காப்பாற்றினார் என்கிறது ஸ்தல புராணம். ரிஷிகளின் தவத்தை மெச்சிய மகாவிஷ்ணு அவர்களுக்கு நரசிம்ம மூர்த்தியாகக் காட்சி அளித்தார்.
சோளிங்கர் நரசிம்ம மூர்த்தியை ரசித்தபடி இருந்த ஆஞ்சநேயரை, தனக்கு முன்பாக கையில் சங்கு, சக்கரத்துடன் யோகநிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்குமாறு மகாவிஷ்ணு கூறியதால், ஆஞ்சநேயர், நரசிம்மர் கோயில் அருகே உள்ள சிறு குன்றின் மேல் (406 படிகள் உயரத்தில்) யோக நிலையில் நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம், ஜெப மாலையுடன் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சிறிய மலையில் இருந்து பார்த்தால் ஆஞ்சநேயரின் கண்கள், பெரிய மலையில் உள்ள நரசிம்ம மூர்த்தியின் திருவடிகளைப் பார்த்தபடி இருக்கும்.
சோளிங்கர் மலையின் மீது நரசிம்மர் யோகநிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றார். வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு வந்து ஒரு கடிகை அதாவது 24 நிமிடங்கள் இருந்து, நரசிம்மரைத் தரிசித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறது பத்ம புராணம். ஸ்ரீராமானுஜர், மணவாள மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீநாதமுனிகள் முதலானோர் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்தலப் பெருமையை அருளியுள்ளனர்.

கோயில் அமைப்பு:

யோகங்களைத் தரும் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர்!!


பெரிய மலை: 750 அடி உயரமுள்ள மலை. 1305 படிகள், ஏழு மண்டபங்கள் கடந்து மலையை அடையலாம். வடக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலை இராஜகோபுரம் இரண்டு பிரகாரங்கள்.
மூலவர் யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலமாக உள்ளார். பொதுவாகப் பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, ஸிம்ஹகஷ்டாக்ருதி (ஸிம்ஹாக்ர விமானம்)விமானத்துடன்
கூடிய கருவறையில் அருளாட்சி புரிகின்றார். மூலவர் யோக நரசிம்மர் சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் காட்சி தருகிறார். நரசிம்மர் ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். படிகளைக் கடந்து கோயிலுக்குள் சென்றவுடன் முதலில் நாம் தரிசிப்பது அம்ருதவல்லி தாயாரைத்தான். அம்ருதவல்லி தாயாருக்குத் தனி சந்நிதியில் வேண்டும் வரம் தருபவராக அருள்பாலிக்கிறார்.
மலையடி வாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் (தக்கான் குளம்) அமைந்துள்ளது. மலையில் வானரங்கள் அதிகம் என்பதால் மலையின் அடிவாரத்திலேயே சிறிய பிரம்பு கொடுக்கிறார்கள். ஏற முடியாதவர்களுக்கு கீழேயே டோலி வசதியும் உண்டு. சூரிய வெப்பம் தாக்காமல் இருக்க ஏறும் வழி முழுவதும் கூரை அமைத்திருக்கிறார்கள். இங்குள்ள படிகள் செங்குத்தாக இருப்பதால் அங்கங்கே அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஏறலாம். சமீபத்தில் கட்டப்பட்ட ரோப் கார் மூலமாகவோ கோயிலுக்குப் போகலாம் (ரோப் கார் சமீபத்தில் திறக்கப்பட்டு மாநில சுற்றுலாத் துறையால் பராமரிக்கப்படுகிறது.

யோகங்களைத் தரும் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர்!!


சிறிய மலை: 350 அடி உயரமுள்ள மலை. 406 படிகள், மூன்று நிலை இராஜகோபுரம் உள்ளது. மூலவர் யோக ஆஞ்சநேயர்,
இங்குள்ள ஆஞ்சநேயர், நான்கு திருக்கரங்களுடன், ஜபமாலை, சங்கு சக்கரங்களுடன் யோக நிலையில் வீற்றிருக்கிறார். ஆஞ்சநேயரின் கண்கள் நேராகப் பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது. ராமர், ரங்கநாதர், நவநீத கிருஷ்ணர் சந்நிதிகளும் உள்ளது.
கீழேயுள்ள கோயில்: ஊரின் மையப்பகுதியில் உற்சவருக்கென்று தனிக்கோயில் அமைந்திருப்பது இந்த ஸ்தலத்தின் விசேஷம். மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தனிக்கோயில் அமைந்துள்ளது. இங்குதான் உற்சவங்கள், திருவிழாக்கள் நடக்கிறது. உத்ஸவர் - பக்தவத்ஸலப் பெருமாள். (தக்கான்) . சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன்,
இந்த ஸந்நிதியின் பின்புறம் ஆதிகேசவப் பெருமாள், மற்றும் ஆண்டாள், ஆழ்வார் ஆசாரியர்கள், எறும்பியப்பார், தொட்டாசாரியார், சந்நிதிகள் உள்ளன.

திருவிழாக்கள்:
இங்கு கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால் வெள்ளி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திருவிழா போல் விசேஷங்கள் நடைபெறும். வேலூர், அரக்கோணம், திருத்தணி, சித்தூர்,திருப்பதி, சென்னை உள்படப் பல நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடுகிறார்கள். தனியார் போக்குவரத்து நிறுவனங் களும் சோளிங்கருக்குச் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறிப்பிடத் தக்கது. எங்கும் மக்கள் அலை போல் இருக்கும். சித்திரை ப்ரம்மோத்ஸவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி மாதம், நரசிம்ம ஜெயந்தி திருவிழாவாகவும், காஞ்சி கருட சேவை உற்சவமும் கொண்டாடப் படுகிறது. ஆடியில் திருவாடிப்பூரமும், ஆவணியில் பவித்ரோத்ஸத்வமும் புரட்டாசியில் நவராத்திரியும் மார்கழியில் வைகுந்த ஏகாதசியும், மாசியில் தொட்டாச்சார்யார் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

கோயில் திறக்கும் நேரம்:
மலைக்கோயில்களில் காலை 8.00 முதல் மாலை 5.30 மணி வரை தரிசனம் செய்யலாம்.
ஊர்க்கோயில் 12 மணிக்கு நடைசாத்தி, மீண்டும் 4.30 மணி முதல் 8.00 மணி வரை திறந்திருக்கும்.
கார்த்திகையில் கோயில் நடைதிறக்கும் நேரம் : கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறந்து சுப்ரபாதம் பூஜை நடைபெறும். அது முடிந்ததும் தர்ம தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 7மணி வரை தர்ம தரிசனத்துக்கு அனுமதி உண்டு. காலை 7 மணி முதல் 9 மணி வரை அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். காலை 10 மணி முதல் பிற்பகல் 7 மணி வரை தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு பிரார்த்தனை உற்சவம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்பதால் சனிக்கிழமை இரவு 2 மணிக்கே பெரிய மலைக் கோவில் நடையைத்திறந்து விடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம். சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயரை கார்த்திகை வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி வரை தரிசிக்கலாம். சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை தரிசிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரார்த்தனை:
இத்தலத்தில் உள்ள நரசிம்மரையும், ஆஞ்சநேயரையும் வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி முதலான பிரச்னைகள் தீரும். குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும்.
புதிதாக, நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும் வீடு கட்ட ஆசைப்படுபவர்களும் கோயில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக் கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை!
இங்கு நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரமஹத்தி தோஷம் கூட நீங்கும் என்பது ஐதீகம், இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வதற்குச் சமமானது என்பர்.
பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால் அவர் நரசிம்மரிடம் அதைப் பரிந்துரைப்பார். நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவார். எனவே இங்குத் தாயார் பெருமாள் பின்பு ஆஞ்சநேயர் எனத் தரிசிக்க வேண்டும்.

நேர்த்திக்கடன்:
கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், வேட்டி சேலை படைத்தல், தயிர்ச்சாதம் செய்து பிரசாதம் படைத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாகப் பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும்.

யோகங்களைத் தரும் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர்!!

கோயிலுக்குப் போவது எப்படி:
இக்கோயில் சென்னையில் இருந்து 100கிமீ தொலைவிலும், வேலூரில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும், அரக்கோணத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், திருத்தணியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. சோளிங்கர் ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
விமானம் மூலம்: அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் 90 கிமீ தொலைவில் உள்ள திருப்பதியில் உள்ளது. சென்னை விமான நிலையம் 107 கி.மீ தொலைவில் உள்ளது.
இரயில் மூலம்: அருகிலுள்ள இரயில் நிலையம் சோளிங்கரில் 10 கிமீ தொலைவில் உள்ளது, ஆனால் இரயில்கள் குறைவாக உள்ளது. அரக்கோணம் 30 கி.மீ தொலைவில் உள்ளது. இரயில்கள் நிறைய உள்ளது நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து கோயிலுக்கு பஸ்கள் அதிகமாக உள்ளது.
சாலை வழியாக: சென்னை முதல் அரக்கோணம் முதல் சோளிங்கர் வரை திருப்பதியிலிருந்து புத்தூரிலிருந்து திருத்தணியிலிருந்து சோளிங்கருக்குச் சென்னையிலிருந்து இரயிலில் வருபவர்கள், அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சோளிங்கர் நரசிம்மர் கோயிலைச் சென்றடையலாம்.

முகவரி:
அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்- 631102. இராணிபேட்டை மாவட்டம்

யோகங்களை தரும் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயரை வழிபட்டு அருள் பெறுவோம்!!