தொடர்கள்
வலையங்கம்
ஜனநாயக சோகம்

20230224182141466.jpg

கடந்த 10, 20 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் மசோதாக்கள் நிதிநிலை அறிக்கைகள் மீது முழுமையான விவாதங்கள் நடப்பதில்லை ஆண்டுதோறும் பாராளுமன்றம் கூடும் நாட்களும் குறைந்து கொண்டு வருகின்றன. அப்படி கூடிய நாட்களிலும் முழுமையான விவாதம் நடப்பதாக தெரியவில்லை ஏதோ கூடினோம் கலைந்தோம் என்ற அளவில் தான் உறுப்பினர்களின் செயல்பாடு இருக்கிறது.

பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கும். ஆனால், இப்போது அந்தப் பணியை ஆளுங்கட்சியே எடுத்துக் கொண்டு விட்டது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளி செய்து பாராளுமன்றத்தை முடக்குகிறார்கள். அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று எதிர்க்கட்சிகள் அவையே நடத்த விடாமல் முடக்குகின்றன. நிதிநிலை அறிக்கை சம்பந்தப்பட்ட விவாதமே நடத்தப்படாமல் ஏழு நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிப் போய் இருக்கிறது. குறிப்பாக நிதிநிலை அறிக்கை இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், அதற்கான முழுமையான விவாதம் நடைபெறும் என்பது சந்தேகமே எனவே விவாதம் எதுவும் இல்லாமல் கடைசி நிமிடத்தில் குரல் ஓட்டு மூலம் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும். இப்போது இருக்கும் நிலைமையில் அதுதான் சாத்தியம் போல் தெரிகிறது. இப்படி பல மசோதாக்கள் எந்த விவாதம் இல்லாமல் அவசர கதியில் தான் நிறைவேற்றப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாராளுமன்ற அலுவலக குறிப்பு தெரிவிக்கிறது.

மக்களவை மாநிலங்களவை ஒரு நிமிட நடவடிக்கைக்கு மூன்றரை கோடி ரூபாய் செலவாகிறது என்று ஒருமுறை நாடாளுமன்ற சபாநாயகர் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்கப்படும் போது தனது ஆதங்கத்தை சொல்லி பதிவு செய்திருந்தார். இது மக்கள் வரிப்பணம் என்பதை தொகுதி மக்களிடம் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று வாக்குறுதிகளை வாரி வழங்கி தேர்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. பாராளுமன்ற முடக்கம் என்பது சரியான ஜனநாயக நடவடிக்கை அல்ல என்பதை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டுமே தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஜனநாயக சோகம்.