தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஐ.பி.எல் பார்ப்பது நேர விரயம் - மஹாத்ரியா ரா - ராம்

20230225075055419.jpg

அனுபவங்கள் கற்றுத் தரும் பாடம் அலாதியானது.

அதிலும் வயது ஒரு பொருட்டில்லாமல் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனமிருந்தால் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நமக்கு ஒரு செய்தி காத்துக் கொண்டிருக்கும்.

மஹாத்ரியா ரா என்று அழைக்கப்படும் இவரை பல முறை யூ டியூப் வீடியோக்களில் கடந்த பத்து வருடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்திருக்கிறேன். ஆனால் திஸ் அண்ட் தட் (இதுவும் அதுவும் என்று தமிழில் சொன்னால் அதன் உட்பொருள் கொஞ்சம் சிதிலமடைகிறது.) என்ற நிகழ்ச்சியில் அதாவது அவர் நேரடியாக நம்முடன் ஜூமில் லைவ்வாக உரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று சில மாதங்கள் முன்பு வரை கூட உத்தேசமேயில்லை.

என்னுடைய மராத்தான் குரு தம்பதியாக அவரை பல வருடங்களாக தொடர்ந்து வருபவர்கள். திஸ் அண்ட் தட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்தது ஒரு நிமிட உந்துதல் அல்ல. திட்டமிட்ட முடிவு தான்.

காரணம் நிச்சயம் கட்டணமல்ல. அதன் சட்ட திட்டங்கள். ஜூமில் தான் நிகழ்ச்சி நடக்கிறது. மஹாத்ரியா மட்டும் தான் பேசுகிறார். அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டாலும் எல்லோரும் மியூட்டில் தான் இருக்க வேண்டும். வீடியோ ஆன் ஆகி இருக்க வேண்டும். இரண்டு மணி நேரங்கள் அப்படி இப்படி அசையக் கூடாது. ஒரு 5 நிமிடம் இடைவேளை உண்டு. உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கைபேசி உபயோகிக்கக் கூடாது. யாரிடனும் பேசக் கூடாது. தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. இப்படி பல கூடாதுகள்.

நம்மால் தொடர்ந்து சினிமாவில் கூட இப்படி உட்கார முடியாதே எப்படி இது சாத்தியம் என்பது தான் சிக்கல். ஆனால் கடந்த 12 வகுப்புகளாக உட்கார்ந்து முடித்தது ஆச்சரியம் தான்.

யூடியூபில் மஹாத்ரியா பேசுவது ஏராளமாக இருக்கிறது. ஆயிரம் வீடியோக்களுக்கு மேல் இருக்கும்.

ஆனால் அதில் சட்ட திட்டங்கள் இல்லாமல் ஒழுங்குமுறைகள் இல்லாமல் எந்த நிலையிலும் நம்மால் கேட்க முடியும் என்பது இந்த ஜூம் அனுபவத்திற்கு ஈடாகாது.

20230225075159229.jpg

சுருக்கமாக திஸ் அண்ட் தட் நிகழ்ச்சி நம் வாழ்க்கையை மாற்றும். நாம் மாற விரும்பினால். அதற்கு தயாராக இருந்தால். இல்லையெனில் அது இன்னொரு நிகழ்ச்சி நம் வாழ்வில். அவ்வளவு தான்.

முழு அனுபவத்தையும் இங்கு எழுதும் உத்தேசம் இல்லை. அடுத்த வாரம் முதல் ஐ.பி.எல். துவங்குகிறது என்பதால் மஹாத்ரியா ஐ.பி.எல்.ஐ பற்றி சொன்னது மட்டுமே இந்த திஸ் அண்ட் தட்டில் இருந்து சொல்வதாக உத்தேசம். அது கூட ஒரு வேளை உங்கள் வீட்டில் இந்த வருடம் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் இருந்தால் நீங்கள் இதை தப்பித் தவறி படிக்க நேர்ந்தால் இதை அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் தான்.

அதற்கு முன் இன்ஃபினிதீயிசம் என்ற மஹாத்ரியாவின் சில கோட்பாடுகளில் ஒரு ஒரு சிலவற்றை சொல்ல ஆசை.

என்னுடைய வாழ்க்கை என்னுடைய பொறுப்பு.

வளர்ச்சி என்பதற்கு மாற்றம் என்பது இன்றியமையாதது. மாற்றங்கள் எப்போதுமே அயர்ச்சியானவை.

நம் நம்பிக்கைகள் தான் நம் பயணத்தை தீர்மானிக்கிறது.

நம் ஆசைகள் நமக்கு உரித்தானவையாக மாறுவதற்கு நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொண்டு அறிவார்ந்த தொடர் முயற்சிகளால் மட்டுமே சாத்தியம்.

மாற்ற முடியாதவைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாற்றக் கூடியவைகளை மாற்ற வேண்டும். ஏற்றுக் கொள்ள முடியாதவைகளிலிருந்து விலக வேண்டும்.

இன்னும் பல கோட்பாடுகள். அத்தனையும் வரிசைப் படுத்த வேண்டியதில்லை.

அவர் 12 வகுப்புகளில் சொல்லி முடித்தது இன்னமும் மனதிற்குள் ஜீரணமாகவில்லை. புரிந்தது கொஞ்சம் தான். புரிய வேண்டியது இன்னமும் நிறைய.....

இன்ஃபினிதீயிசம் வலைதளத்தில் மேல்விபரங்கள்.

அடுத்த முறை இது போன்ற நிகழ்ச்சிகளை அவர்கள் அறிவித்தால் இணைந்து பயன் பெறுங்கள் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். ஏனெனில் அவருக்கு விளம்பரம் செய்வதும் பிடிக்காது. உங்களை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள் எனக்கு விற்பனைப் பிரதிநிதியாக இருக்க தேவையில்லை என்று திட்டவட்டமாக சொல்கிறார். இருந்தாலும் விகடகவியில் அனுபவத்தை எழுதா விட்டால் எனக்கு தூக்கம் வர வேண்டாமா ?

சரி ஐ.பி. எல் என்பதை பற்றி மஹாத்ரியா என்ன சொன்னார் ??

வரும் 31ந்தேதி முதல் ஐ.பி.எல் துவங்குகிறது.

அதைச் சுற்றி ஒரு 45 நாட்கள் நம் வாழ்க்கையில் கழிந்து விடும். விராட் கோலியும் தோனியும் எட்டு மணி நேரங்கள் விளையாடுகிறார்கள் என்றால் அவர்கள் 17 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள். தோனி ஒரு 20 கோடி சம்பாதிப்பார்.

அதைத் தவிர விளம்பரங்கள் மட்டுமே நூறு கோடி ரூபாய் சம்பாதிப்பார்கள். நீங்கள் ??

ஒரு நாளைக்கு நான்கைந்து மணி நேரங்கள் மனித யத்தனத்தை தொலைத்து, உங்கள் பொன்னான நேரத்தை தொலைத்து இந்த ஐ.பி.எல் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் உங்கள் நேரத்தை யார் திரும்பக் கொடுப்பார்கள்.

நீங்கள் இழந்த நேரத்தின் மதிப்பு என்ன தெரியுமா ???

ஒரு வேளை தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்றால் கவனச்சிதறலால் உங்களுக்கு 20 மார்க் குறைந்தால் ஒரு நல்ல காலேஜில் சேர்வதற்கு பதில் கொஞ்சம் சுமாரான காலேஜில் சேர வேண்டி வரும்.

இந்த ஐ.பி.எல். உங்களுக்கு சோறு போடுமா ?? பொழுது போக்கு என்பது அத்தியாவசியம். தேவை தான். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு வாரத்திற்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் என்று வைத்துக் கொள்ளலாம்.

எட்டு மணி நேரம் ஒரு நாளைக்கு கிரிக்கெட் பார்ப்பீர்கள் என்றால் அது எவ்வளவு நேர விரயம் ??

மனிதகுலத்தின் நேரங்கள் தொலைக்காட்சி பெட்டிகளின் முன் வீணாவது உண்மையிலேயே கவலை அளிக்கிறது. எத்தனை மகத்தான விஷயங்களை உங்களால் செய்ய முடியும் அந்த நேரத்தில் என்று யோசித்தால் இப்படி நேர விரயத்தை செய்வதை தடுக்கலாம்.

இப்படி மஹாத்ரியா சொல்லவில்லை என்றால் ஐ.பி.எல். நேர விரயம் என்பது எங்களுக்குத் தெரியாதா என்று சிலர் கேட்கலாம்.

தெரியும் தான். ஆனாலும் மஹாத்ரியா போல 28 வருடங்களாக வாழ்க்கை முறை பற்றி பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியர் சொல்வதற்கும் அடுப்பங்கரையில் வேலையோடு வேலையாக அம்மா இரைந்து டிவி ஆஃப் பண்ணிட்டு போய் படிடா என்று கத்துவதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.

மஹாத்ரியா சொல்லி என்னால் மாற்ற முடிந்த ஒரு சின்ன விஷயம் காலையில் அலாரம் ஐந்தரை மணிக்கு வைத்து விட்டு, அது அடித்ததும் இன்னும் ஒரு பதினைந்து நிமிடம் தூங்கலாமே என்ற ஸ்ணூஸ் பட்டனை அழுத்தி விட்டு தூங்கும் பழக்கத்தை விட்டது தான்.

காலையில் அலாரம் வைத்துக் கொள்வது நீதான். அதை எழுந்து இன்னும் பதினைந்து நிமிடம் தள்ளி வைத்து விட்டு திரும்பவும் தூங்குவது உனக்கு நீயே வைத்துக் கொள்ளும் ஒரு பரீட்சையில் காலங்காலையில் தோல்வியை ஏற்றுக் கொள்வது போலத் தானே ??

எனக்காகவே அவர் சொன்னது போல இருந்தது.

அன்றைய முதல் வகுப்பில் இருந்து ஐந்தரை மணிக்கு அலாரம் அடித்தால் ஐந்தரை மணிக்கு எழும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது தான் முதல் மாற்றம்.

இன்னும் பல மாற்றங்கள்.

அவர் சொல்லும் இன்னொரு முக்கிய விஷயம் உடற்பயிற்சி. இறைவன் இருக்கும் கோவிலை சுத்தமாக வைத்திருப்பது போல இறை உணர்வு இருக்கும் அனைவரும் நம் உடலை கோவில் போல சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சிகரெட் தண்ணி ஹூஹூம்.

அசுத்தமாக இருக்கும் ஒரு கழிவறையை கூட நாம் உபயோகிக்க யோசிக்கும் போது நம் உடலை அசுத்தமாக வைத்திருந்தால் இறைவன் எப்படி வருவான் ??

மேலும் உடற்பயிற்சி செய்யாமல் நாம் உண்ணும் உணவு சுயமரியாதையின்றி வெட்கமில்லாமல் நாம் உண்பதற்கு சமம் என்று அவர் சொல்லும் போது நமக்கு முன்னே பேசுவது அவரல்ல நாமே தான்.

மஹாத்ரியா சமயப் பிரச்சாரகர் அல்ல. எந்த மதத்தையும் அவர் போதிப்பதோ அல்லது பரிந்துரையோ செய்வதல்ல. ஆனால் மார்க்கம் எதுவானாலும் இறை நம்பிக்கை என்பதை ஆழமாக புரிய வைப்பவர். நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை அசைக்க முடியாத நம்பிக்கையாக பதிய வைப்பவர்.

நம் உறவுகளை சின்ன சின்ன மாற்றங்களின் மூலம் உறுதியாக்குபவர். நம் கவலைகளை கலைத்துப் போடுபவர். நம் குறைகளை நிறைகளாக்குபவர்.

என்னைப் பொறுத்தவரை மஹாத்ரியாவைப் பற்றி அறியாதவர்கள் பல கேள்வி கேட்கின்றனர். (அவரைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் வலைதளத்தில் இருக்கிறது. கீழே வீடியோ பேட்டியிலும்)

அவர் சாமியாரா ?? இல்லை.

இந்து மதத்தை பரப்புகிறாரா ?? இல்லை.

கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமா ?? இல்லை.

உலக ஆசைகளிலிருந்து விலக வேண்டும் என்கிறாரா ?? நிச்சயம் இல்லை.

பெரிய மஹான் என்று சொல்லிக் கொள்கிறாரா ?? இல்லவே இல்லை.

பின்னே யார் அவர் ??

அவர் வாழ்க்கையை போதிக்கும் ஒரு ஆசிரியர்.

ஆனால், நம்மை விமர்சிக்கும், நம்மைப் பற்றி புரிந்து கொண்டு நமக்குத் தேவையான மாற்றங்களை அறிவுறுத்தும், நம் பலவீனங்களை தெரிந்து கொண்டு வழிகாட்டும், மனசாட்சி தான் மஹாத்ரியா என்று எடுத்துக் கொண்டால், மாற்றங்கள் மேலும் எளிதில் சாத்தியப்படும்.

அவர் ஆசைப்படுவது போல, நம் வாழ்க்கையின் வளர்ச்சி உறுதி.

பல வருடங்களுக்கு முன் அவர் தமிழில் அளித்த பேட்டி இங்கே.......அவரது தற்போதைய நிகழ்ச்சிகள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடக்கிறது.