தொடர்கள்
கதை
கைலாசமும், நித்யாவும் - சத்யபாமா ஒப்பிலி 

20230224184104189.jpeg

"இங்க பாரு! என்னாலல்லாம் கைலாசத்துக்கு வர முடியாது" தன் காதில்விழுந்தது உண்மைதானா என்று நம்ப முடியாமல் சொன்னான் ஆனந்த்.

" நான் எங்க சமிதி கிட்ட பேசிட்டேன். அவங்க எல்லாம் ரெடி பண்ணிடுவாங்க. நாம போனா போதும்." தெளிவாகக் கூறினாள் நித்யா.

" உனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சு. அப்படின்னு ஒரு இடமே கிடையாது. எஸ். வி. சேகர் படத்துல சவுதி ன்னு சொல்லிட்டு, கொச்சின்ல கொண்டு போய் விடுவாங்க இல்ல. அது மாதிரி ஆகப்போகுது."

" உங்களுக்கு பகவான் மேல நம்பிக்கை கிடையாது. எனக்கு உண்டு. பேசாம என் கூட வாங்க."

" எப்படி போக முடியும், இல்லாத ஊருக்கு?"

"ஐ நா லயே கலந்துக்கராங்க! ஊரே இல்லையாம்!

" இங்க பாரு! என் வாய கிளராதே! நான் வர முடியாது"

"அப்போ சரி. நான் மட்டும் போறேன்"

" அய்யோ! தனியா உன்னல்லாம் அனுப்ப முடியாது"

" தெரியுது இல்ல. அப்ப வாங்க!"

" ஏண்டி கொடும படுத்தற?. எனக்கு லீவ் கிடையாது"

" ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ் தானே! நான் லீவ் சொல்லிட்டேன்"

" ரெண்டு பேருக்குமா?" எப்படி கிடைச்சது?

" உங்களுக்கு பைல்ஸ் ன்னு சொன்னேன்"

"அடிப்பாவி. அதான் மேனேஜர் என்ன பாவமா பாத்தானா?! ஏன் வெற எதாவது சொல்லி தொலைக்க வேண்டியது தானே!"

" ஏதோ! சொல்லிட்டேன் விடுங்க! நாளைக்கு கிளம்பனும். ரெண்டு மூணு வேஷ்டி துண்டு மட்டும் எடுத்துக்கோங்க! போட்டுட்டு போற சட்டை போதும்"

"ஏன்? அங்க திருட்டுப் பயம் ஜாஸ்தியாமா?"

" பகவான் சந்நிதானத்தில் யாரு திருடப்போறா? அங்க போனா அவங்க குடுக்கற டிரஸ் போட்டுக்கணும். "

"ம்ம். இது யாரு சொன்னா? "

" அங்க தான் சமிதில!"

" எனக்கென்னவோ ஒன்னும் சரியா படல!"

" நாளை பாதி ராத்திரி நம்மள கூட்டிட்டு போக ஹெலிகாப்டர் வருமாம்"

" பாதி ராத்திரியா"

" ஆமாம். பகவான் குறித்துக் கொடுத்த நேரம்."

" அய்யோ அய்யோ! உன்ன யாரோ பயங்கரமா கலாய்கிறாங்க! நான் சொல்றத கொஞ்சம் கேளு!"

" போய் தூங்குங்க. நாளைக்கு வேலை நிறைய இருக்கு"

" கடவுளே! நாளைக்கு சாதாரண பொழுதா விடியணும். தன்னை அறியாமல் கடவுளிடம் வேண்டிக்கொண்டான் ஆனந்த் "

ஆனந்த், நித்யா கணவன் மனைவியர். நித்யாவிற்கு சில காலமாக கைலாசத்துக்கு போக வேண்டும் என்ற ஆசை. நித்யானந்தா மீது பக்தி இருந்தாலும், தனியாபோகும் அளவிற்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. அங்கே இங்கே பேசி கைலாசத்திற்கு போக எல்லா ஏற்பாடும் செய்து விட்டாள்.

ஆனந்திற்கு ஒரே கனவாக வந்தது. ஹெலிபாட் இல்லாததால், நூல் ஏணி பிடித்து மேலே ஏறினார்கள். உள்ளே நுழைந்ததுமே ஏதோ ஒரு பானம் கொடுத்தார்கள். தயங்கியபடியே ஆனந்த் வாங்கிக்கொள்ள, நித்யா, பயபக்தியுடன் வாங்கி உதட்டில் படாமல் அருந்தினாள். அவனைப்பார்த்து "பிரசாதம்" என்று சிரித்தாள். பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் ஆடைகள் மாறி, அலங்கார பூஷணையாய் நின்றாள். “அவருக்கு இப்படித்தான் பிடிக்குமாம். நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள்”, என்று ஒரு மரஉரியும், கையில் சூலமும் குடுத்தாள். அந்த சூலம் திடீரென்று பேச ஆரம்பித்தது. " “எதிர் வினை என்பது, தன் வினையை எதிர்த்து நிற்பது. வினையை வினையால் வென்றால், தன் வினையும், எதிர் வினையும் நீதான் என்று உனக்குப் புரியும்”. சொல்லிக்கொண்டே அந்த சூலம், மனேஜராய் மாறி முன்னால் நின்றது. " டேய், பைல்ஸ் ன்னு சொன்ன, இப்போ ஜாலியா எங்க போற? உனக்கு இனிமே டெய்லி நைட் ஷிப்ட் தான். சொல்லிவிட்டு அவர் மறுபடியும் சூலமாய் மாற, அது" டே அண்ட் நைட் ஆர் தி எக்ஸ்டென்ஷன் ஆப் ஹியூமன் பெர்ஸப்ஷன். ஃப் யு இன்டெர்னலைஸ் தி நைட் யு வில் பிகம் ஒன் வித் யூனிவெர்ஸ் என்று நித்யானித்துக்கொண்டிருந்தது. தலைக்குள் சூலமும், மேனேஜரும், அலங்காரமான மனைவியும் வந்து வந்து போக, யூனிவெர்ஸ் யூனிவெர்ஸ் யூனிவெர்ஸ் என்று நால்வர் காதில் வந்து கத்த, திடுக்கிட்டு எழுந்தான் ஆனந்த். உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. அருகில் மனைவி தூங்கி கொண்டிருப்பதை பார்த்ததும், அப்பாடிஎன்று இருந்தது. மெதுவாக எழுந்து நித்யாவின் கைபேசியை எடுத்தான். வாட்ஸப்மேய்ந்து, கைலாச நபரை கண்டு பிடித்தான். நித்யா சொன்னது போல் அவர்கள் நாளை இரவு வந்து அழைத்துக்கொண்டு போவார்கள் என்று எழுதி இருந்தது.

சற்று நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்திவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய், தன் கைபேசியை எடுத்து, தன் நண்பன் மகேஷை அழைத்தான். அவன் அந்த பக்கம் போன் எடுத்ததும்,

" நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும்". என்று எந்த வித முன் கதையும் இல்லாமல் ஆரம்பித்தான்.

"உன் பைல்ஸ் தானே. கவலை படாதே. ஆபீஸ்ல பணம் வாங்கிடலாம்" என்றான் மகேஷ்

" டேய், நீ மட்டும் இப்ப நேர்ல இருந்தேனா ஒரு கொலையே விழுந்திருக்கும். நான் சொல்றத மட்டும் கேளு."

அவன் குரலில் இருந்த பதட்டத்தை பார்த்து,

"சாரி. சொல்லு" என்றான்.

"நான் இப்போ ஒரு இமேஜ் ஷேர் பண்றேன். அத உன் டிபி யா மாத்திக்க. நான் ஒரு மெசேஜ் அனுப்பறேன். அத காப்பி பண்ணி நான் குடுக்கற நம்பருக்கு அனுப்பிடு. "

பேசிக்கொண்டே படம் அனுப்பியிருந்தான் ஆனந்த்.

மகேஷ் அதைப்பார்த்து திடுக்கிட்டு, " டேய், இதென்ன நித்யானந்தா படம், உனக்கென்ன ஆச்சு?. என்று கேட்டான் "

"ம்ம். எல்லாம் நேர்ல பாக்கும் போது சொல்றேன். தயவு செஞ்சு நான் சொல்றத உடனே பண்ணு. நாளை காலை வரை டிபி மாத்தாதே." கெஞ்சினான் ஆனந்த்.

மகேஷிடம் பேசிக்கொண்டே தன் மனைவிக்கு அனுப்பவேண்டிய செய்தியை அவனுக்கு அனுப்பியிருந்தான்.

ஆனந்த் அனுப்பியிருந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்து போய் மகேஷ்,

"என்னடா மெசேஜ் இது! கைலாசம் ட்ரிப் கான்செல் ஆ! இது யாருக்கு அனுப்ப சொல்ற?”

"என் மனைவிக்கு. இப்போதைக்கு இது போறும். தயவு செஞ்சு உடனே நான் சொன்னத செய். இப்போவே அனுப்பு".

"ஆனந்தா, உனக்கு மற கழண்டுடுச்சி. அதுக்கு பதில் தான் டீசென்ட்ஆ உன் மனைவி பைல்ஸ் ன்னு சொன்னாங்களோ என்னவோ!

"தயவுசெஞ்சு உன்னோட வேற நம்பர்ல இருந்து மெசேஜ் அனுப்பு. அவளுக்கு உன் நம்பர் தெரியும்."

“ஆனந்த், நித்யா என்ன முட்டாளா! இப்படி எல்லாம் பண்ணினா நம்பறதுக்கு.!"

“நிச்சயமா இல்ல. அவ கில்லாடி கீரவட. பக்தி கொஞ்சம் கண்ண மறைக்கட்டுமேன்னு வேண்டிக்கிட்டு இருக்கேன்.” சோகமாகக் கூறினான்

நித்யாவிற்கு செய்தி வரும் வரை காத்திருந்தான். ஓசை எழுப்பாமல், அவளுடைய கைபேசியை அவளருகில் வைத்து விட்டுப் போய் படுத்துக்கொண்டான்.

"கடவுளே, உனக்குக் காவடி தூக்கறேன். என்ன காப்பாத்து" என்று வேண்டிக்கொண்டு தூங்க முயற்சி செய்தான்.

"ஆனந்த், ஆனந்த் இந்த மெசேஜ் பாருங்க," உலுக்கி அவனை எழுப்பினாள் நித்யா. கண் விழித்துப் பார்த்தான். விடிந்திருந்தது,

"என்ன ஆச்சு?"

" நம்ம கைலாசத்துக்கு போக முடியாது"

"அதான் தெரியுமே" தூக்கக் கலக்கத்தில் உளறினான்.

"உங்களுக்கு எப்படித் தெரியும்"

திடுக்கிட்டு தெளிவானான்.

"சாரி, ஏதோ உளறறேன். விடு! ஏன் போக முடியாது?"

" கைலாசத்துல இப்போ யாரையும் உள்ள விடறதில்லையாம். கொரோனா விதிமுறைகள் போல இருக்கு"

"ஓ! யாரு சொன்னா?"

"எனக்கு எப்போதும் மெசேஜ் பண்ணுவாரே அவர்தான்!"

"ஐயோ!"

" ஆனா! இன்னொரு நம்பர்ல இருந்து ஏதோ மெசேஜ் வந்திருக்கு"

"அது என்ன?"

"கைலாசம் பயணம் கேன்சல். லீவு கேன்சல் பண்ணிட்டு வேலைக்கு போங்க ன்னு"

"அடப்பாவி! தலையில் அடித்துக்கொள்ள கையை உயர்த்தியவன் நித்யா பார்த்ததும், சமாளித்து தலையை கோதிக்கொண்டான்."

அது யாராக இருக்கும் என்று நித்யா யோசித்துக்கொண்டே உள்ளே செல்ல, ஆனந்த் வேகமாக தன் கைபேசியை எடுத்து மகேஷை அழைத்தான்.

"என்னடா! எப்படி? மெசேஜ் பாத்தயா?", பெருமையுடன் கேட்டான் மகேஷ்.

"அதி புத்திசாலி! உன்ன நினைச்சா பெருமையா இருக்கு. நித்யா கூப்பிடுவா, சமாளி". பற்களைக் கடித்துக்கொண்டே மெதுவாக பேசினான் ஆனந்த்.

நித்யா மறுபடியும் உள்ளே இருந்து வந்து அவனிடம்,"திருப்பதி மாதிரி, இங்கயும் அவர் கூப்பிட்டாதான் போக முடியும். இன்னொரு நம்பர்ல இருந்து வந்த மெசேஜ், பகவான்தான்னு நினைக்கிறேன். கடமையை செய்யுன்னு சொல்றார். வேலைக்குப் போயிடலாம்."

"எனக்கு பைல்ஸ்ன்னு சொல்லியிருக்கயே!"

" பகவான் அருளால, ஒரு மெடிக்கல் மிரகிள்ல உங்களுக்கு குணமாயிடுச்சுன்னு சொல்லிடுவேன்."

ஓ! அது எப்படி நடந்தது.? யாரவது கேட்டா ஒரே கதையை சொல்லணுமே”

சற்று யோசித்தாள். பின்னர் கேட்டுக்கோங்க என்று சொல்லி, "எனக்கு கனவு வந்தது. அதில் அவர் வந்து உங்க மேல நின்னு டான்ஸ் ஆடறார். மறுநாள் போய் டாக்டர் கிட்ட கேட்டா, ஒரு ஆப்பரேஷனும்வேண்டாம்னு சொல்லிட்டார்.

"டான்ஸ் ஆடறாரா?"

"ஆமாம் சூலத்தோட!"

"கடவுளே!"

ஆனந்துக்கு தன் கனவு நினைவுக்கு வந்தது. பின்னர் சுதாரித்துக்கொண்டு.

“என்னவோ பண்ணு. இப்போ ஆள விடு. ஒரு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வேலைக்கு போகலாம்.”

அங்கே மாட்டியிருந்த முருகன் படத்தைப் பார்த்து,

“சரி சரி. கட்டாயமா மே மாசம் காவடி!".

போர்வையை போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தான்.