தொடர்கள்
அரசியல்
மூவாயிரம் இரவுகள்.....பாரசீக மண்ணில் !! - மரியா சிவானந்தம்

இது சுவாரஸ்யமான ஆயிரத்தொன்று அரேபிய இரவுகள் கதையல்ல. வேற்று மண்ணில் அரசாங்கத்திற்கிடையேயான புகைச்சலில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரக் கதை.

20230822105850789.jpg

செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பது போன்ற துன்பம் வேறொன்று இல்லை . அதுவும் அயல்நாட்டில், முகம் தெரிய ஊரில் அரசியல் கைதியாக, பிணைக் கைதியாக சிறையில் அடைக்கப் படுவது பெருந்துயரம் . ஈரான் என்று நாமகரணம் பூண்ட பாரசீக மண்ணில் மூவாயிரம் இரவுகள் , இன்னும் சரியாக சொல்வதானால் 2898 இரவுகளைச் சிறையில் கழித்த சியமச் நமாசி அமெரிக்காவின் பொறியாளர். இனி சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பார் .அவருடன் ஈரான் ஏவின் சிறையில் இருந்த மேலும் நான்கு அமெரிக்க அரசியல் கைதிகளும் இப்போது விடுவிக்கப் பட்டுள்ளார்கள்.

20230822105938374.jpg

இந்த வார துவக்கத்தில் ஈரானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டு , ஈரானுக்கு அனுப்பப்பட்டார்கள். கத்தாரின் அமெரிக்க தூதர் டிம்மி நேவிஸ் அவர்களை நேரில் சென்று வரவேற்றார்.

சியமச் நமாசி 2015 ஆம் ஆண்டுஅரசியல் கைதியாக குற்றம் சாட்டப்பட்டு பத்தாண்டு சிறைத் தண்டனை பெற்றவர். அவரை விடுவிக்க முயற்சி எடுத்த அவர் தந்தை பக்கீர் நமாசி சிறையில் இருந்து விதடை செய்யப்பட்டார் ஈரான் சென்றபோது அவரும் கைதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . ஓராண்டுக்குப் பின் அவர் விடுதலை செய்யப்பட்டாலும் , ஈரானில் இருந்து வெளியேற முடியாமல் தடை விதிக்கப்பட்டது .

20230822110014335.jpg

2018 ஆம் ஆண்டில் மொரட் தபாஸ் என்னும் சுற்றுச் சூழல் ஆர்வலர் தன் நண்பர்களுடன் ஆசிய சிறுத்தைகளைப் பற்றி ஆரய்ச்சி செய்ய ஈரான் வந்தார் .அவர் பாரசீக வனவிலங்கு பாரம்பரிய நிறுவனத்தின் (Persian Wildlife Heritage Foundation) உறுப்பினர். அவருடன் வந்த எட்டுப் பேரும் ஈரானில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்ததாக பத்தாண்டு சிறைத்தண்டனை பெற்றார்கள். கொடுஞ்சிறையில் மொரட் ,உடல் நலம் குன்றி கொடுமை அனுபவித்த போது, பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) தலையிட்டு அவர்களை விடுவிக்க கோரியது. ஆனால் இப்போதுதான் அவருக்கு விடிவுகாலம் பிறந்தது .

20230822110049680.jpg

இமாட் ஸர்ஜி இரட்டை குடியுரிமை பெற்ற அமெரிக்க வணிகர் . ஈரானிலும் குடியிருக்க தகுதி பெற்றவர் .இவர் தன் மனைவியுடன் 2018 ஆம் ஆண்டில் இங்கு சுற்றுப்பயணம் செய்ய வந்தார். இருவரையும் அமெரிக்க உளவாளியாக சந்தேகப்பட்டு , டெஹ்ரான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் . இமாட் சர்ஜிக்கு பத்தாண்டு சிறைக்காவல் கிடைத்தது . இவருடைய விடுதலைக்காக இவரது மகள்களும் ,சகோதரியும் அமெரிக்க அரசிடம் பலமுறை முறையீடு செய்தனர். போராட்டங்களை நடத்தினர். இப்போது இறுதியில் நீதி வென்றது ,தாமதமாக.

20230822110510426.jpg

மூவரும் ஈரானில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்தாக குற்றம் சாற்றப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் .மற்ற இருவர் பிற குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவிப்பவர்கள். அரசியல் கைதிகள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டுமென்று உலக சட்டங்கள் சொல்கின்றன .ஆனால் உண்மையில் அவர்கள் பெரும் கொடுமைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.விசாரணை என்ற பெயரில் அவர்களைக் கொடுமைப்படுத்துவதும் , பல ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து மன உளைச்சலிலும் ,உடல் உபாதையிலும் மரித்துப் போவர்கள் பலர். இப்போது இந்த விடுதலை ஒரு ஆசுவாச பெருமூச்சைத் தருகிறது /

அமேரிக்கா ஈரான் இரு நாடுகளும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் பேரில் ஈரான் இவர்களை விடுதலை செய்திருக்கிறது . இந்த விடுதலைக்கு பரிசாக , ஏற்கனவே நிலவி வரும் பொருளாதார தடையால் தென்கொரியாவில் அமெரிக்கா முடக்கி வைத்திருந்த ஈரானின் ஆறு பில்லியன் டாலர் பணத்தை அமேரிக்கா விடுத்துள்ளது. அத்துடன் அமெரிக்க சிறையில் இருக்கும் ஐந்து ஈரானிய கைதிகளை அமெரிக்கா விடுவிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் உறவு பதட்டம் நிறைந்த உறவு என்று உலகமே அறியும். இன்று , நேற்றல்ல நூற்றாண்டு கால பகை இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகிறது. 1980 இல் இருந்து இந்த அரசியல் பகை இன்னும் இறுக்கமாகி உள்ளது. கொமேனி காலத்தில் இருந்தே அமெரிக்காவுக்கும் , ஈரானுக்கும் சுமுக உறவு நிலவவில்லை. ஈரானுக்கு பாகிஸ்தானும் , பாகிஸ்தானுக்கு ஈரானும் ஒருவருக்கொருவர் நேசத்துடன் உதவிகளை செய்வது உலகம் அறியும் . அமெரிக்காவுக்கு ஸ்விட்சர்லாந்து நேசநாடு . எனவே ஈரானும் அமெரிக்காவும் பாகிஸ்தான் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் தூதரகங்கள் வழியாகவே பேச்சு வார்த்தைகளை நடத்துவது வழக்கம் .

ஈரானில் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதைத் தடுக்க அந்நாட்டின் மேல் பொருளாதார தடை விதித்தது.ஆனால் ஈரான் தொடர்ந்து தனது அணு சக்தி திட்டங்கள் ,அணு ஆயுத தயாரிப்புக்கு ஆனது இல்லை என்று சொன்னது . . 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஈரான் அதை உறுதி செய்வதாக அறிவித்தது .

அதற்கு பின்னர் ஒபாமா ஆட்சியில் அமேரிக்கா ஈரான் மேலிருந்த பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ள ஒப்பந்தம் போட்டது. ஆனால் அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த டொனால்ட் ட்ரம்ப் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து மேலும் தடைகளை இறுக்கினார். ஈரானும் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி வருவதாக செய்திகள் வருகிறது. அரசியல் உறவு, வணிக பரிமாற்றம் இவை இரண்டுமே உலகமயமாக்கலின் முக்கிய அங்கங்கள். அவை இல்லாத போது பொருளாதார சரிவுகள் சாதாரணமாக நிகழ வாய்ப்பு உள்ளது

. இந்நிலையில் இந்த கைதிகள் பரிமாற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது. பல ஆண்டுகள் கொடுமையான சிறை வாசம் அனுபவித்தவர்கள் இப்போது பெறும் விடுதலை, இறந்துப் போனவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்ததுக்கு சமம். ஸ்யாமச் நமாசி சொல்வது போல , 'என் வாழ்க்கையின் சிறந்த பகுதியை நான் இழந்து விட்டேன்.ஒரு பிணைக்கைதியாக 2898 நான் கழித்த காலம் என் வாழ்க்கையில் திருடப்பட்ட காலமாகவே கழிந்தது . நானும் என் குடும்பமும் அனுபவித்த சித்திரவதைகளை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது . ஆனால் நிஜத்தில் பலர் இன்னும் இது போன்ற கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். " மரணத்தை விட கொடுமை அல்லவா இது ?

அமெரிக்கா இவர்களுக்கு பதிலாக விடுதலை செய்யவிருக்கும் ஐந்து இரானிய கைதிகளுக்கும் இவர்களைப் போலவே சொல்ல சோகக் கதைகள் உண்டு . கைதிகளை, குறிப்பாக அப்பாவி பிணைக் கைதிகளை உரிய மரியாதையுடன் நடத்த உலக நாடுகள் உறுதி ஏற்க வேண்டும் . ஐக்கிய நாடுகள் சபை,பன்னாட்டு நீதிமன்றம், பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற சர்வதேச அமைப்புகள் அவ்வப்போது உறுப்பினர் நாடுகளில் உள்ள பிணைக்கைதிகளின் நிலைமையை ஆராய்ந்து , அவர்களின் துயர் துடைக்க உதவி செய்ய வேண்டும்.