தொடர்கள்
வலையங்கம்
வரவேற்போம்...!

மத்திய அரசு வேலை... இனி தமிழில் தேர்வு...

20230321174857943.jpg

சி ஆர் பி எப் ஆள்சேர்ப்புக்கான தேர்வு இந்தி மட்டும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படுகிறது. இது காலம் காலமாக நடக்கும் ஒரு நடைமுறை சமீபத்தில் இந்த தேர்வு பற்றி சுட்டிக்காட்டி தமிழிலும் நடத்த வாய்ப்பு தாருங்கள் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகம் தமிழ் உள்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வை நடத்த முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. இந்த முடிவை பிரதமர் முதல்வர் ஆகியோர் வரவேற்றனர்.

இந்தியாவின் மாநிலங்கள் என்பது மொழிவாரியாக அடையாளப்படுத்தப்பட்டு தான் பிரிக்கப்பட்டது. ஆனால் மத்தியில ஆள்பவர்கள் ஹிந்தி மீது உள்ள மோகத்தால் எல்லா தேர்வுகளையும் இந்தி மட்டும் ஆங்கிலத்தில் தான் நடத்தி வந்தார்கள். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற கதையாகத்தான் இது இருந்தது. இப்போது crpf தேர்வு மட்டுமின்றி அனைத்து மத்திய அரசு தேர்வுகளும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என்ற ஒரு உத்திரவாதத்தையும் மத்திய அரசு தந்திருக்கிறது. தவிர பல்கலைக்கழக மானிய குழு இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு உள்ளூர் மொழியில் தேர்வுகள் நடத்த அறிவுறுத்தி இருக்கிறது. இவையெல்லாம் நல்ல ஆரம்பம் தான். ஆனால் மாநில உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது என்ற உறுத்தல் நமக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். இந்தி திணிப்பு என்பது காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது என்பது திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட தனது இந்தி மொழி பாசத்தை அடிக்கடி சொல்லி வந்தாலும் மாநில மொழி முக்கியத்துவம் பற்றியும் சில சமயம் அவர் கருத்து சொல்லி இருக்கிறார்.அவர் சார்ந்த உள்துறை அமைச்சகம் இப்போது இந்தியாவில் 13 மொழிகளில் தங்கள் துறை சார்ந்த தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தேர்வு விஷயத்தில் மத்திய அரசு நம்மீது கரிசனம் காட்டி இருக்கிறது அதை நாம் வரவேற்போம்.