தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் மத்திய அரசு பட்ஜெட்

பட்ஜெட் சில கேள்விகள்

20230104074043145.jpg

ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதும் எதிர்க்கட்சிகள் அதை விமர்சனம் செய்வதும் ஆளுங்கட்சி தங்களுக்கு தாங்களே பிரமாதம் என்று பாராட்டிக்கொள்வதும் ஒரு சம்பிரதாயச் சடங்கு என்று ஆகிவிட்டது. இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழு துறைக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உள்ளடங்கிய இடங்களுக்கு வளர்ச்சி உள்கட்ட அமைப்பு முதலீடு பசுமை வளர்ச்சி இளைஞர்கள் மற்றும் நிதித்துறை ஆகியவை தான் அந்த ஏழு துறைகள்.

இந்த முறை பட்ஜெட்டில் மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டு 89 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அது இந்த முறை 29 ஆயிரத்து 400 கோடி என்று சுருங்கி விட்டது. இதற்கான காரணத்தை நிதியமைச்சர் தெரிவிக்கவில்லை. இந்த முறையும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்குகள் விற்பனை மூலம் 51 ஆயிரம் கோடிகள் திரட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டும் இதே போல் திட்டமிட்டார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு நிதி திரட்ட முடியவில்லை.

இதேபோல் சென்றாண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட திட்டங்கள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது அந்த திட்டங்களின் நிலை என்ன என்பதை முதலில் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டி தெளிவுபடச் சொல்லிவிட்டு அதன்பிறகு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். எந்த ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் யோசனை சொன்னார் உண்மையில் அது வரவேற்கத்தக்க யோசனை உதாரணத்துக்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் அங்கு இதுவரை எந்த கட்டிடமும் கட்டப்படவில்லை மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர் என்று சொல்லி ஐந்தாண்டுகள் மாணவர்கள் கல்லூரியையும் பார்க்காமல் எய்ம்ஸ் மருத்துவமனையும் பார்க்காமல் தங்கள் பட்டப் படிப்பை முடித்து விட்டார்கள். இது கூட இந்த பட்ஜெட்டின் சாதனை என்று தான் சொல்ல வேண்டும். எனவே பட்ஜெட் என்பது உண்மையில் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்ன செய்தார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் வகையில் தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக கடமை நிதி அமைச்சருக்கு உண்டு. பட்ஜெட் என்பது சம்பிரதாயச் சடங்கு அல்ல பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டதும் அல்வா கிண்டும் நடைமுறையே பட்ஜெட் ஒரு சம்பிரதாயச் சடங்கு என்பதற்கு சாட்சி மக்களுக்கான பட்ஜெட் என்பதுதான் மக்கள் விருப்பம்.