தொடர்கள்
தொடர்கள்
அட்டைப்படம்- எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20230019163228768.jpg

தங்கம்மாள் பதிப்பகம்.
பதிப்பாளர் சிங்கமுத்து சிம்மாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்திருந்தார்.
இயர்போனில் இளையராஜா பாடல்களை கேட்டார். அவரது கால்கள் அனிச்சையாக தாளமிட்டன. கேட்டுக்கொண்டிருந்த பாடலின் சில வரிகளை தானே பாடினார்.
சிங்கமுத்து நடுவகிடுடெடுத்து தலைகேசத்தை வாரியிருந்தார். பவர்கிளாஸ்
உபயத்தில் மெகாசைஸ் கண்கள் இடம்வலம் தாவின. ஹிட்லர் மீசை
வைத்திருந்தார்.
சிங்கமுத்துக்கு எதிரே எழுத்தாளர் காண்டேகர் தம்பியும் ஓவியர்
மாணிக்குமாரும் அமர்ந்திருந்தனர்.
சிங்கமுத்து மாணிக்குமாரிடம் திரும்பினார். “மாணிக்! கனலியின்
‘பெருங்காமத்து பெண்களுககு இங்கே இடமில்லையா?’ கட்டுரைத் தொகுப்புக்கு
பிரமாதமா அட்டைப்படம் போட்டிருக்கீங்க!”
“நன்றி சார்!”
“நாராயணி கண்ணகியின் ‘பிரதிவாதி’க்கும் அட்டைப்படம் சூப்பர்!”
“நன்றி சார்!”
“வலங்கைமான் நூர்தீனின் ‘ஒரு வீடும் நானூறு பெர்ஷியன் பூனைகளும்’
தொகுப்புக்கு உங்க அட்டைப்படம் டெரிபிக்!”
“எல்லாம் உங்க வழிகாட்டல்தான் சார்!”
“தமிழ்நாட்ல ஆயிரம் டைட்டில்கள்ல புத்தகங்கள் தயாராகுதுன்னா
800புத்தகங்களின் அட்டைகளை நீங்கதான் வரையுறீங்க. உங்க அட்டைப்படத்தை
பாக்ற வாசகன் புத்தகத்தை வாங்காம போகமாட்டான். அட்டைப்பட தூண்டில்காரன்
நீங்க!”
நாணிகோணி சிரித்தார் மாணிக்குமார்.

பேப்பர்தட்டுகளில் சுடச்சுட முட்டை போண்டா வந்தது “சாப்படுங்க
எழுத்தாளரே... முட்டை போண்டா காசை உங்க ராயல்டிலயிருந்து கழிச்சிர
மாட்டேன்!”
“யார் பயந்தது? தாராளமா கழிச்சிக்கங்க சார்!”
“எழுத்தாளரே! உங்க ‘தலைவன்’ நாவலை போனவாரம் படிச்சு முடிச்சேன்.
இந்த 75 வருஷத்ல மத்திய மாநிலத்ல வந்த எல்லா அரசியல் தலைவன்களையும்
உங்க கதைல வர்ற தலைவன் பீட் அடிச்சிட்டான்.. என்னகதை, என்ன கதை? இந்திய
அரசியலை முழுமையா அலசி எடுத்த தமிழின் முதல்நாவல் உங்க நாவல்தான்…
அரசியல்வாதி ஆக விரும்பும் எல்லா பயல்களும் கட்டாயம் உங்க நாவலை படித்தே
ஆகவேண்டும்.. இரண்டாயிரம் பக்கநாவல்.. படிக்க படிக்க சல்லுன்னு வழுக்கிட்டு
போகுது!”
“ஒருத்தன் திருடினா அது சர்வாதிகாரம். வாயும் வலிமையும் உள்ள நூறுபேர்
சேந்து திருடினா அது ஜனநாயகம். நம் நாட்டில் ஜனநாயகம் முழுமையாக தோற்று
விட்டது என்பதே இக்கதையின் மையக்கரு!”
“யூ ஆர் கரக்ட்!”
“கவர்னர் ‘கிமிழகம்’ன்னு சொல்ரார். ஆளும்கட்சி ‘இல்ல இல்ல
கிமிழ்நாடு’ன்னுது. மக்களும் மீடியாக்களும் இரண்டு கட்சிகளாக பிரிந்து கிமிழகமா
கிமிழ்நாடான்னு அடிச்சுக்கிராங்க. எவனுக்காவது மக்களோட பசி பட்டினி
வறுமையை போக்கனும்னு ஆவேசம் இருக்கா? இல்லையே.. எல்லா பயலும்
வார்த்தைகளை பிடிச்சு தொங்குரான்க!”
“இவர்கள் பிரச்சனைகளை தீர்க்கும் அரசியல் பண்ணுவதில்லை; உணர்ச்சி
அரசியல்தான் பண்ணுகிறார்கள்!”
“முன்பெல்லாம் குடிகாரர்களை ஊழல்வாதிகளை கொலைகாரர்களை ஊரை
விட்டு ஒதுக்கி வைப்பார்கள். இப்போது அவர்களுக்கு பூரணகும்ப மரியாதை..
மக்களின் மனநிலை தலைகீழாய் மாறி உள்ளது!”
“மக்களின் மனநிலை மாற்றத்துக்கு அரசியல்வாதிகளின் செயல்பாடுகளே
முதல் காரணம்!”
“தலைவன் என்பவன் மக்களை ஒருங்கிணைப்பவனாக இருக்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக நம் தலைவர்கள் மக்களை பிரித்தாள்பவர்களாக இருக்கிறார்கள்!”
“அரசியல்கட்சிகளின் பெயர்களை அகற்றிவிட்டால் இந்தியாவின் எல்லா
கட்சிகளும் ஒன்றுதான். வெவ்வேறு லேபிள்களில் இருக்கும் கள்ளச்சாராயம்
அவர்கள். ஊழல் செய்வதிலும் மக்களை ஏமாற்றுவதிலும் அவர்கள்
ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல”

“மக்களுக்கு சேவை செய்வதாக சொல்லி அதிகாரத்துக்கு வரும் அவர்கள்
மக்களின் முதுகில் உப்புமூட்டை ஏறுகிறார்கள். பொய் வாக்குறுதிகள் ஓட்டுக்கு
பணம் கொடுத்து ஆட்சிக்கு வரும் அவர்கள் மக்களுக்கு சகலவிதமான தீமைகளை
செய்கிறார்கள். ஒவ்வொரு கட்சியின் நாசகார செயல்பாட்டுக்கு முட்டுக்கொடுக்கும்
மக்கள் ஏராளம் தாராளம்..”
“ஒவ்வொரு தலைவனுக்கும் ஒருபுள்ளி பிசகினாலும் மக்கள் தூக்கி எறிந்து
விடுவார்கள் என்கிற ஆதாரபயம் இருக்கவேண்டும். தேர்தல் வாக்குறுதியில்
சொல்லாத எந்த விஷயத்தையும் ஆளும் கட்சி நிறைவேற்ற விரும்பினால் பொது
வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை விருப்பம் அறிய வேண்டும். பிரிட்டீஷ்காரனிடம்
அடிமையாக இருந்தது போல ஆளும் கட்சிகளிடம் மக்கள் அடிமையாக காலில்
விழுந்து கிடக்கக்கூடாது.”
“தலைவன் நேர்வழியில் நடக்க வேண்டும் நடக்கா விட்டால் தலைவனை நேர்
வழிபடுத்த வேண்டும்!”
“தலைவன் குறுநில மன்னனோ பேரரசனோ அல்ல; சமமானவர்களில்
முதலாமவன். அரசாங்கங்களின் செலவீனங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட
வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்கள் தேவை. அரசியல்கட்சிகளின் சொத்துகளும்
தணிக்கைக்கு உட்பட்டவையே. தேர்தல்களில் ஓட்டுபோடுதல் நூறுசதவீத கட்டாயம்.
கல்வி மருத்துவம் தவிர மீறி எதுவும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட கூடாது!”
“எந்த சீர்திருத்தத்தையும் நிறைவேற்ற ஆளும்கட்சியும் எதிர்கட்சியும்
சம்மதிக்காது. இது மாதிரியான விஷயங்களில் அவர்களுக்குள் எப்போதும் ரகசிய
கூட்டணி உண்டு!”
“எதாவது ஒரு கட்டத்ல மக்கள் கொதித்தெழுந்து அரசியல்வியாதிகளை தூக்கி
எறிவார்கள்!”
“இது எப்ப நடக்கும்?”
“இன்னும் ஒருபத்து வருடத்தில் அல்லது இருபது வருடத்தில் நடக்கும்!”
“நாம பேசுறதை எவனாவது அரசியல்வாதி கேட்டுட்டானா நம்பள தேசிய
பாதுகாப்பு சட்டத்ல புக் பண்ணி உள்ள தள்ளிருவான்க!”
“சரி, நம் விஷயத்தை பார்ப்போம்!”
“சொல்லுங்க காண்டேகர் தம்பி!”
“என்னுடைய நாவலுக்கு அட்டைப்படம் என்ன மாதிரி போடப்போறீங்க?”
சிங்கமுத்து அட்டைப்பட ஓவியர் மாணிக்குமாரை அர்த்தபுஷ்டியாய் பார்த்தார்.
மாணிக்குமார் தனது மடிகணினியை எடுத்து உயிர்ப்பித்தார்.
முதல் அட்டைப்படத்தில்-

இந்தியாவின் எல்லா மாநில மக்களின் முகங்களும் கொலாஜ் ஓவியமாய்
இணைந்து ஒரு தலைவன் முகம் ஆகியிருந்தது.
தலைவன் என்கிற டைட்டில் மூவர்ணங்களில் மிளிர்ந்தது.
காண்டேகர் தம்பி “நல்லாத்தான் இருக்கு. இதை விட பெட்டரா எதாவது..”
இரண்டாவது அட்டைப்படத்தை மாணிக்குமார் காண்பித்தார். கடந்த நூறு
வருடங்களில் இந்திய உலக அரசியல்வாதிகளின் முகத்துண்டுகள் இணைந்து ஒரு
முகம் உருவாகியிருந்தது.
“இதுவும் ஓகேதான் வேறவேற..”
வரிசையாக எட்டு அட்டைப்படங்களை மாணிக்குமார் காண்பித்தார்.
ஓவியருக்கும் எழுத்தாளருக்கும் இடையே குறுக்கிட்டார். பதிப்பாளர் சிங்கமுத்து.
“இந்த தலைவன் புத்தகத்தை எத்தனை பிரதி போடப் போறேன்னு
நினைச்சீங்க?”
“அய்நூறு பிரதி!” என்றார் காண்டேகர் தம்பி.
“ஆயிரம் பிரதி!’‘ என்றார் மாணிக்குமார்.
“இல்ல இல்ல ஒரு லட்சம் பிரதி போடப் போறேன்!”
“மஞ்சக்கடுதாசி குடுக்க தயாராய்ட்டீங்களா?”
“நாம ஒரே ஒரு விஷயம் செஞ்சா தலைவன் நாவல் ஒரு லட்சத்துக்கு மேல
விக்கும்!”
“என்ன விஷயம் செய்யனும்?”
“தமிழ்நாட்டு முதல்வர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ‘யாரும் தனக்கு
பொன்னாடையோ மாலையோ போடவேண்டாம். அதற்கு பதிலாக புத்தகங்கள்
பரிசளியுங்கள்’ என பொதுமக்களுக்கு அறியுறுத்தியுள்ளார்!”
“ஆமா.. எனக்கும் அது தெரியும்!”
“நாம என்ன பண்ரோம் ‘தலைவன்‘ அட்டைப்படமா முதலமைச்சரின் பேரன்
படத்தை போடுரோம்… ‘சீச்சீ… இது தப்பு… தலைவரோட பேரன் சின்னப்பய்யன். அவர்
போட்டோவை ஒரு நாவலுக்கு அட்டைப்படமா போடக்கூடாது’ன்னு ஆளும்கட்சி
மக்கள் ஒப்புக்கு எதிர்ப்பாங்க. எதிர்கட்சிகாரன்க ‘வாரிசு அரசியலை பதிப்பகஉலகம்
கண்ணை மூடிக்கிட்டு ஆதரிக்குதா’ன்னு ஆயிரம் கேள்வி கேட்பாங்க..”
”ஆமா கேள்வி கேட்பாங்க..”
“ஆனா.. நிஜத்ல என்ன நடக்கும்? முதலமைச்சர் கலந்துக்கிர எல்லா ஆளும்
கட்சி விழாக்களிலும் நம்ம தலைவன் புத்தகத்தைதான் முதலமைச்சருக்கு பரிசா
கொடுப்பாங்க. முதலமைச்சர் கலந்து கொள்ளாத மற்ற எல்லா ஆளும்கட்சி
விழாக்களிலும் கூட நம்ம புத்தகம்தான் பரிசா வழங்கப்படும்!”
“அரசியலை இவ்வளவு விமர்சனம் பண்ணிட்டு நாம இப்படி செய்யலாமா?”
“அட்டைப்படம்தான் முதலமைச்சரின் பேரனின் புகைப்படம். உள்ளே இருக்கிற
எழுத்துகள் பூராவும் ஆரோக்கிய அரசியலுக்கான சித்த மருத்துவம்..”
“பரிசாக கொடுக்கப்படும் புத்தகங்கள் படிக்கப்படுமா?”
“இருபது சதவீத புத்தகங்கள் படிக்கப்படும் அந்தளவு படிக்கப்பட்டாலே இந்திய
அரசியல் தலைகீழா புரட்டிப் போடப்படும்.”
“ஓகே.. முதலமைச்சரின் பேரன் புகைப்படம் அட்டைப்படமாய் வெளி வரட்டும்!”
-தலைவன்’ நாவல் வெளியானது.
ஒரு வருடத்தில் 268456 பிரதிகள் விற்று தீர்ந்தன. தொடர்ந்து நாவல்
பழபஜ்ஜியாய் விற்றுக் கொண்டே இருந்தது.
பதிப்பாளர்கள் காகப்பார்வை பார்த்தனர். “நாம்பளும் முதலமைச்சரோட பேரன்
ஒளிப்படத்தை அட்டைப்படமா போட்டு காசு பாத்திரலாமா?”
தமிழ்நாட்டு அரசு ஒரு அறிவிப்பை வெளிவிட்டது. ‘முதலமைச்சரின்
ரத்தசொந்தங்களை அட்டைப்படமாக புத்தகங்கள் போட்டு விற்பது தடைசெய்யப்பட்ட
குற்றமாக அறிவிக்கப்படுகிறது!’
ஊப்!