தொடர்கள்
தொடர்கள்
காலை வணக்கம் இரவு வணக்கம் - எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20230224163914859.jpg

பெரியகுளம். என்ஜிஓ காலனி.
பரிமேலழகர் படுக்கையிலிருந்து எழுந்தார். இந்திய கடற்படையில்
உயரதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். காவல் துறையில் மறுபணி செய்து அங்கும் ஓய்வு பெற்றவர். சிரித்த முகம். குறும்புக்கண்கள். இவரது முகநூல் பதிவுகளில் நகைச்சுவை பீரிடும். இவரது பதிவுகளுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் விருப்பக் குறியீடுகளும் முந்நூறு பின்னூட்டங்களும் நூறு பகிர்தல்களும் இருக்கும்.
யாராவது நட்பு கோரிக்கை வைத்தால் அவரை பற்றிய கூடுதல் தகவல்களை
உள்டப்பியில் விசாரித்து திருப்தியான பின்தான் நட்பு கோரிக்கையை ஒப்புக்
கொள்வார்.
எதாவது ஒரு வன்மகுடோன் அவரது பதிவுக்கு குண்டக்கமண்டக்க
பின்னூட்டங்கள் இட்டால் அந்த பின்னூட்டங்களை அழிப்பார். மூன்று தடவைகள்
குண்டக்க மண்டக்க பதிவுகள் தொடர்ந்தால் அவரை நட்புநீக்கம் செய்து விடுவார்.
அவரது நட்பு பட்டியலில் இருக்கும் அய்யாயிரம் பேரில் 500பேரை
தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தினம் அதிகாலையில் காலைவணக்கமும் இரவில்
இரவு வணக்கமும் உள்டப்பியில் பதிவிடுவார்.
அன்றும் வழக்கம் போல அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகள் செய்து
விட்டு பத்தாயிரம் காலடிகள் நடந்தார்.
திறன்பேசியை உயிர்ப்பித்தார். முகநூல் உள்டப்பியை திறந்தார். இவர்
அனுப்பிய வணக்கங்களுக்கு பதில் வணக்கங்களும் வந்திருந்தன.
புன்னகையுடன் பார்த்துக்கொண்டே வந்த பரிமேலழகர் ஓர் உள்டப்பியில்
திகைத்து நின்றார்.
அந்த உள்டப்பிக்கு உரியவர் எத்திராஜன் ஜானகிராமன். வயது 88. ஓய்வுபெற்ற
தபால்துறை அதிகாரி. எட்டு வருடங்களுக்கு முன் மனைவியை இழந்தவர். அவர்

ஒரு உலகம் சுற்றும் தேசாந்திரி. அவருடன் பலமுறை கைபேசியில் பேசி
இருக்கிறார் பரிமேலழகர்.
பரிமேலழகர் தன் மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்ப முகவரி
கேட்டிருந்தார். எத்திராஜன் முகவரி அனுப்ப பரிமேலழகர் அழைப்பிதழை கூரியரில்
அனுப்பியிருந்தார். எத்திராஜனும் திருமணத்திற்கு வந்து வாழ்த்திவிட்டு சென்றார்.
பரிமேலழகர் அவரை எப்போதும் “ஹாய் சீனியர்!” என அழைப்பார். அவர்
இவரை “கப்பல்காரரே!” என அழைப்பார்.
கடந்த பத்து நாட்களாக எத்திராஜன் பதில் காலைவணக்கம் இரவு வணக்கம்
போடவே இல்லை.
என்னாச்சு அவருக்கு?
யோசித்தபடி கைபேசியை எடுத்து அவரது எண்ணை அமுக்கினார்
பரிமேலழகர். ‘ஸ்விட்ச் ஆப்’ என பதில் வந்தது.
தொடர்ந்து மாலை ஆறுமணி வரை 16தடவை கைபேசியில் எத்திராஜனை
தொடர்பு கொள்ள முயற்சித்தார் பரிமேலழகர். பயன் இல்லை. ஸ்விட்ச் ஆப்
ஸ்விட்ச் ஆப்தான்.
பல மாதிரியான எண்ணங்கள் பரிமேலழகருக்குள் ஓடின.
ஒரு வேளை எத்திராஜனுக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருக்கிறாரோ?
சொத்துபிரச்சனை காரணமாக அவருக்கும் அவரது மகன்களுக்கும் எதாவது
பிரச்சனையோ?
அல்லது சொல்லாமல் கொள்ளாமல் எதாவது ஒரு வெளிநாட்டுக்கு சுற்றுலா
கிளம்பிப் போய்விட்டாரோ?
அவரது திறன்பேசி பழுதுபட்டுவிட்டதா, அல்லது திருடு போய்விட்டதா?
எத்திராஜன் முகநூலை விட்டு விலகி விட்டாரா?
இரண்டு வாரங்களுக்கு முன் பரிமேலழகர் எத்திராஜனை இன்னொரு
கல்யாணம் பண்ண சொல்லி கிண்டல் பதிவு போட்டிருந்தார். அதில் கோவித்துக்
கொண்டாரோ?
ஆணுக்கு ஆண் காலை வணக்கம் இரவு வணக்கம் போடுவதில் என்ன கிக்
இருக்க முடியும் என யோசித்திருப்பாரோ?
கடைசியாக அவர் எப்போது முகநூல் பதிவு போட்டிருக்கிறார் என பார்ப்போம்.
தேடி பார்த்தார்.
‘எண்பத்தியெட்டு வயது நிறைவுக்கு முன்னேயே ஏன் இன்னும் வாழவேண்டும்
என எண்ணத்தோன்றுகிறது…’ பதிவிட்டிருந்தார் இரண்டு நாட்களுக்கு முன்.
‘என்னை உடனே தொடர்பு கொள்ளுங்கள்’ என பின்னூட்டமிட்டார்.

எவ்வித பதிலும் இல்லை.
திகிலடித்துப் போனார் பரிமேலழகர். எத்திராஜனுக்கு ஏதோ ஆகி
விட்டிருக்கிறது. முகநூல் மூலமாக திறன்பேசி மூலமாக அவரது இருப்பை உறுதி
செய்வது குதிரை முட்டை.
எத்திராஜனின் முகவரியை பார்த்தார்.
திரு.எத்திராஜன் ஜானகிராமன்(ஓய்வு பெற்ற தபால் அதிகாரி)
3/9 ஐந்தாவது குறுக்குத் தெரு
அண்ணா நகர் கிழக்கு
வேலூர் 632001
கைபேசி எண் ------------
பெரியகுளத்துக்கும் வேலூருக்கும் எவ்வளவு தூரம்- கூகுளில் பார்த்தார்.
457கிமீ. பரிமேலழகர் நடிகர் அஜீத்குமாரை விட சிறப்பாக பைக் ஓட்டுபவர். மணிக்கு
நூறு கிமீ வேகம் என்றால் ஐந்து மணி நேரத்தில் வேலூர் போய்விடலாம்.
அசுரவேகம் வேண்டாம் மணிக்கு 60கிமீ வேகம் போவோம்.
இரவு ஒன்பது மணிக்கு கிளம்பி அவரது வீட்டுக்கு மறுநாள்அதிகாலை
ஆறுமணிக்கு போய் விடலாம். வீட்டில் சொன்னவுடன் மனைவி சிடுசிடுத்தார். ‘ஒரு
முகநூல் நண்பர் குட்மார்னிங் குட்நைட் போடலைன்ற ஒரே காரணத்துக்காக ஒரு
மனுஷன் பைக்ல அய்நூறு அய்நூறு ஆயிரம் கிமீ போய்ட்டு வர நினைப்பானா?’
“இதோ இந்த மனுஷன் நினைச்சிட்டானே?”
“கவனமா பொறுமையா போங்க புருஷா,,,”
“இந்தாம்மா உன்னைத்தான் உன் அறிவுரையை என்னைக்கி மீறியிருக்கிறேன்!”
“டீக்கடைக்காரனுக்கு பாக்கி நீங்க வச்சிருக்ற மாதிரியே முகநூல்ல பல
வருஷமா எழுதிக்கிட்டு இருக்கீங்க. எழுதாதேன்னா கேக்றிங்களா?”
“அது நகைச்சுவை…”
“ஒரு நா இல்லாட்டி ஒரு நா உங்க முகநூல் நண்பர்கள் காசு வசூலிச்சு உங்க
டீக்கடை கடனை அடைக்க வரப் போறாங்க பாருங்க!”
“வரவங்களுக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீயும் ரெண்டு மசால் வடையும்
குடுத்திடலாம்!”
“நைட் சாப்ட்டுட்டு போங்க. பெட்ரோல் டாங்க் புல் பண்ணுங்க. டயர்களோட
காற்றை செக் பண்ணுங்க!”
“ஓகே மகாராணி!”
இரவு இரண்டு வெள்ளைக்கரு தோசை தின்றுவிட்டு ஒரு இஞ்சிடீ குடித்தார்.
பைக்கை ஸ்டார்ட் செய்தார்.
வாசல்வரை வந்து கணவரை வழியனுப்பினார் பரிமேலழகரின் மனைவி.

வேலூரை நெருங்கும் போது பைக்கை நிறுத்தினார். சிறிதளவு பற்பசையை
பிதுக்கி பல் துலக்கிவிட்டு வாட்டர்பாட்டில் வைத்து வாய் கொப்பளித்தார். ஒரு
தேநீர் விடுதியில் இருமெதுவடைகள் சாப்பிட்டு தேநீர்குடித்தார்.
இப்போது கைபேசியில் எத்திராஜனை தொடர்பினார்.
‘ஸ்விட்ச் ஆப்’ என்றே வந்தது.
அண்ணாநகர் கிழக்கு எங்கிருக்கிறது என விசாரித்து பைக்கை அந்த திசையில்
ஓட்டினார். வீட்டின் முன் கூட்டம் கீட்டம்?
ஒரு அரைமணி நேரம் அலைந்தபின் வீட்டை கண்டுபிடித்தது விட்டார்
பரிமேலழகர்.
வெளிவாசலில் ஜே.எத்திராஜன் எம்.ஏ., ஓய்வு பெற்ற தபால் மாஸ்டர். என
பெயர்பலகை தொங்கியது.
கதவு பூட்டியிருக்கிறதா?
வெளிகேட்டின் உட்புறமாக கைவிட்டு வெளிகேட்டை திறந்தார் பரிமேலழகர்.
உள்கதவின் இடப்புறம் அழைப்புமணி இருந்தது. அமுக்கினார். யாரும் வரவில்லை.
இப்போது நேரடியாக உள்கதவை தட்டினார்.
ஐந்து நிமிடக்கரைசலில் கதவு திறந்தது. சுருட்டிவிடப்பட்ட லுங்கி கைவைத்த
பனியன் அணிந்து எத்திராஜன் தென்பட்டார்.
நீண்ட நிம்மதி பெரு மூச்சுவிட்டபடி பரிமேலழகர், “நல்லாருக்கீங்களா சீனியர்!”
எத்திராஜன் குதித்தார். “வாங்க கப்பல்காரரே! நான் நலம் நீங்க?”
“நான் நலமாக இருக்கிறதுனாலதான் அய்நூறு கிமீ பைக்லயே வந்து உங்க
நலம் விசாரிச்சுக்கிட்டு இருக்கேன்!”
“உள்ள வாங்க… ஒரு நிமிஷம்… காபி குடிக்றீங்களா?”
“எப்பவும் டீதான்.. ஒரு சேஞ்சுக்கு காபி குடிக்கிறேன் கொடுங்க,,”
இருவரும் காபி உறிஞ்சினர். “அய்நூறு கிமீ பாய்ந்து பறந்து வருவதற்கு என்ன
காரணம் கப்பல்?”
“புரியாதமாதிரி நடிக்காதிங்க… பத்துநாளா என் காலைவணக்கம் இரவு
வணக்கத்துக்கு நீங்க பதில் காலைவணக்கம் இரவு வணக்கம் போடல. என்னமோ
ஏதோன்னு பயந்து போய் ஓடி வந்திருக்கேன்!”
“இதென்ன லவ்வர்ஸ் மாதிரி குட்மார்னிங் குட்நைட் போட்டு குசலம்
விசாரிக்கிறது.? அதான் பதில் வணக்கங்கள் போடாம இருந்துட்டேன்! அது தவிர ஒரு நாளைக்கி இரண்டு மணி நேரம்தான் முகநூல்ல இருக்கனும் போனை
உபயோகிக்கனும்னு முடிவு பண்ணிருக்கேன்”

“சீனியர்! நாம லவ்லர்ஸ்க்கு மேல. நாம தினம் உயிரோட
இருக்குரோம்ன்றதை சகநண்பருக்கு தெரிவிச்சு நண்பர் உயிரோடு இருக்கிறதை பதில்
வணக்கம் மூலம் அறிஞ்சு… இது சீனியர் சிட்டிசன்களின் கோட்வேர்டு நலவிசாரிப்பு.
உங்களுக்கு ஒண்ணுனா நான் தாங்க மாட்டேன்…” அழுதார் பரிமேலழகர்.
“ஓ இப்படி ஒரு காரணம் இருக்கா? இனிநான் உயிரோட இருக்ற கடைசி
நிமிஷம் வரைக்கும் நலவிசாரிப்புக்கு நலவிசாரிப்பு அனுப்ச்சுகிட்டே இருப்பேன்!”
இருவரும் கட்டியணைத்து கொண்டனர்.
பரிமேலழகரின் திறன்பேசி சிணுங்கியது.
உள்டப்பியில் எத்திராஜன் ‘காலைவணக்கம் கப்பல்காரரே’ செய்தி அனுப்பி
இருந்தார்.
பதிலுக்கு பரிமேலழகர் ‘காலை வணக்கம் சீனியர்!’ என்றார்.
இரு முதுமைகள் நட்பு பாராட்டும் போது மனிதநேயம் மகுடம் சூடிக் கொண்டு
புன்னகைத்தது.